தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதை பாராட்டி தமிழகத்துக்கு ரூ.98.20 கோடியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. கூடவே இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை ஏகத்துக்கும் பாராட்டி ஒரு லெட்டரும் அனுப்பியுள்ளார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்... இது செய்தி.
இந்தச் செய்தியின் பின்னணியில் உள்ள அரசியல் தான் உண்மையிலேயே 'செய்தி'.
விரைவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடக்கவுள்ளன. எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்து நாட்டின் ஜனாதிபதி-துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் இது.
உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட படுதோல்வியால் காங்கிரசிடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லை. மேலும் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிப்பாரா என்பது அவருக்கே இதுவரை தெரியாது.
அதே போல பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.
ராஜ்யசபாவில் பெரும்பான்மை கூட இல்லாத நிலையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கு எதிர் தரப்புக்குத் தான் அதிக எம்பிக்கள் உள்ளனர்.
இந் நிலையில், அடுத்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தனது கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவையே காங்கிரஸ் நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதற்காக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஐஸ் வைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தான் ஜெய்ராம் ரமேஷை விட்டு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளதோடு, தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.98.20 கோடியையும் குடிநீர்த் திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளது. (கடந்த ஆண்டு ரூ. 273.84 கோடி தான் தந்தனர். இப்போது கேட்காமலேயே கூடுதல் நிதி தந்துள்ளனர்).
''Dear Madam Chief Minister” என்று ஆரம்பிக்கும் ஜெய்ராம் ரமேஷின் கடிதம், தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இதனால், மேலும் அதிக மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க உதவியாக மேலும் ரூ.98.20 கோடியை ஒதுக்கியுள்ளோம். மாநிலத்தை எந்தக் கட்சி ஆளுகிறது என்கிற பாரபட்சம் இன்றி கூடுதல் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரத்தில் உங்களை சந்தித்துப் பேசவும் விரும்புகிறேன். நேரம் ஒதுக்கித் தந்தா நல்லாயிருக்கும் என்றரீதியில் போகிறது அந்தக் கடிதம்.
இத்தனைக்கும் மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வரான பின் அவரை முக்கிய மத்திய அமைச்சர்கள் யாருமே சந்தித்துப் பேசவும் இல்லை, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் கேட்ட நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.
இந் நிலையில் திடீரென ஜெய்ராம் ரமேஷுக்கு தமிழகத்தின் மீதும் முதல்வர் மீதும் கரிசணம் ஏற்பட்டுவிட்டதோடு சந்திக்கவும் நேரம் கேட்டிருப்பது ஜனாதிபதி தேர்தல் ஓட்டுக்களை மனதில் வைத்தே என்கிறார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பக்கமாக வந்து கொண்டுள்ள அதிமுகவை திடீரென காங்கிரஸ் குறுக்கே புகுந்து இழுத்துச் செல்ல விட்டுவிடுமா பாஜக.
உடனே ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டார் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி. செவ்வாய்க்கிழமை காலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தரப்பிலிருந்து பதில் வரவே நேற்று மாலையே சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.
இன்று காலை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை 'மரியாதை நிமித்தமாக' சந்தித்துப் பேசினார்,
இந்த சந்திப்புக்குப் பின், ''ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசினீர்களா?'' என்ற நிருபர்களின் கேள்விக்கு ''இல்லை'' என்று கரெக்டாக பதில் சொல்லிவிட்டுப் போனார் ஜேட்லி.
அடுத்தபடியாக ஜெய்ராம் ரமேஷ் அப்பாயிண்ட்மென்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கும் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தந்தால், அது தான் 'அரசியல்' ஐபிஎல் 5.
தகவல் தட்ஸ்தமிழ்
செய்திகள் - நிகழ்வு
1 comment:
DEAR MR. RADHA KRISHNAN,
KINDLY ALLOW THIS COMMENT.
THANK YOU.
.
.
அவசியம் சொடுக்கி >>>>>> பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். <<<<< படியுங்கள்
.
.
Post a Comment