Wednesday, March 20, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் -12




இளம் தம்பதிகள் ..ஓருயிர் ஈருடல் என இருப்பவர்கள்..ஒருவர் இன்றி மற்றவரால் வாழமுடியாது என்னும் நிலையில் உள்ளவர்கள்..

கணவன் காலை அலுவலகம் செல்கிறான்..மாலை ஆறு மணிக்குள் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு..

புது இடம்..வீட்டில் தன்னந்தனியாக மனைவி..பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை..என்ன செய்வாள் பொழுதைக் கழிக்க..

புத்தகம் படிப்பாள்..சிநேகிதிகளுடன் அலைபேசியிலோ..தொலை பேசியிலோ உரையாடுவாள்..மாலை ஆறு மணி ஆனதுமே கணவனின் வருகையை எண்ணி வழி மீது விழி வைத்து காத்திருப்பாள்..

ஏழு,எட்டு.ஒன்பது........பத்து மணி ஆயிற்று ..சென்றவன் வரவில்லை..அவனுக்கு என்ன ஆயிற்றோ எனக் கவலை..அதே சமயம்..அலை பேசி இருக்கிறது,தொலைபேசி இருக்கிறது..விவரம் தெரிவிக்கலாம் அல்லவா? நான் ஒருத்தி தனியாய் இருக்கிறேன் என்ற கவலையே இல்லையே..வரட்டும்...வேண்டாம்..வேண்டாம்..அவர் வந்தால் என்ன..வராவிட்டால் என்ன..என்னைப் பற்றி கவலைப் படாதவர் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்..என அவனிடம் ஊடல் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்..

ஆனால் இதுவே சங்க காலத்துப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால்..அவள் ஆற்றாமையை தெரிவிக்க ..அவளது உதவிக்கு வருவது தோழி மட்டுமே..வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராத தலைவனைப் பற்றி சொல்கிறாள்..

(முல்லைத்திணை-தலைவி கூற்று)

வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப்பைம்போ துளரி, புதல
பீலி ஒன்பொறிக் கருவிகளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையோடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே
என்னா யினல்கொல் என்னா தோரே...
- கிள்ளி மங்கலங்கிழார்

மழைக்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்ற தலைவன் வெகுநாட்களாயும் வராததால் அவனைத் திட்டி தோழியிடம் சொன்னவை இவை..

இதற்கான அர்த்தம்..

அவர் இனி வராவிட்டாலும், வந்தாலும் அவர் இனி எனக்கு யாரோதான்.நீரில் மலரும் மொட்டுகளை மலர்த்தி, மயில்தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கைமர அரும்புகளை விரித்து,, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ? என்று வருந்தாதவன் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?

பாடலில் மலர்களின் துன்பத்தைக் கூறுவதன் மூலம்..இவளும் குளிரிலும்,மழையிலும்,வருந்துகிறாளாம்.

குறுந்தொகையில் வரும் பாடல் இது.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்... விளக்கமும் அருமை...