பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
சென்னையில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானார். இதைத் தொடர்ந்து வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் பள்ளி வாகனத்தில் அடிபட்டு 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தார்கள். இந்நிலையில் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் குழந்தைகள் சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2). அதில் சந்தோஷும், சுதாகரும் அரும்பாக்கம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.
இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அவர்களை பள்ளி வேனில் அனுப்ப அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். இன்று முதன் முதலாக பள்ளி வேனில் அவர்களை அனுப்பி வைக்க இருந்தனர். காலை 8 மணிக்கு வேன் வந்தது. அப்போது மீனா சஞ்சயை கீழே இறக்கிவிட்டுவிட்டு மற்ற 2 மகன்களையும் வேனில் ஏற்றினார்.
வேனும் கிளம்பியது. இதற்கிடையே குழந்தை சஞ்சய் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர் வேனை எடுத்ததும் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதைப் பார்த்த மீனா கதறினார். உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு வேனை நொறுக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(தகவல் தட்ஸ்தமிழ்)
2 comments:
இந்த விஷயத்தில் வண்டி ஓட்டுனரை மட்டும் குறை சொல்லக்கூடாது. ஒவ்வொரு குழந்தையை ஏற்றிச்செல்லும்போது டயருக்கு அடியில் யாராவது இருக்கிறார்களா என்று கவனித்துக்கொண்டிருக்க முடியாது. வாகனம் செல்லும் பகுதியில் குழந்தையை அஜாக்கிரதையாக விட்டது அந்த தாயின் தவறு.
இப்போது நடந்தசம்பவம் ஸ்கூல் வேன் என்பதால் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் தினம் தினம் நூறு குழந்தைகளாவது (தோராயமான கணக்கு) சிறு குழந்தைகள் ரோட்டில் விளையாடும்போது இரு சக்கர வாகனத்திலோ, நான்கு சக்கர வாகனத்திலோ சிக்கி காயமடைவது நடந்து கொண்டேதான் இருக்கிறது. குடியிருப்பு பகுதியில் 20 கிலோமீட்டர் வேகத்தில் சாதாரணமாக செல்லும் வாகனங்களில் கூட குழந்தைகள் அஜாக்கிரதையால் விழுந்து காயமடைந்தவுடன் அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் சேர்ந்து கொண்டு வாகன ஓட்டியை நையப்புடைப்பது சர்வ சாதாரணமாக நடக்கும்.
நம் நாட்டில் வாகன ஓட்டுனர்களுக்கும் சரி, பெரியவர்கள், குழந்தைகளுக்கும் சரி, சாலைவிதிகளும் முழுமையாக தெரியவில்லை. சாலை, வாகனம் ஆகியவற்றை எப்படி கையாளவேண்டும் என்றும் தெரியவில்லை.
இது பெற்றோரின் கவன குறைவு
நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment