Wednesday, December 1, 2010

திரைப்படமான தமிழ் நாவல்கள்
சமீபத்திய படம் ஒன்று ஜப்பானிய மொழிப் படத்தின் தழுவல் என்று இணையத்தில் புலம்பாதார் இல்லை.வேற்று மொழி படங்களின் தழுவல்..புதிதாக இப்போது நடந்து விடவில்லை.எப்போதும் நடைபெறும் ஒன்றுதான் இது அவ்வப்போது அறிவுஜீவிகள் சிலர்..இந்தப் படத் தழுவல்..அந்தப் படத் தழுவல் என தன் மேதாவித் தனத்தைக் காட்டுவர்.நம்மவர்களும்..தனது படம் எந்தப் படத்தின் தழுவல் என போட்டுவிடலாம்.என்ன ஒன்று..அப்படி உரிமையைப் பெறாமல் போட்டுவிட்டால்..பின் அவன் நாம் முதுகில் ஏறி நஷ்டஈடாக பல ஆயிரம் டாலர்கள் கேட்டுவிடுவான். நாம் கண்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டால் அவனுக்கு நம் மொழிப் படம் பற்றி தெரியவாப் போகிறது.

இதைத் தவிர்க்கவே..முன்னர் தமிழ் நாவல்கள் அந்த உரிமையாளர்களிடம் இருந்து உரிமை பெற்று..அவர்கள் பெயரையும் தாங்கி படமாக வந்தது.தமிழில் இல்லாத நாவல்களா?

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..

பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்து..சக்கை போடு போட்ட படம் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார்.இதில் எம்.என்.நம்பியார் பல வேடங்கள் தாங்கி வருவார்.

பின்னர் கல்கியின் படைப்புகள் தியாக பூமி,கள்வனின் காதலி,பார்த்திபன் கனவு ஆகியவை திரைப்படங்களாக வந்தன.

தேவனின் 'கோமதியின் காதலன்' டி.ஆர்.ராமசந்திரன்,சாவித்திரி நடிக்க படமாக வந்தது.

போலீஸ்காரன் மகள்,பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்,நாலு வேலி


 நிலம் ஆகியவை பி.எஸ்.ராமையாவின் எழுத்துகள்.

விந்தன் எழுதிய 'பாலும் பாவையும்' கல்யாணியின் கணவன் என்ற பெயரில் படமாய் வந்தது.

அகிலனின் 'பாவை விளக்கு'குலமகள் ராதை' ஆகியவை வெள்ளித்திரையில் நம்மை மகிழ்வித்தவை.

உமாசந்திரன் எழுதிய பிரபல தொடர்'முள்ளும் மலரும்" மா பெரும் வெற்றியடைந்த திரைப்படமாகும்.

ஜெயகாந்தனின்'சில நேரங்களில் சில மனிதர்கள்'யாருக்காக அழுதான், உன்னைப் போல் ஒருவன் திரைப்படமாகியவை.உன்னைப் போல் ஒருவன் தேசிய விருது பெற்ற படம்.

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நீண்ட நாவல் 'தில்லானா மோகனம்பாள்' அதை அருமையான திரைக்கதையாக்கி திரையில் வடித்தவர் ஏ.பி.நாகராஜன்.

தி.ஜானகிராமனின் 'மோகமுள்' இந்திரா பார்த்தசாரதியின்'குருதிப் புனல்' நாவல்களே

லக்ஷ்மியின் 'பெண்மனம்' நாவல் கலைஞர் வசனத்தில் இருவர் உள்ளமாய் வந்தது.

வை.மு.கோதைநாயகியின் கதை 'சித்தி' என்னும் பெயரில் திரைப்படமானது

சுஜாதாவின், பிரியா..கரையெல்லாம் செண்பகப் பூ' போன்ற நாவல்கள் திரைப்படமாயின.

இதுபோல தமிழில் அருமையான நாவல்கள் பல உள்ளன..அவற்றை தேடி எடுத்து திரைப்படமாக்கினால்..வேற்று மொழி தழுவ படங்களைவிட சிறப்பான கதையம்சம் கிடைக்கும்..(உம்-நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்)
நான் மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் டைடில் கார்டில்..அந்தந்த எழுத்தாளர்களின் பெயர் வரும்.ஆகவே பிரச்னைக்கு இடமில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

இது தொடர்பான தமிழ் உதயத்தின் இந்த இடுகையையும் பார்க்கவும்  

http://tamiluthayam.blogspot.com/2010/12/blog-post_09.html

10 comments:

Chitra said...

நான் மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் டைடில் கார்டில்..அந்தந்த எழுத்தாளர்களின் பெயர் வரும்.ஆகவே பிரச்னைக்கு இடமில்லை.

...முறையான அங்கீகாரம் கொடுப்பது முக்கியம். உண்மைதான். நல்ல பகிர்வுங்க.

எஸ்.கே said...

நல்ல சுவாரசியமான தகவல்கள்!

goma said...

நல்ல நல்ல நாவல்களை விட்டுவிட்டு ஜப்பானையும்,சைனாவையும் ,ரஷ்யாவையும் தழுவிக்கொண்டிருக்கிறது நம் திரை உலகம்....

Gopi Ramamoorthy said...

நல்ல தொகுப்பு சார். இப்போ சமீபத்தில் மகிழ்ச்சி (தலைமுறைகள்) படமும் நாவலை அடிப்படையாகக் கொண்டதே.

அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. நமக்கு மிஷ்கின் என்ன பேட்டி கொடுக்கிறார் அப்படிங்கறது தான் முக்கியம். நீல பத்மனாபனா? அது யாரு?

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பழைய நாவல்கள் எல்லாம் சொல்லி விட்டீர்கள் .. டி வி ஆர். படிக்க வேண்டும் போலிருக்கிறது

வானம்பாடிகள் said...

/(உம்-நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்)/

சார் அரவிந்தனும் பூரணியும் மரத்த சுத்தி டூயட் பாடணுமா? அவ்வ்வ்..ஏன் இந்தக் கொலை வெறி..

ஹேமா said...

"அவன் அவள் அது" என்கிற ஒரு படமும் நாவலின் கதைதானே ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
"அவன் அவள் அது" என்கிற ஒரு படமும் நாவலின் கதைதானே ?//


ஆம்..அதைத்தவிர்த்து சிவசங்கரியின்,ஒரு சிங்கம் முயலானது(ஏன்),47 நாட்கள் ஆகிய நாவல்களும் திரைப்படமாயின.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வானம்பாடிகள் said...
/(உம்-நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்)/

சார் அரவிந்தனும் பூரணியும் மரத்த சுத்தி டூயட் பாடணுமா? அவ்வ்வ்..ஏன் இந்தக் கொலை வெறி..///

அரவிந்தன்,பூரணி..மறக்கமுடியாத நா.பா.,வின் படைப்பு

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி