Thursday, April 2, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 95

இனிமை..பேசவும்..கேட்கவும் இனிமை
-----------------------------------------------------
அது ஒரு அழகான பசுஞ்சோலை.

கனி கொடுக்கும் மரங்கள்.ஒவ்வொரு மரத்திலும் பூவும், காயும், கனியுமாய் ..பிறவி எடுத்த பயன் பூர்த்தியானதில் மகிழ்ந்து குலுங்கும்சோலை.

அங்கு ஒருவன் வருகிறான்..அவனுக்கோ அகோரப் பசி.அந்த மரங்களோ..என்னிடம் இருக்கும் கனியைப் புசி உன் பசிக்கு என்று சொல்வதுபோல காற்ரில் அசைகிறது.

அவன்..ஒரு மரத்திலிருந்து ஒரு காயைப் பறித்து உண்ணுகின்றான்.

அந்த மரம், பக்கத்து மரத்திடம் சொன்னது..'எவ்வளவு ருசியான கனிகளை நான் இவனுக்கு கொடுக்க எண்ணுகின்றேன்..ஆனால்..மூடன் இவனோ காயினைப் பறித்து உண்ணுகின்றானே" என அவனைக் கேலி செய்தது.

நம்மில் பலரும் அவனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மிடம் பேச இனிமையான இன்சொல் இருக்கையில் அதை மறந்து, பிறரை நமது கொடுமையான சொற்களால் ஏசுகிறோம்.

அப்படிப்பட்ட நமக்கும்..உண்ண சுவையான கனி இருக்கையில்..அதை விடுத்து  காயினைப் பறித்து உண்பவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.இதைத்தான் வள்ளுவர் இக்குறளில் சொல்லிட்யுள்ளார்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)
என...

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்..

இனிய சொற்கள் இனபத்தை அளிக்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன் படுத்த வேண்டும்??  எனக் கேட்கிறார்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது (99)




No comments: