பல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர். அப்போது சுப. வீரபாண்டியன் கூட்டத் தீர்மானம் குறித்துக் கூறுகையில், இலங்கையில், சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இனியும் ஒத்துப் போகாது. இரு வேறு இனங்களான இவர்கள் தனித் தனியாக வாழ்வதே சரியானதாக இருக்கும். தமிழர்களின் தாயகப் பகுதிகளான கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைப் பிரித்து தனித் தமிழ் ஈழம் அமைப்பதே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக இருக்கும். எனவே தனித் தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பான பொது வாக்கெடுப்பை ஐநா. பொதுச் சபை நடத்த வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.
இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
டெசோ பற்றி தெரிய http://www.envazhi.com/tamil-eelam-supporters-organisation-teso-an-overview/
தகவல் தட்ஸ்தமிழ்
2 comments:
யார் தீர்மானம் நிறைவேற்றினால் என்ன? இந்த விசயத்தில் ஒட்டுமொத்த தமிழனின் குரல்-கட்சி சார்பற்று ஓங்கி ஒலிக்க வேண்டும்.அது உலக நாடுகளின் கவனத்தைக் கவர வேண்டும். அப்போதுதான் இந்திய அரசு கொஞ்சமாவது வளைந்து கொடுக்கும்.
டெசோவும் நாடு கடந்த தமிழீழ அரசும் ஒன்றாக இணையுமா?தற்போது ஆட்சி பீடத்தில் உள்ள ஜெயலலிதாவின் டெசோ குறித்த கருத்து என்ன?தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சம்பந்தன் ஒன்றிணைந்த இலங்கை என்கிறாரே.அந்த ஊர் கருணா,பிள்ளையான் போன்றவர்களை கருணாநிதி எப்படி திசை திருப்புவார்?வை.கோ,நெடுமாறன்,சீமான்,திருமாவளவன்,ராமதாஸ் போன்றவர்களின் நிலைப்பாடு என்ன?
தமிழீழக் குரலுக்கு கருணாநிதியை விட ஈழப்போரிலிருந்து தொடர்ந்து குரல் கொடுக்கும் மே 17 இயக்கத்தின் நிலைப்பாடு என்ன?
மத்திய காங்கிரஸின் மனதை இன்னும் இரு ஆண்டுகளில் கருணாநிதியால் மாற்றி விடும் சாத்தியமுள்ளதா?
கேள்விகள் இன்னும் ஏராளம்.
Post a Comment