Saturday, January 16, 2016

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,

தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஜெயலலிதா-
எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.

ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு காமராஜ்தான்
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.


(இது ஒரு மீள் பதிவு)

No comments: