Tuesday, December 11, 2012

ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி! சிவாஜி 3D, எப்படி? - ஏவி.எம். சரவணன்




ரஜினிகாந்த் பல்லக்கிலிருந்து இறங்கி நின்று ஸ்ரேயாவைப் பார்த்து "உன் கால் கொலுசொலிகள் போதுமடி, பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி' என்று பாடியபடி திரையில் தன் தொடையைத் தட்டும்போது பறந்து வரும் தூசி நம் கண்களில் விழுந்து விடுமோ என்று நாம் கண்களை ஒரு வினாடி மூடிக் கொள்கிறோம்; ஸ்ரேயா நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீந்தும்போது தெறிக்கும் தண்ணீர் நம் மீது பட்டுவிட்டதோ என்று நாம் நம் உடையை தொட்டுப பார்த்துக் கொள்கிறோம்; தீ தீ என்று ரஜினி பாடும்போது அவர் கையிலிருக்கும் துப்பாக்கி பறந்து நம் அருகில் வந்து நின்று ஒருவனை சுட்டுவிட்டு திரும்பவும் ரஜினியின் கையில் போய் சேருகிறது; ஒரு காட்சியில் ரஜினி சுண்டி விடும் நாணயம் நம்மை நோக்கி வேகமாக வர நாம் நம் முகத்தில் அது மோதிவிடாமலிருக்க தலையை குனிந்து கொள்கிறோம்.

÷இந்த அனுபவமெல்லாம் 3D தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஏவி.எம்மின் "சிவாஜி' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது நமக்கு ஏற்பட்டவைதான். ஏற்கெனவே பார்த்த படம்தான்; பார்த்த காட்சிகள்தான். ஆனாலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் 3D நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலம் பிரமிக்க வைக்கிறது. இது 3Dயாக மாற்றம் செய்யப்பட்ட படம் என்பதை நம்ப முடியவில்லை. 3Dயாகவே எடுக்கப்பட்ட படம் என்கிற எண்ணம்தான் உண்டாகிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மேஜிக்?

÷""உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த "சிவாஜி' படத்தை 3Dயாக மாற்றலாம் என்கிற ஐடியா முதலில் தோன்றியது எங்களுக்கு அல்ல. பிரசாத் ஸ்டுடியோ அதிபர் சாய் பிரசாத்துக்குத்தான்'' என்று "சிவாஜி' முப்பரிமாணதன் காரணத்தை விளக்கினார் படத்தின் தயாரிப்பாளரான ஏவி.எம். சரவணன்.

÷அவருடைய தாத்தா எல்.வி. பிரசாத் காலத்திலிருந்தே அவர்கள் குடும்பத்திற்கும் ஏவிஎம்முக்கும் ஒரு நெருக்கமான உறவு உண்டு. அவர்கள் ஸ்டுடியோவில் இருக்கும் இஎப்எக்ஸ் என்கிற தொழில்நுட்பப் பிரிவு படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்கு மிகவும் புகழ்பெற்றது. பொதுவாக படங்களில் ஒரு சில காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சியிலோ இத்தகைய கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இடம்பெறும்.

÷இப்படி அவர்கள் உருவாக்குகிற கிராபிக்ஸ் காட்சிகள் அகில இந்திய அளவில் பெரிய பாராட்டைப் பெற்றிருந்தாலும் ஒரு முழு படத்தையும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்ற வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இருந்தது. அதற்கு ஏற்ற படமாக சிவாஜி இருப்பதால் அப்படத்தை 3Dயில் மாற்றலாம் என்கிற யோசனையை சாய் பிரசாத் எங்களிடம் தெரிவித்தார். எங்களுக்கும் அது நல்ல யோசனையாகப் படவே உடனே சம்மதம் தெரிவித்தோம்.

÷"சிவாஜி' படம் மூன்று மணி பத்து நிமிடம் ஓடக் கூடியது. அதை இரண்டு மணி நேரமாகக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று சாய் பிரசாத் கூறினார். ஆனால் நாங்கள் எவ்வளவோ குறைத்தும் எங்களால் நாற்பது நிமிடத்திற்கு மேல் குறைக்க முடியவில்லை. எனவே இப்போது சிவாஜி 3D படத்தின் நேரம் 2 மணி 32 நிமிடம்.

÷"சிவாஜி' படம் வெளிவந்து இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியோடு ஐந்து ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே அப்படம் ரீலிஸானபோது விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்ட 5 வருட உரிமை முடிவடைந்து உரிமை மீண்டும் எங்களுக்கே வருகிறது. அதனை கணக்கிட்டு 3D வேலைகளுக்கு எட்டு மாதம் ஆகலாம் என எண்ணி கடந்த ஆண்டு நவம்பரில் 3D தொழில்நுட்ப பணிகளை பிரசாத்தில் தொடங்கினார்கள்.

÷நானூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இரவு பகலாக வேலை செய்தும் 3D பணிகள் முடிவடைய ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது இது மற்ற 3D படங்கள் போல் அல்ல. புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரானது. இரண்டாவது இப்படி முழு படமும் ஒவ்வொரு பிரேமும் 3Dயில் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாவது இந்தியாவிலேயே இது முதல்முறை. எனவே இந்த தொழில்நுட்பம் பிடிபடுவதற்கே சில மாதங்கள் ஆயிற்று.

÷முதலில் இரண்டு பாடல் காட்சிகளையும் மற்றும் சில காட்சிகளையும் மட்டும் 3D தொழில்நுட்பத்தில் மாற்றி எங்களுக்குக் காட்டினார்கள். அதைப் பார்த்த நாங்கள் அசந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. உடனே ரஜினிக்கு போன் செய்து இந்த விஷயத்தைக் கூறினேன். அவருக்கு சிவாஜி படம் 3Dல் மாற்றப்படுகிற விஷயமே அப்போதுதான் தெரியும். இந்த டெக்னாலஜி முழு படத்திற்கும் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை என்பதால் நாங்கள் யாரிடமும் இதுபற்றி முன்கூட்டியே கூறவில்லை.

÷ரஜினி வந்தார். ஆர்வமாக படத்தைப் பார்த்தார். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு ரசிகரைப் போல் உற்சாகமாக சிரித்து ரசித்துப் பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் வியந்து பாராட்டினார். எப்படி எப்படி என்று எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

÷ரஜினியிடம் "கோச்சடையான் படம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடுமா' என்று நான் கேட்டேன். அவர் "இல்லை அந்தப் பட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன' என்று கூறினார். "அப்படியானால் உங்கள் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி சிவாஜி 3D ரிலீஸ்' என்று நான் கூறினேன். அவர் அதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். "சூப்பர்' என்னோட ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும், ரொம்ப நன்றி' என்று ரொம்ப மகிழ்ச்சியாக சொன்னார்.

÷படத்தின் டைரக்டர் ஷங்கர் இந்த 3D மாற்றத்தைப் பார்த்துவிட்டு, "நான் 3Dல் மாற்றப்பட்ட பல ஹாலிவுட் படங்களை பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் விட சூப்பர் குவாலிட்டி இந்தப் படத்தில்தான்' அப்படின்னு சொன்னார்.

÷படத்தோட கேமராமேன் கே.வி. ஆனந்த் "நாற்பது நிமிடப் படம் குறைஞ்சதே தெரியல. அதே விறுவிறுப்பு அதே கலகலப்பு... மறுபடியும் பாக்கணும்போல இருக்கு' அப்படின்னார்.

÷கவிஞர் வைரமுத்து படத்தைப் பாத்துட்டு "இந்தப் படம் ரஜினியை ரசிகர்களுக்கு அருகில் கொண்டு செல்லும்' அப்படின்னு பாராட்டினார்.

÷இந்தப் படத்தோட ஒலியமைப்புல "டால்பி அட்மோஸ்'ங்கற புது தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு.

÷சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்துல இருக்கிற செரின் தியேட்டர்ல இந்தப் படத்துக்காகவே புதிதாக 20 லட்ச ரூபாய் செலவுல "அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' பொருத்தியிருக்காங்க.

இந்த "டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' உலகத்திலேயே நூறு தியேட்டர்களில்தான் இருக்கு. அதில இந்தியாவில இருக்கற ஒரே தியேட்டர் செரின். இந்த சவுண்ட் சிஸ்டத்தில படம் பாக்கறது ஒரு புது அனுபவமா இருக்கும்.

ரசிகர்களைப் போலவே நாங்களும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்,  12.12.12க்காக.

ஏவி.எம். சரவணனின் முகத்தில் இன்னொரு மாபெரும் சாதனை படைத்து முடித்திருக்கும் பெருமிதம்!

(நன்றி-தினமணி)

1 comment:

Unknown said...


வியப்பு தரும் செய்தி!நன்றி பார்க வேண்டும்!