Tuesday, October 27, 2020

என்னவென்று சொல்ல...

 "அம்மா..அம்மா..நேரமாயிடுச்சு..ஒர்க் ஃபிரம் ஹோம்னா வேலை குறைச்சல்னு நெனைக்காதே.வேலை அதிகமாயிடுச்சு.ஒன்பது மணிக்கே லேப்டாப் முன்னால உட்காரணும்..தெரிஞ்சுக்க.." என கத்திக் கொண்டிருந்தான் சுரேந்தர்.

'எனக்குத் தெரியும்.முதல்ல டிஃபனை சாப்பிடு" என்றார் அம்மா.



"இல்லைம்மா..அதுக்கெ எல்லாம் நேரமில்லை.என்னைப் போல சாஃப்ட் வேர் பீப்புள் எல்லாம் நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறதாலத்தான்..கம்பெனியால எங்கள் எல்லாருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளம் கொடுக்க முடியுது.இதையெல்லாம் நீ எப்ப தெரிஞ்சுக்கப் போறியோ...அப்பா..அப்பா..கொஞ்சம் தள்ளி நில்லு..வீடியோ கான்ஃபெரென்ஸ்..நீ தெரியறபார்.."என பேசிக் கொண்டே இருந்தான் சுரேந்தர்.


"கம்பெனிக்கு ஏகப்பட்ட லாஸ்னு வேலையை விட்டு இவனை அனுப்பின அதிர்ச்சிலே இருந்து இவன் இன்னமும் மீளலையே! இன்னிக்கும் வேலைக்குப் போறாப் போல ஒர்க் ஃபிரம் ஹோம்னு சொல்லிட்டு பைத்தியம் போல பேசிக்கிட்டு இருக்கானே..எப்ப பழைய நிலைமைக்கு வருவானோ..?' என அம்மாவிடம் வருத்தப் பட்டுக் கிட்டு இருந்தார் அப்பா. 


Monday, October 26, 2020

எங்கே போச்சு..?

 "இங்க தானே வைச்சிருந்தேன்..எங்கே போச்சு?..வாணி..வாணி..நீ பார்த்தியா?"என்றான் ஹாலிலிருந்து சுரேஷ்.


"நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க..எங்கே வைச்சீங்கன்னு


"ஆமாம்.. இங்கதான் வைச்சேன்..நீதான் எதையும் இடம் மாறி..இடம் மாறி வைக்கறவளாச்சே"


"ஆமாம்.எது காணும்னாலும்..நான்தானா? உங்க பொருளை நான் ஏன் எடுக்கப் போறேன்?"


"அப்போ.கால் முளைச்சு அதுவே..ஓடிடுத்தா?"என்றான் கோபத்துடன்.


அதற்குள் சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்..டீபாயின் மீது வைத்திருந்த டிவி ரிமோட்,செய்தித் தாள்..என ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்துவிட்டு வைத்தாள்.


அதற்குள் வெளியே கிளம்பத் தயாரானவன்.."ஏன்..வேணும்னா என் பேன்ட் பாக்கெட்டிலும் தேடேன்" என பேன்ட் பாக்கெட்டினுள் கையை விட்டவன்"இதோ இருக்கு.."என அசடு வழிய எடுத்தான்.


போன தடவை வெளியே போயிட்டு வந்துட்டு ஃபேஸ் மாஸ்க்கை அப்படியே பேக்கட்ல போட்டுண்டு கத்தறதைப் பாரு"என தன் பங்குக்குக் கத்திவிட்டு சமையலறைக்குள் மீண்டும் நுழைந்தாள் வாணி.

Saturday, October 24, 2020

கடல்


தனியாக
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
இந்த
நதிகள்தான்
ஓடி வந்து
ஒருகை ஓசையாக
அதனுடன்
சங்கமிக்கின்றன

மழையில் நனையவே
ஆசைப்படுகின்றேன்
விண்ணின்
கொடைக்கு
குடை
எதற்கு..

காலம் ஓடுகிறது
மிகப் பெரியவன் சொல்ல
நடுவனோ
சற்றே விரைந்து
செயல்பட
சிறியனோ
நிதானமாய் கடக்கின்றான்
காலக் கடிகாரத்தை

உனக்கென்ன
மலர்ந்து
மணம் விசி விட்டாய்
மொக்காய் நிற்கும் என்னை
மலர விடுவார்களா
அழித்து விடுவார்களா
பாவிகள்

மழையும்..மனிதனும்..
------------------------------
மழை
பெய்து கொண்டிருக்கிறது
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
நொறுக்குத் தீனியுடன்..
பாழாய்ப்போன மழை
வெளியே செல்ல இயலவில்லை
என்கின்றேன்..
தொலைபேசியில் அழைப்பவனிடம்..
நல்லது செய்யும்
மனிதன் மட்டுமல்ல
மழையும்
சபிக்கப்படும் போல.

பெண்களை வர்ணித்தே
கவிதை எழுதப்படுகிறதாம்
கவிஞர்களால்....
வேறு என்ன செய்ய
மாற்றி எழுதினால்
அவனா நீ
என்கிறீர்களே

இதழ்கள்
முத்தத்திற்குக் காத்திருந்தாலும்
தேனை மட்டுமே உறிஞ்சி
பறக்கிறது
வண்டினம்

கலாமும், கனவும்
--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்...
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்....
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளுக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்....
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்...
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை

கவிதைக்கான
கருவினைத் தேடி
கவிஞனே அலையாதே!
இயற்கை என்னிடம்
இல்லா
கவிதைக் கருவா
உனக்கு
வெளியே கிட்டிடும்


நாட்கள்
நகர்ந்து
கொண்டுதான் உள்ளன
சில
நட்புகளின்
இழப்புகளுடன்

அவர்
நாண
நன்னயஞ் செய்து விட்டாலும்
கண்ணாடியில் விழுந்த
விரிசலாகவே உள்ளது
நட்பு..


அழகிய கண்ணே..
----------------
இதயத்தின் வாசல் அது
இன்பமாய் வரவேற்றிடும்..
காந்தமாய்
கவர்ந்திழுக்கும்..
கவிஞனாய்
கவிதை பேசும்...
கதாசிரியனாய்
கதைபலக் கூறும்..
நடிகனாய்
நவரசமும்
நன்குக் காட்டிடும்...
தூண்டில் போட்டு
தூய மனதினையும்
தூண்டில் புழுவாக்கிடும்..
சாதித்திடும் அனைத்தையும்
தன் கண்ணீரினால்

சக பயணிகள் அவ்வப்போது
இறங்குகிறார்கள் - நானோ
இறங்க வேண்டிய இடம்
எப்போது வரும்
எனத் தெரியாமல்..
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


மண்ணில் கிடந்தது நேற்றைய சருகு
மரத்தில் இன்று துளிர்த்த இலை
அதனைக் கண்டு கண்ணீர் விட்டது
தாயின் சோகத்திலும் சற்று மகிழ்ச்சி
தாண்டவமாடியது சற்று.
தாயின் ஆட்டத்தில்
சருகு மறைந்தது.

கூண்டுக்குள் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்
சிறிது சிறிதாக
சிறகுகள்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
கூண்டைவிட்டு
வெளியேறச் சொல்லி
படபடக்கின்றன

Friday, October 23, 2020

வேலை இல்லை

 முன்னர் இருந்தது போல இல்லாமல் அவனது வேலை வெகுவாகக் குறைந்திருந்தது.


இதேநிலை நீடிக்குமெயானால், ஒரு கட்டத்தில் வேலையை விட்டே அனுப்பிவிட்டாலும் அனுப்பி விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. தனக்கு மட்டுமின்றி, தன்னைச் சேர்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுவரே என வருந்தினான்.


ஒருவேளை..தனக்கேத் தெரியாமல் தன் வேலையை அவுட் சோர்சிங் முறையில் வெளியே கொடுத்து விடுகிறார்களோ என்ற சந்தேகமும் இருந்தது.


எப்படியாவது தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவன், தனது மேலதிகாரியைக் காணச் சென்றான்.அவரைப் பார்த்து..


"பூவுலகில் கொரோனா  உயிரை எடுக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதால், தனக்கு வேலை பளு குறைந்துள்ளது.என்னை நம்பியுள்ள வர்களும்  தங்களுக்கு வேலை போய்விடுமோ எனக் கவலைப்படுகின்றனர்.நீங்கள்தான் தலையிட்டு கொரோனாவிடமிருந்து எங்களது வேலையை மீட்டுத் தர வேண்டும்" என கிங்கரர்களுடன் வந்திருந்த யமன் விஷ்ணுவிடம் வேண்டினான்.

Wednesday, October 21, 2020

பயம்

 புது மனைவி மாலதியை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான் ரகு.அவனுக்குத் திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்தது.


அலை அலையாய் வந்திருந்த மக்கள்..தண்ணீரில் நின்றுக் கொண்டு அலைகள் வந்து தங்கள் கால்களை நனைத்து காலடி மண்ணை எடுதுதுக் கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்வதை ரசித்த படி இருந்தனர்.


அப்போதுதான் சற்று தள்ளி அவனுடன் வங்கியில் வேலை செய்யும் அவனது மேலதிகாரி வேதாசலத்தைப் பார்த்தான்.


உடனே..முகம் சற்றே மாற, "மாலதி வா..வா..நேரமாச்சு..போகலாம்" என அவளை அவசரப் படுத்தினான்.


"இவ்வளவு நேரம் சந்தோஷமாய் இருந்தவர் ஏன் கலவரமாய்க் காணப்படுகிறார்? என்ன ஆச்சு இவருக்கு?" என புரியாது விழித்தாள் மாலதி.


அவளை "தர தர.." என் இழுத்துக் கொண்டு ராணி மேரி  கல்லூரி அருகில் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிய பின்னரே..நிம்மதி பெருமூச்சு விட்டான்.


வங்கியில் மெசஞ்சராகப் பணி புரியும் அவன்..மாலதி வீட்டாரிடம் கிளார்க் வேலையில் இருப்பதாகக் கூறி மணம் முடித்திருத்தான்..வேதாசலம், இவனைப் பார்த்ததும் ,உண்மையை மாலதியிடம் சொல்லிவிடப் போகிறாரே! என்ற பயம்தான் காரணம்.

Tuesday, October 20, 2020

தன்னைத்தான் காக்கின்...

 வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்த கற்பகம்,ஆட்டோவிலிருந்து இறங்குபவளைக் கண்டாள்."இன்னிக்கும் ஆரம்பிச்சாச்சா? என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.


ஆட்டோவிற்குக் காசு கொடுத்து விட்டு, கையில் ஒரு சிறு பெட்டியுடன் அழுதபடியே வீட்டினுள் வந்தாள் மீனாட்சி.


"என்ன ஆச்சு? ஏன் அழறே? அழாம விஷயத்தைச் சொல்லு " என்றாள்மீனாட்சியிடம்.


"இப்போ ஒன்னும் கேட்காத..சாயங்காலம் என்னைத் தேடி இங்கே வருவார்.அப்போ அவர் கிட்ட கேளு.இனிமே நான் அங்கே போக மாட்டேன்..உனக்கு பாரம்னா சொல்லு வேற எங்கேயாவது போய்க்கிறேன்" 


கடந்த சில மாதங்களாக..கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு மீனாட்சி அடிக்கடி அங்கு வருவது வழக்கமாகி விட்டது.


மாலையில் சுந்தரம் வந்தார்.அவரைப் பார்த்த கற்பகம், "இது உங்களூக்கே நல்லாயிருக்கா?" என்றாள்.


"என்னை என்ன பண்ணச் சொல்ற.என் கோபம்தன உனக்குத் தெரியுமே..ஆனா கோபம் வந்தா அடுத்த வினாடியே அது மறந்துடும்.முன்னெல்லாம் நான் கோபப்பட்டா அம்மா அதை புரிஞ்சுண்டு மௌனமா இருப்பா.ஆனா, இப்ப எல்லாம் இவளும் பதிலுக்குப் பதில் கோபப்படறதால சண்டை வலுத்து இது போல ஆகிவிடறது.சரி..சரி.. மீனாட்சி..கிளம்பு..இனிமே கோபப்பட மாட்டேன்" 


அப்பாவும்..அம்மாவும் கிளம்பிச் செல்வதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்..

Thursday, October 15, 2020

அப்துல் கலாம்.

 கலாமும், கனவும்

--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளூக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை

Wednesday, October 14, 2020

நம் செயலில் கவனம் வேண்டும்

ஒருவன் எந்தக் காரியத்தில் ஈடுபட நினைத்தாலும்..முயற்சியும், அச்செயலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் வேண்டும்.

இவை இரண்டுடன் நாம் உழைத்து..முடிவை இறைவனிடம் விட்டு விடுவோமாக. இறைவன் கை விட மாட்டான்.

ஒரு சிறு கதையினைப் பார்ப்போம்..

கருவுற்ற மான் ஒன்று குட்டி போட வேண்டிய தருணம்.

அது, அதற்கான இடத்தைத் தேடி காட்டில் அலைந்தது.அப்போது ஒரு அடர்ந்த புல்வெளியினைக் கண்டது.அதன் அருகே ஒரு ஆறு.இதுதான் சரியான இடம் என நினைத்தது.

அப்போது அங்கு கரு மேகங்கள் சூழ்ந்தன.மான் பயந்து தன் இடப்பக்கம் பார்த்தது.அங்கு ஒரு வேடன் தன் அம்பினை மானை நோக்கி குறி வைத்து நின்று கொண்டிருந்தான்.


வலப்பக்கமோ ஒரு புலி மானை நோக்கிப் பாய தயார் நிலையில் இருந்தது.

கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் அந்த சமயம் பார்த்துக் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.

என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?

மான் இறைவன் என்ன நினைக்கின்றானோ அது நடக்கட்டும் என தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.

அப்போது என்ன நடந்தது தெரியுமா?

மின்னல் ஒன்று வெட்டியது.

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு குறி தவறி புலியை தாக்கி அது இறந்தது.
தீவிர மழை காட்டு தீயை அழித்தது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுத்தது.
..
அந்த மானின் கவனம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.


நம் செயலில் நம் கவனம் செலுத்துவோம்.
பின்நடப்பவை நல்லபடியே நடக்கும்

Monday, October 12, 2020

ஆணவம்

 பல வண்ணங்கள் கொண்ட கிளி ஒன்றும் காகம் ஒன்றும் நட்புடன் இருந்தன.


ஆனாலும் கிளி அவ்வப்போது காக்கையை அதன் நிறத்தைச் சொல்லி கேலி செய்து வந்தது.


ஒருநாள், வேடன் ஒருவன் கையில் அக்கிளி சிக்கிக் கொண்டது.


அவன் அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதன் நாக்கை வழித்து வழித்து..மிளகாயினலௌம், பூண்டினாலும் வழித்து..தமிழில் பேசு..தமிழில் பேசு என துன்புறுத்திக் கொண்டிருந்தான்.


அதைக் கண்ட காகம் வருந்தியது.அப்போது வேடனின் மனைவி, சாத உருண்டை ஒன்றைக் கொண்டு வந்து வைத்து.."காகா..காகா" என இதைப் பார்த்துக் கூவினாள்.


காகம் ,கிளியைப் பார்த்துச் சொன்னது..


"பார்த்தியா..அவனது மொழியில் பேசச் சொல்லி அவன்  உன்னை துன்புறுத்துகிறான்.ஆனால், அவன் மனைவியோ என் பாஷையில் என்னியக் கூப்பிட்டு சோறு வைக்கிறாள்.காரணம் உனது அதீத அழகும், ஆணவமும்..சில நேரத்தில் அவை நமக்கே ஆபத்தாக அமையும்..என சொல்லி விட்டுப் பறந்தது.

Sunday, October 11, 2020

"ஒரே போடு.."

 அண்ணா நகர்..


தனி பங்களா."சாந்தி  நிலையம்"..எனும் பெயரைத் தாங்கி நின்றுக் கொண்டிருந்தது இரும்புக் கதவுகளுடன் இணைந்திருந்த கான்கிரீட் தூண்.


அப்பங்களாவின் கதவினைத் திறந்து வெளியே வந்த மாணிக்கம்..கீழே போடப் பட்டிருந்த செய்தித் தாளை எடுத்துக் கொண்டு..அருகில் வரந்தாவில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் தொடங்கினார்.


ஒரு ஆட்டோ வெளியே வந்து நின்றது.அதிலிருந்து இறங்கியவன், இரும்புக் கதவினைத் தள்ளிக் கொண்டு அவரின் எதிரே வந்தான்.


அவனைப் பார்த்தார்.சதுர முகம்.அடர்த்தியான மீசை..மஞ்சள் பனியன்..பனியனில் எலும்புக் கூட்டின் படம்..


அவனைப் பார்த்து, "யாரப்பா நீ? யாரைப் பார்க்கணும்?" என்றார்.


"ம்..நீதான் வேணும்"என்றபடியே..முதுகுப் பக்கத்திலிருந்து எடுத்த அரிவாளால், அவரை ஒரே போடு பாட..அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.


"கட்..கட்.." என்று இயக்குநர் குரல் கொடுக்க , அதுவரை ஓடிக் கொண்டிருந்த காமிரா நிறுத்தப்பட்டது.


ஒரு பெரிய காட்சி ஒரே டேக்கில் முடிந்த மகிழ்ச்சி அந்த மெகா சீரியல் படபிடிப்பு குழுவினர் முகத்தில் தெரிந்தது.

கம்பனின் "ஏரெழுபது"

 வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூல் "ஏரெழுபது" ஆகும்.அதிலிருந்து இன்று பாடலைப் பார்ப்போம்)


அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்


அழுகின்ற குழந்தைக்கு தான் கொண்ட அன்பின் மிகுதியால் பால் கொடுத்து பசியாற்றும் தாயினைப் போல எல்லா உயிர்களின் மேலும் உருவாகின்ற அருளாகிய குணம் உடைய விவசாயிகள் உலக உயிர்களுக்கெல்லாம் உணவுக் கொடுத்துக் காக்கும் உகழ்ச்சி உடையவர்கள் ஆவார்கள்.மேலும் உழவு செய்யப் பயன்படும் கலப்பையின் நுனியில் இருக்கும் (கொழு) இரும்புக் கருவியில் நெற்பயிரின் கரு சிறப்படைந்து, உலகில் உயிரினங்கள் தோன்றுமாறு வளம் பொருந்திய திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மன்..உழவுத் தொழில் புரியும் விவசாயிகளைப் படைத்து உலக உயிர்களைப் படைத்துள்ளான்,வேறு புகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் உயர்வினை உடையவர்கள் இவர்கள் ஆவர்

Tuesday, October 6, 2020

அடைக்கும் தாழ்....

அவளைப் பார்க்காமல் சஞ்செயால் ஒருநாள் கூட இருக்கமுடியாது

அவளுக்கும் அப்படித்ததான்..அவனைக் காணாவிட்டால் வாடி விடுவாள்.

"பால் நினைந்து ஊட்டும் சாலப் பரிந்து.."என்ற திருவாசகம் அவனுக்குத் தெரியும்.

உலக உறவுகளில் தாய்,சேய் உறவிற்கு மேற்பட்ட உறவு ஏதுமில்லை.குழந்தையின் பொருட்டாகத் தன்னையே அர்ப்பணித்தல்..தாய் ஒருத்திக்கே உண்டு.

ஆனால், அவனைப் பொறுத்தவரை அவனது தாய் முகம் கூட அவனுக்கு நினைவில் இல்லை.பிறக்கும் போதே தாயன்பைப் பெறாதவன் அவன்..

அவனைப் பொறுத்தவரை அன்பு என்பதை அவள் மூலமே அறிந்தவன்.அப்படிப்பட்டவள், தன்னைவிட்டு ஒரேயடியாக விலகிச் செல்லப் போகிறாள் என்பதை அந்த விநாடி வரை எதிர்பார்க்கவில்லை.

யாரோ வரும் ஓசை கேட்கிறது.

"சாதனா வெளியே வா..இதோ பார் இனிமே இவங்கதான் உனக்கு அப்பா..அம்மா"என இருவரை ஆதரவற்ற குழந்தைகள் விடுதி காப்பாளர் அன்னபூரணி அம்மாள் காட்ட..அந்த எட்டு வயது சிறுமி தத்து கொடுக்கப் படுகிறாள் .

தன்னிடம் தனி அன்பு செலுத்தி வந்த சாதனா..கண்களில் நீர் வழிய சஞ்செயிற்கு "டா..டா" காட்டிவிட்டு செல்கிறாள்

"சஞ்செய், உள்ளே வா.." என்ற அன்னபூரணிஅம்மாளின் குரல் கேட்கிறது அவனுக்கு.

Friday, October 2, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -6" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

 



மன்னன் ஆவலுடன் பாய்ந்து அப்பெண் மோதிரத்தை எப்படிக் கைப்பற்றுகிறாள் என உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.


எந்நேரமும், அந்நிகழு நேரிடலாம் என்பதால்..மக்கள் கூட்டமும் நிசப்தமாய் அப்பெண்ணையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அச்சமயம், அரசி..மன்னனின் பார்வையை, அப்பெண்ணிடமிருந்து விலக்க எண்ணி, மன்னனின் தோள்களில் மயங்கி விழுந்தாள்...இல்லை..இல்லை..மயங்கியது போல நடித்தாள்.


உடன், மன்னனின் பார்வை அரசியின் மேல் செல்ல..அந்த இமைப் பொழுதில் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ந்து..அப்பெண் மோதிரத்தைப் பறித்துக் கொண்டு மூங்கிலின் உச்சிக்குச் சென்று விட்டாள்.


சில நொடிகள் கழித்து அரசி கண் விழித்தாள்.சற்று நிம்மதியடைந்த மன்னன், நிகழ்ச்சி முடிந்து..அனைவரும் அப்பெண்ணைப் புகழ்வதைக் கேட்டான்.


உடனே அவளை அருகே அழைத்து,அந்த வித்தையைத் தான் பார்க்கத் தவறிவிட்டதாகவும்..தனக்காக மீண்டும் ஒருமுறை செய்துக் காட்டும் படியும்..அதற்காக மீண்டும் ஒரு மோதிரத்தைத் தருவதாகவும் கூறினான்.


ஆனால் அப்பெண்ணோ மன்னனிடம், "மன்னா..ஆறுமாத அளவு சுவாச பந்தனம் எனும் மூச்சை அடக்கிப் அழகும் பயிற்சியைச் செய்து தேகத்தைப் பலப்படுத்திக் கொண்ட பின்னரே..என்னால் மீண்டும் இவ்வித்தையினியச் செய்ய முடியும்.அதை மீறி உடனே செய்தால் நன இறந்து விடுவது உறுதி" என்றாள்.


அதனைப் புரிந்து கொள்ளாத அரசனோ..உடனடியாகச் செது காட்டும்படி வலியுறுத்தினான்.


வேறு வழியின்றி..அரசனின் ஆணையால் சாகத் துணிந்த அப்பெண்..கழை ஏறி..மீண்டும் விச்சுளிப் பாயத் தயரானப் போது..ஆகாயத்தில் பறந்து செல்லும் பறவைகள் சிலவற்றினைக் கண்டாள்.


அப்போது சடையநாத வள்ளல் தன்னை கவிதைகள் எழுதச் சொன்னதையும், அடுத்த முறை அவரைக் காண் அவரும்போது ஒரு வண்டியில் அவற்றைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னதும் ஞாபகம்  வர..அந்த காரியத்தை செய்ய முடியாது போகிறதே..வள்ளலுக்கு தன் நிலையைத் தெரிவிக்க வேண்டுமே என அப்பறறைகளிடம் கீழே குறிப்பிட்டுள்ள செய்யுளைக் கூறுகிறாள்.  

“மாகுன்றவாய பொற்றோளான் வழுதிமன் வான்கரும்பின் பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங்காள்! புழற்கோட்டம் புகுவதுண்டேல் சாகின்றனளென்று சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே” 


 (“பறவைகளே பாண்டியனின் மனைவி, என் மேல் பொறாமை கொண்டு பாண்டியனைத் தன் பக்கம் திருப்பி, எனது அரிய வித்தையைப் பாராமல் இருக்கச் செய்து விட்டான். அதனால் நான் மீண்டும் அந்த வித்தையை இப்போது செய்து காட்டிச் சாகப் போகிறேன். நீங்கள் தொண்டை மண்டலத்தின் புழல் கோட்டத்திற்குப் போவீர்களானால், அயன்றை நகரில் வாழ்பவனும், எத்தகைய பொருள் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவனுமாகிய சடையநாதப் பிரபுவைக் கண்டு இங்கு நடந்த இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்” என்பது கருத்து)

இப்படிப் பாடி விட்டு வித்தையைச் செய்து காட்டி விட்டு அவள் இறந்து போனாள்.

இந்தச் செய்தியை தொண்டை மண்டலச் சதகம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:-

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்

நோகின்ற சிற்றிடை வேழம்

கூத்தி கொடிவரையில்

சாகின்றபோது தமிழ் சேர்

அயன்றைச் சடையன்றன்மேல்

மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக அமைகிறது.

இந்த வித்தையை மனக்கண்ணால் ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு பெரிய அரிய செயலைத் தமிழ்ப் பெண் ஒருத்தி செய்து காண்பித்திருக்கிறாள் என்பதை உணரலாம்.

மனித சக்தி எவ்வளவு எல்லையற்ற ஆற்றல் உடையது என்பதைக் காண்பிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக விச்சுளி வித்தை அமைந்துள்ளது அல்லவா?

  

Thursday, October 1, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -5" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)


 

அந்த விச்சுளிப் பாயும் பெண்ணீன் விச்சுளிப் பாய்ச்சலை மட்டுமின்றி..அவள் அழகைனையும் காண ஆடவர்கள் கண்கள் விரும்பிக் கொண்டிருப்பதை அவர்களுடன் வந்த மனைவியர்கள் உணர்ந்தார்கள்.


பாண்டியனின் மனைவியும்..மனதிற்குள் "அடடா..இவள் எவ்வளவு அழகு" என வியந்தாள்.அடிக்கடி மன்னனைப் பார்த்தாள்.ம்ன்னனாய் இருந்தால் என்ன, அவனும் ஆடவன்தானே! அவள் அழகை ஆசைத் தீர பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனின் கண்கள் வேறு எந்தப் பக்கமும் பாராது, அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பதை எண்ணிய அரசி அவனை தன் பக்கம் திருப்ப முயன்றாள்.


அந்த கழைக்கூத்தில் அவளின் ஒவ்வொரு விளையாட்டினையும் மக்கள் ரசித்தனர். இப்போது அவளின் விச்சுளிப் பாய்ச்சல் மட்டுமே மீதமிருந்தது.அதற்கான ஆயத்தங்களைக் குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.


ஒருவேளை ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால்..அதற்காக, பாதுகாப்பாக அவர்கள் ஒரு முரட்டுப் படுதா ஒன்றை பிடித்தபடி நின்றனர்.தவறி விழுந்தால் அதன் மீது விழலாம்.ஆனால், அதுவும் பாதுகாப்பானது என சொல்லிவிட முடியாது.


பாண்டிய மன்னன் தன் கையில் இருந்த மோதிரம் ஒன்றை ,ஒருவனிடம் கொடுத்து..அவள் பாயும் போது அதை வீசச் சொன்னான்.அப்படி அவன் வீசுவதை, அவள் பாய்ந்து பிடிக்க வேண்டும்.


அரசியாரோ, "மோதிரம் வேண்டாம்.வேறு ஏதேனும் கொடுக்கலாமே! வேண்டுமானால் என் அணிகலன்களில் ஒன்றினைத் தருகிறேன்" என்றாள்.


மன்னன் அவளை, "எனக்கு எதைக் கொடுப்பது எனத் தெரியும்..நீ பேசாமல் இரு" எனக் கடிந்து கொண்டான்.


வீசி எறியும் பொருள் அதைப் பிடிக்கும் அப்பெண்ணுக்கே சொந்தம் என்பதால் மன்னனின் மோதிரம் அவளுக்கு செல்வதை ராணி விரும்பவில்லை.


இதுநாள் வரை தன்னைக் கடிந்து கொள்ளாத மன்னன் இப்போது கடிந்து கொள்வதைக் கண்டு அரசியாரின் அச்சம் அதிகரித்தது.அப்பெண்ணை மன்னன் மனம் நாடுகிறது..ஒரு கழைக்கூத்தியை அவன் விரும்புவதா"  அரசியின் உடல் நடுங்கியது.


இப்போது அப்பெண் கம்பத்தின் உச்சியில் பாய்ச்சலுக்குத் தயாராய் ஏறிக் கொண்டிருந்தாள்.


அவள் ஏறும் நளினம் தான் என்ன?அவள் உடல் மெழுகால் ஆனதோ?அவள் வலிமையினைப் பார்த்தால், இரும்பின் உரம் இருக்க வேண்டும்.ஆனாலும் வளைவும், நெளிவும் கொடி போலத்தான் இருக்கிறது  என்றெல்லாம் அரசிக்குத் தோன்றியது.


அவள் இப்போது கம்பத்தின் உச்சியில் இருந்தாள்.


அரசன் கொடுத்த மோதிரத்தை கீழே ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.மீன் குத்திப் பறவையினைப் போல அவள் அந்த மோதிரத்தை அவனிடம் இருந்து பறித்துச் செல்ல வேண்டும்.


அப்போது, மன்னனின் பார்வையை அவளிடம் இருந்து விலக்க அரசியார் ஒரு தந்திரம் செய்தாள்..


அந்த தந்திரம்..எதிர்பாராத நிகழ்ச்சிகளெல்லாம் நடைபெற வித்திட்டவிட்டதை விதி என்று தானே சொல்ல வேண்டும்.