Friday, April 3, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 96

கூடாநட்பு

----------------------

உலகிலேயே சிறந்த உறவு நட்புதான்.

அது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு ஆபாத்தானதும் கூட.

சரியான நண்பர்கள் நமது வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல உதவுவார்கள்.

நண்பர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டால், அது போன்ற ஆபத்தும் இல்லை.

அதை வள்ளுவர் கூடா நட்பு என்கிறார். அதற்கு 10 பாடல் எழுதி இருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள  முடியும்.

தவறான நண்பர்கள், நம்மை தீய வழியில் கொண்டு சென்று தாங்க முடியாத துன்பத்தில் அழுத்தி விடுவார்கள்.

"நீங்க பணத்தை மட்டும் போடுங்கள், உழைப்பு என்னது. உங்களுக்கு இலாபத்தில் பங்கு " என்று ஆசை காட்டி நம் பணத்தை கவர்ந்து கொள்வார்கள்.

"இதுல போடுங்க, உங்க பணம் ஒண்ணுக்கு இரண்டாகும் " என்று தேவையில்லாத இடங்களில் நமது பணத்தை முதலீடு செய்ய வைத்து நம்மை நட்டத்தில் கொண்டு செலுத்தி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் பார்க்க நல்லவர்கள் போலவும், நண்பர்கள் போலவும்  இருப்பார்கள்.

நம்ம நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்று நாம் நினைப்போம்.

அந்த மாதிரி ஆள்களை "பட்டடை" போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பட்டடை என்றால் என்ன தெரியுமா ?

இரும்பை சூடாக்கி அடிக்க அந்த சூடான இரும்பின் கீழ் ஒரு இரும்பு பலகையை வைத்து இருப்பார்கள். அதன் மேல் வைத்துதான் இரும்பை அடிப்பார்கள். அந்த அடிப் பலகைக்கு பெயர் பட்டடை.



அது போல சில பேர் நம் வாழ்வில் நமக்கு நல்லது செய்பவர்கள் போல இருப்பார்கள். ஆனால், அவர்களால்தான் நமக்கு அனைத்து துன்பங்களும்  வரும்.

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு (821)

மனதார இல்லாமல்  வெளியுலகிற்கு நண்பரைப்போல நடிப்பவரின் நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்புத் துண்டாக்கத் தாங்கு பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.



அந்த மாதிரி ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி  இல்லாத துன்பத்தில் எல்லாம் நம்மை ஆழ்த்தி விடுவார்கள். 


No comments: