Wednesday, April 1, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 94


வீட்டில் செல்வம் தங்க..!
-----------------------------------
உங்கள் வீட்டில் செல்வம் என நாம் போற்றும் திருமகள் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டுமா?

அதற்கும் வள்ளுவர் ஒரு வழியினை சொல்கிறார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல (84)

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்

ஒரு விவசாயி இருக்கின்றான்.வறுமையில் வாடுகின்றான்.மழை பொய்த்துவிட்டது.அந்த ஆண்டு விளைச்சல் ஏதுமில்லை.அடுத்து விதைக்கும் பருவத்திற்காக விதைநெல்லை மட்டும் வைத்திருக்கின்றான்.

அச்சமயம் அவன் வீட்டிற்கு விருந்தினர் வந்து விடுகின்றனர்.அப்போது அவன் என்ன செய்வான்? பண்பாளன் அவன்.விருந்தினரை உபசரிப்பவன்.அவன் .வரும் விருந்தை வரவேற்று,தன் நிலத்தில் விதைக்க வைத்திருந்த விதைநெல்லை எடுத்து சமைத்து அளிப்பானாம்.இதைத்தான் கீழே சொல்லியுள்ள குறள் சொல்கிறது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிகியவான் புலம் (85)

விருந்தினருக்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக் கூட விருந்தோம்பலுக்கு பயன்படுத்தாமல் இருப்பானா?

சாகாத மருந்து நமக்குக் கிடைக்கிறது.அதேநேரம் விருந்தினர் வருகின்றனர்.
அந்த நேரம் அவர்களை வெளியே விட்டுவிட்டு அந்த சாகா மருந்தினை தான் மட்டும் உண்ண மாட்டானாம் பண்பாளன்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (82)

விருந்தினர் வந்தால் முகம் கோணாமல் வரவேற்போக! 

No comments: