Friday, October 2, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -6" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

 



மன்னன் ஆவலுடன் பாய்ந்து அப்பெண் மோதிரத்தை எப்படிக் கைப்பற்றுகிறாள் என உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.


எந்நேரமும், அந்நிகழு நேரிடலாம் என்பதால்..மக்கள் கூட்டமும் நிசப்தமாய் அப்பெண்ணையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அச்சமயம், அரசி..மன்னனின் பார்வையை, அப்பெண்ணிடமிருந்து விலக்க எண்ணி, மன்னனின் தோள்களில் மயங்கி விழுந்தாள்...இல்லை..இல்லை..மயங்கியது போல நடித்தாள்.


உடன், மன்னனின் பார்வை அரசியின் மேல் செல்ல..அந்த இமைப் பொழுதில் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ந்து..அப்பெண் மோதிரத்தைப் பறித்துக் கொண்டு மூங்கிலின் உச்சிக்குச் சென்று விட்டாள்.


சில நொடிகள் கழித்து அரசி கண் விழித்தாள்.சற்று நிம்மதியடைந்த மன்னன், நிகழ்ச்சி முடிந்து..அனைவரும் அப்பெண்ணைப் புகழ்வதைக் கேட்டான்.


உடனே அவளை அருகே அழைத்து,அந்த வித்தையைத் தான் பார்க்கத் தவறிவிட்டதாகவும்..தனக்காக மீண்டும் ஒருமுறை செய்துக் காட்டும் படியும்..அதற்காக மீண்டும் ஒரு மோதிரத்தைத் தருவதாகவும் கூறினான்.


ஆனால் அப்பெண்ணோ மன்னனிடம், "மன்னா..ஆறுமாத அளவு சுவாச பந்தனம் எனும் மூச்சை அடக்கிப் அழகும் பயிற்சியைச் செய்து தேகத்தைப் பலப்படுத்திக் கொண்ட பின்னரே..என்னால் மீண்டும் இவ்வித்தையினியச் செய்ய முடியும்.அதை மீறி உடனே செய்தால் நன இறந்து விடுவது உறுதி" என்றாள்.


அதனைப் புரிந்து கொள்ளாத அரசனோ..உடனடியாகச் செது காட்டும்படி வலியுறுத்தினான்.


வேறு வழியின்றி..அரசனின் ஆணையால் சாகத் துணிந்த அப்பெண்..கழை ஏறி..மீண்டும் விச்சுளிப் பாயத் தயரானப் போது..ஆகாயத்தில் பறந்து செல்லும் பறவைகள் சிலவற்றினைக் கண்டாள்.


அப்போது சடையநாத வள்ளல் தன்னை கவிதைகள் எழுதச் சொன்னதையும், அடுத்த முறை அவரைக் காண் அவரும்போது ஒரு வண்டியில் அவற்றைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னதும் ஞாபகம்  வர..அந்த காரியத்தை செய்ய முடியாது போகிறதே..வள்ளலுக்கு தன் நிலையைத் தெரிவிக்க வேண்டுமே என அப்பறறைகளிடம் கீழே குறிப்பிட்டுள்ள செய்யுளைக் கூறுகிறாள்.  

“மாகுன்றவாய பொற்றோளான் வழுதிமன் வான்கரும்பின் பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங்காள்! புழற்கோட்டம் புகுவதுண்டேல் சாகின்றனளென்று சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே” 


 (“பறவைகளே பாண்டியனின் மனைவி, என் மேல் பொறாமை கொண்டு பாண்டியனைத் தன் பக்கம் திருப்பி, எனது அரிய வித்தையைப் பாராமல் இருக்கச் செய்து விட்டான். அதனால் நான் மீண்டும் அந்த வித்தையை இப்போது செய்து காட்டிச் சாகப் போகிறேன். நீங்கள் தொண்டை மண்டலத்தின் புழல் கோட்டத்திற்குப் போவீர்களானால், அயன்றை நகரில் வாழ்பவனும், எத்தகைய பொருள் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவனுமாகிய சடையநாதப் பிரபுவைக் கண்டு இங்கு நடந்த இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்” என்பது கருத்து)

இப்படிப் பாடி விட்டு வித்தையைச் செய்து காட்டி விட்டு அவள் இறந்து போனாள்.

இந்தச் செய்தியை தொண்டை மண்டலச் சதகம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:-

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்

நோகின்ற சிற்றிடை வேழம்

கூத்தி கொடிவரையில்

சாகின்றபோது தமிழ் சேர்

அயன்றைச் சடையன்றன்மேல்

மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக அமைகிறது.

இந்த வித்தையை மனக்கண்ணால் ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு பெரிய அரிய செயலைத் தமிழ்ப் பெண் ஒருத்தி செய்து காண்பித்திருக்கிறாள் என்பதை உணரலாம்.

மனித சக்தி எவ்வளவு எல்லையற்ற ஆற்றல் உடையது என்பதைக் காண்பிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக விச்சுளி வித்தை அமைந்துள்ளது அல்லவா?

  

No comments: