Sunday, March 31, 2013

ஜெயகாந்தனும்... ராஜுமுருகனின் வட்டியும்..முதலும்..

                               


ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' கட்டுரைத் தொடர் நான் விடாமல் படித்து மகிழ்ந்து வருகிறேன்.அந்த அளவிற்கு அது 'சுவையோ சுவை"

அதே போன்று அந்த நாட்களில் ஜெயகாந்தனின் படைப்புகள்..அது கட்டுரைகள் ஆனாலும் சரி, சிறுகதைகள் ஆனாலும் சரி..தொடர் ஆனாலும் சரி.. ஆண்டுகள் பலவாகியும் மனதை விட்டு அகலாதவை.அப்படிப்பட்ட அவர் படைப்புகளில், அவரது ,'அம்மா நான் இருக்கிறேன்' என்ற சிறுகதையும் ஒன்று.

அக்கதையை இந்த வாரம் ராஜுமுருகன் நினைவுபடுத்தி விட்டார்.அக்கதை இதோ...ராஜுவின் வரிகளிலேயே..

'ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன் அம்மாவுடன் வசித்து வருவான்.கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.அம்மாவோடு பேருந்தில் போகும் போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'சாரி.' கேட்பாள்.அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் விழுந்து விடுவான்.ரயில் வருகிற நேரம் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரன், அந்த இளைஞனைக் காப்பாற்றி விடுவான்.பக்கத்தில் இருக்கும் ஒரு கல்மண்டபத்திற்கு அழைத்துப்போய் அந்த இளைஞனிடம் சொல்வான்,' நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா...அன்னிக்கு ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையைக் காப்பாத்தினேன்.அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க..அவ்வளவு அருவருப்பா இருக்கு என்னையப் பார்க்க.நானே உயிரோட இங்க வாழ்ந்துட்டு இருக்கேன்..உனக்கெல்லாம் என்ன தங்கம்..' எனப் பேசி அந்த இளைஞனின் நம்பிக்கையைத் தூண்டி விடுவான்.தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு அவன் தூங்குவான்.காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் என பயந்து ஒடிவருவாம் அவன் அம்மா.'அம்மா..நான் இருக்கேன் அம்மா..' என அந்த இளைஞன் கத்திக் கொண்டே வருவான்.அங்கே அந்த பிச்சைக்காரன் செத்துக்கிடப்பான்.இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன், 'இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்..நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..' என யோசித்து தண்டவாளத்தில் குதித்திருப்பான்.செத்துப்போன அவனைப் பார்த்தப்படி அந்த இளைஞன் சொல்வான், 'அம்மா,..அவன் எனக்கு வாழக்கத்துக் கொடுத்தான்.நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்..'

எவ்வளவு அருமையான கதை..

இக்கதையை நினைவூட்டிய ராஜுமுருகனுக்கு நன்றி..

நல் எழுத்துகள்..இலக்கியங்கள் சாகா வரம் பெற்றவை.அப்படிப்பட்ட பல படைப்புகளைக் கொடுத்த ஜெயகாந்தனுக்கு...நன்றி சொல்வதைத் தவிர..என்னைப்போன்ற ரசிகனுக்கு வேறென்ன செய்துவிட முடியும்...

  .



No comments: