Thursday, April 9, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 100

நம்மில் பலருக்கு இந்து குணம் உண்டு.

நம் நண்பர்களைப் பற்றியோ அல்லது உறவினர்களைப் பற்றியோ அவர்கள் இல்லாதபோது குறை சொல்வது அல்லது புகார் சொல்வது.

இது புறங்கூறுதல் எனப்படும்.ஆனால் இது போல செய்வது மிகவும் தவறு.ஆகவேதான் வள்ளுவரும் இதற்கென புறங்கூறாமை எனும் ஒரு அதிகாரத்தை வைத்துள்ளார்.
 
இந்த குறளினைப் பாருங்கள்


கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல் (184)



புறங்கூறாமையில் நான்காவது குறள்.கண்,கண்,சொல்,சொல் என்னும் சொற்களை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளர்.

நேருக்கு நேர் ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாமாம்..ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு...என்கிறார்.

வேறு சிலர் இருக்கிறார்கள்..

அவர்கள், நம்மைப் பார்க்கையில் நம்மை மிகவும் உயர்வாகப் பேசுவார்கல் ஆனால் நாம் இல்லாதபோது நம்மைப் பற்றி வேறுவிதமாகச் சொல்வார்கள்.
இப்படி அவர்கள் உயிர் வாழ்வதை விட செத்து மடியலாம் என்கிறார்..

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும் (183)

கண்ட இடத்தில் ஒன்றும் காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று..

நம்மிடம் புறங்கூறும் தவறு இருந்தால் அதனை விட்டொழிப்போமாக 

(இத்துடன் தினம் ஒரு தகவல் 100 முடிகிறது.சில நன்பர்கள் கேட்பதுண்டு.நீ இவ்வளவு சிரமப்பட்டு எழுதுகிறாயே! அது எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு போய்ச் சேகிறது என? அவர்களுக்கு நான் சொல்லும் பதில்..ஒருவருக்கு போய்ச் சேர்ந்தாலும் போதும் என்பதே!)

No comments: