கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து சத்தம் போடாமல் ஒரு அரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தன்னை அப்போது கடுமையாக விமர்சித்த விமர்சகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் இது என்று கமல்ஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரில்லர் படம்தான் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம். ஆனால் படம் முழுக்க கமல்ஹாசனின் உத்திகள், யோசனைகள், முயற்சிகளே தலை தூக்கியிருந்தன. கமல்ஹாசன் வில்லன் மற்றும் கதாநாயகன் வேடத்தில் நடித்திருந்தார். அதிலும் வில்லனாக நடிக்க அவர் தனது உடம்பை மிகப் பெரிய அளவில் எடை கூட்டியிருந்தார். இந்த எடை கூட்டல் முயற்சிகள் அவரது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூட அப்போது பேசப்பட்டது.
ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர் ஈசான் லாய் இசையமைத்திருந்தனர். பின்னணி இசையை மகேஷ் மகாதேவன் கவனித்திருந்தார்.
இப்படத்தின் கதை கமல்ஹாசனுடையது. 1984ம் ஆண்டு அவர் எழுதிய தாயம் கதையை அடிப்படையாக வைத்துத்தான் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் கமல்ஹாசன்.
இப்படத்தில் வில்லனாக வரும் கமல்ஹாசனின் சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் அதாவது கிராபிக்ஸில் எடுக்கப்பட்டிருந்தன. அது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. அதேசமயம், இப்படம் பல விமர்சனங்களையும் கூட சந்தித்தது. ஆனால் அதுகுறித்து அப்போதும் சரி, பிறகும் சரி கமல்ஹாசன் அலட்டிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து ஒரு அரிய ஊக்கம் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பை பார்த்து அசந்து போன ஹாலிவுட் டைரக்டர் குவென்டைன் டரன்டினோ தனது கில் பில் (Kill bill) திரைப்பட வரிசையில் காட்சிகளை அமைத்தாராம்.
இந்தத் திரைப்படம் 2003ம் ஆண்டு உருவானதாகும். ஆனால் படம் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பதிப்பை 2003லும், இரண்டாம் பாகத்தை 2004ம் ஆண்டிலும் வெளியிட்டார் குவென்டைன். தனது 3வது பாகத்தை 2014ல் வெளியிடவுள்ளார்
ஆளவந்தான் படத்தில் இடம் பெற்ற அந்த வித்தியாசமான கிராபிக்ஸில் அமைந்த சண்டைக் காட்சிகள் புதிய முயற்சி என்று புகழாரம் சூட்டிய அவர் அதே பாணியில் தனது படத்திலும் காட்சிகளை அமைத்துள்ளாராம். இதற்காக ஆளவந்தான் படத்தையும், கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளாராம்.
சமீபத்தில் மும்பை வந்திருந்த அவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசியபோது இதுகுறித்துக் கூறினாராம் குவன்டைன்.
குவன்டைன் ஹாலிவுட்டில், பல்ப் பிக்ஷன், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரிசர்வாயர் டாக்ஸ் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்து ஹாலிவுட்டில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ஆளவந்தான் வந்தபோது அதற்கு பல விமர்சனங்கள், சலசலப்புகள். விநோதமாக பார்த்தனர், பேசினர். எனது சுய மேதமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாக விமர்சித்தனர். ஆனால் இப்போது திறமையான ஒரு ஹாலிவுட் டைரக்டரே இந்த உத்திக்கு அங்கீகாரம் அளித்துள்ளதால், இனி மேலாவது விமர்சகர்கள் என்னுடைய படங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகளை சரிவர புரி்ந்து கொள்வார்கள் என கருதுகிறேன் என்று கூறினார்.
ஆளவந்தானால் தான் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டதாக பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(தகவல்-தட்ஸ்தமிழ்)
2 comments:
நல்ல தகவல்
நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது, மனிஷா கொய்ராலாவை கொள்ளும் காட்சி கொடூரமாக இருக்கும். அதனால் சென்சாரில் அந்த காட்சி வெட்டி விடுவார்கள் என்று கார்டூன் போல சித்தரித்ததாக கமல்ஹாசன் இந்த படம் வெளியான போதே சொல்லி இருந்தார்.
Post a Comment