Tuesday, December 4, 2012

தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ வும், தினமணி தலையங்கமும்




இது மட்டுமே போதாது!
By தினமணி

சிவசேனை நிறுவனர் தலைவர் பால் தாக்கரே மறைவின்போது, முகநூலில் கருத்துத்  தெரிவித்ததற்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டதாலும், ஊடகங்கள் கேள்வி எழுப்பியதாலும் தற்போது மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

 இதன்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ-ன் கீழ் பெறப்படும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாக இருந்தால், ஐ.ஜி. அல்லது டி.ஜி.பி. போன்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் அனுமதிக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருக்கிறார்.

 இது இப்பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவுமே தவிர, பிரச்னைக்குத் தீர்வு என்று எடுத்துக்கொள்வதற்கில்லை. ஏனெனில் இந்தச் சட்டத்தின் மூலம், கருத்துச் சுதந்திரத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டது என்று யாரும் சொல்லிவிட முடியாது.  கருத்துச் சுதந்திரத்தை தீர்மானிக்கும் சக்தி, ஒரு காவல்நிலையத்தின் கையிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரியின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆகவே இந்த வழிகாட்டு நெறிமுறை மூலம் வழக்குப் பதிவுகள் மேலிடத்துத் தீர்மானமாக இருக்குமேயொழிய, இப்போதும் சில கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவிட முடியாது என்பதே உண்மைநிலை.

 ஒரு அரசியல் தலைவர் அல்லது ஒரு முதல்வர் அல்லது ஒரு அமைச்சர் தொடர்பான விமர்சனத்தை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை அரசு மற்றும் அரசியல் நெருக்குதல் காரணமாக ஒரு காவல்துறை உயர் அதிகாரி வழக்குப் பதிவு செய்ய அனுமதி தராமல் இருப்பாரா என்ன?

 "வதேராவைக் காட்டிலும் கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்திருக்கிறார்' என்ற ட்விட்டர் தகவலுக்காகத்தான் ரவி சீனிவாசன் என்பவர் மீது பிரிவு 66ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகச் சாதாரண தகவல். இப்போது வழிகாட்டு நெறிமுறை கூறப்பட்டுள்ள நிலையில் இதே ட்விட்டர் தகவலில் தற்போது வேறொரு அரசியல் புள்ளியின் மகன் அல்லது மகள் பெயரை மாற்றி அனுப்பினால், அப்போதும் அனுப்பியவர் கைது செய்யப்படுவார். ஏனென்றால் அந்தத் தகவல் மெய்யா பொய்யா என்பதல்ல பிரச்னை. அந்தப் பெயருக்குரியவர் அரசியல் சக்தியாக இருக்கிறார் என்பதுதான். முன்பு, காவல் நிலையத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதலை, இனிமேல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குக் கொடுப்பார்கள், அவ்வளவுதான்.

 பிரிவு 66ஏ சொல்வது என்ன? 1. புண்படுத்துகிற அல்லது தொல்லைதருவதான தகவல்களை அனுப்புதல்; 2. ஒரு தகவல் பொய்யென்று தெரிந்திருந்தும், அச்சம், மனச் சங்கடம், ஆபத்து, இடையூறு, அவமானம், பொய்க்குற்றச்சாட்டு, பகை, வெறுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை அனுப்புதல்; 3.போலியான முகவரிகளுடன், அல்லது முகவரி இல்லாமல் மோசடியான, மனச்சங்கடம் தருகிற, அச்சமூட்டுகிற தகவல்களை, புகைப்படங்களை, விடியோக்களை இணைத்து அனுப்புதல் ஆகியவை குற்றச் செயல். இதற்கு 3 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கலாம்.

 பொய்யான ஒரு தகவலை, அது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் என்று தெரிந்திருந்தும் மற்றவர்களுக்கு அனுப்புவது குற்றம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அண்மையில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக அச்சமூட்டும் குறுந்தகவல்கள், மின்அஞ்சல்கள் பரப்பப்பட்டு, அதனால் அம்மாநில மக்கள் அடைந்த பீதி அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்களை இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்வதில் யாருக்கும் ஆட்சேபணை கிடையாது. அதேபோன்று, "லாட்டரியில் இத்தனை லட்சம் விழுந்தது' என்பது போன்ற பொய்யான முகவரியிலிருந்து தகவல் அனுப்புவோரைக் கைது செய்வதிலும் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.

  ஆனால், இந்தச் சட்டத்தில் முதலில் இடம்பெற்றுள்ள "புண்படுத்துகிற' (அபன்ஸீவ்) "தொல்லையான' (மெனாசிங்) என்பதற்கு என்ன பொருள் என்பது இந்திய சட்டத்தில் சரியாக வரையறுக்கப்படவில்லை; இது அவரவர் மனக் கருதுகோளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதுதான் தற்போது இந்தச் சட்டத்தின் மீது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

 அடுத்ததாக, "ஒரு பத்திரிகையில் வெளியாகும் கருத்து அல்லது விமர்சனம் குற்றமாகாதபோது, ஒரு ட்விட்டர் அல்லது மின்அஞ்சல், குறுந்தகவலில் சொல்லப்படும் கருத்துக்கு ஏன் கைது செய்யப்பட வேண்டும்?' என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில், வாக்கெடுப்பு நடத்தினால் மத்திய அரசை திமுக ஆதரிக்கும் எனும் கருத்தைப் பத்திரிகைகள் விமர்சனம் செய்ய முடியும். "திமுக பல்டி' என்றுகூட தலைப்பு போட முடியும். ஆனால், இதையே ஒரு குறுந்தகவலாக, இணைய தளத்தில் அனுப்பினால் மட்டும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66ஏ-ன் கீழ் குற்றமாகப் பார்க்கப்படும். இது என்ன வேடிக்கையான கருத்துச் சுதந்திரம்?

 அரசியல் மேடைகளில் ஆபாசமாகப் பேசிக் கொள்கிறார்கள். அரசியல் கட்சிகள் நடத்தும் பத்திரிகைகளில் ஒருவரை மற்றவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொள்கிறார்கள். ஆனால், ஆட்சி அதிகாரமும், சட்டத்தைத் தங்களது ஏவலாளாகப் பயன்படுத்தும் சாமர்த்தியமும் இருப்பதால் பொதுமக்கள் இவர்களை விமர்சித்தால், கருத்துத் தெரிவித்தால் குரல்வளையை நெரிக்க முற்படுகிறார்கள். நன்றாக இருக்கிறது இவர்களது ஜனநாயகப் பண்பு!

 மத்திய அரசு, இத்தகைய விவகாரங்களில், சட்டத்தின் நுட்பங்களில் தெளிவு காண முயற்சி செய்ய வேண்டும். "வழிகாட்டு நெறிமுறை' என்ற பெயரில், "யார் வழக்கைத் தீர்மானிப்பது' என்கின்ற அதிகார மையம்தான் மாற்றப்பட்டுள்ளது. இது மட்டுமே போதாது.

(நன்றி - தினமணி)


2 comments:

rara said...

எல்லா சட்டமும் அவாளுக்கே .கருணாநிதி யை பற்றி என்னவெல்லாம் எழுதுகிறார்கள் .கேட்க நாதி இல்லை.தினமலர் சைட் போனால்தெரியும் .வாழ்க இந்திய ஜனநாயகம்

Rathnavel Natarajan said...

ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி திரு T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி தினமணி.