Wednesday, September 24, 2008

நடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் காரணம்

அரசியல் களத்தில் தனியொரு மனிதனாக நின்று, ஹீரோ ரேஞ்சில் போராடிக் கொண்டிருந்தார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அவரை காமெடி நடிகர் வடிவேலு எதிர்த்துக் குரல் கொடுத்து, ``ஒத்தைக்கு ஒத்தையா வாரியா'' என்ற ரீதியில் கேட்க ஆரம்பித்து விட்டார்.

அதிலும் வடிவேலு வீடு மற்றும் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், விஜயகாந்த் உள்பட அடையாளம் தெரியாத முப்பது பேரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. அதுவும் கொலை முயற்சி வழக்கு என்பதால் இப்பிரச்னை பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் பற்றி எரிகிறது.

அதற்குப் பதில் கூறியுள்ள விஜயகாந்த், `வடிவேலு தி.மு.க.வின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். பாவம் அவர்!' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூற, வடிவேலு கடுப்பாகி, `நானொன்றும் கைப்பாவையோ, கைப்பிள்ளையோ அல்ல. இப்படியெல்லாம் என்னைப் பற்றி அவதூறு பேசும் விஜயகாந்தால் பாதிக்கப்பட்டவன். அவர் தூண்டுதலால் என் வீடும் அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பால் என் மனைவியும் குழந்தைகளும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டார்கள். இதற்கெல்லாம் காரணமான விஜயகாந்தின் அடாவடிக்கு முடிவு கட்டத் தயாராகிவிட்டேன்' என்று கூறி ஆவேசப்பட்டார் வடிவேலு.

ஏன் இந்த ஆக்ரோஷம்? என்று வடிவேலுவிடமே விசாரித்தோம். மனிதர் பொரிந்து தள்ளிவிட்டார். ``இந்தப் பிரச்னை போன வருஷம், இதே செப்டம்பர் மாதம் ஆரம்பித்தது. விஜயகாந்த் நடித்த `பேரரசு,' `தர்மபுரி,' `சபரி' போன்ற படங்களில் என்னை நடிக்க கால்ஷீட் கேட்டார்கள். இப்படியான படங்களில் இவரை (விஜயகாந்தை) `வல்லவன், நல்லவன்' என்று சொல்லிப் புகழ்வதுடன், `நாளை தமிழகமும், முதல்வரும் நீதான்' என்றெல்லாம் வசனம் பேச வேண்டும் என்றார்கள். இதுபோன்று, பொய்யான வசனங்களைப் பேசுவதில் இஷ்டம் இல்லை என்று கூறியதுடன் உண்மையிலேயே என்னிடம் தேதிகள் இல்லாததால் இவர் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு என் மீது கடும் கோபம் வந்துவிட்டது போலும். இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் விஜயகாந்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.

இறந்தவர் வீடு விருகம்பாக்கத்தில் உள்ள என் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ளது. துக்கம் விசாரிக்க வந்தவர்களில் பெரும்பாலானோர், என் அலுவலக வாசலில் தங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். அது எனக்குத் தொந்தரவாக இருந்ததால் அந்த வாகனங்களை எடுக்கச் சொன்னதற்கு, மறுத்து கன்னாபின்னாவென்று பேசி, அடிக்க வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லாம் விஜயகாந்த் கட்சியின் நிர்வாகிகளாக இருந்தவர்களாம். அவர்கள் என்னிடம், நான் கால்ஷீட் கொடுக்காததைக் கூறி வம்பு பேசி, என் அலுவலகத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுபற்றி, புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் போன என்னை நள்ளிரவில் மூன்று மணிநேரம் உட்கார வைத்து நோகடித்ததெல்லாம் பழைய கதை. அதுபற்றி அப்போது விரிவாகவே உங்கள் `குமுதம் ரிப்போர்ட்டரில்' என் பேட்டியாகச் சொல்லியிருக்கிறேன்.

அந்தத் தகராறு குறித்து நடந்து வரும் விசாரணை இப்போது சைதாப்பேட்டை கோர்ட்டில் நடக்கிறது. என் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் பதின்மூன்று பேரை அடியாளம் காண்பிப்பதற்காக, கோர்ட்டுக்குப் போக வேண்டிய நிலையில், இப்போது மறுபடியும் என் வீட்டையும் அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க விஜயகாந்தின் தூண்டுதலில் நடந்த விஷயம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மக்களைச் சிரிக்க வைக்கப் பாடுபடும், என்னை பாதிப்படைய வைப்பவர், மனிதனே அல்ல'' என்றார் வடிவேலு.

நடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் காரணம் என்று எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?

``கைப்புண்ணுக்கு எதற்குக் கண்ணாடி? இப்போதும் தாக்குதல் நடத்தியவர்கள், விஜயகாந்த் பெயரைச் சொல்லி `வாழ்க' கோஷம் போட்டார்கள். `விரைவில் முதல்வர் ஆகப்போகும் எங்கள் தலைவரை எதிர்க்கக் கூடாது. மீறினால் வீட்டைத் தீ வைத்துக் கொளுத்துவோம். குண்டு வைத்துத் தகர்ப்போம்' என்றெல்லாம் பேசியதை இங்குள்ள ஏரியா மக்கள் பலரும் காது கொடுத்துக் கேட்டார்கள். இதற்கு மேலும் இது விஜயகாந்த் ஆட்களின் வேலை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? இப்படியெல்லாம் செய்யும் போக்கு என்பது விஜயகாந்தின் கோழைத்தனத்தையும் கையாலாகாத்தனத்தையும் பெட்டைத்தனத்தையும்தான் காட்டுகிறது. இவரின் வீரத்தை, அரசியல் கட்சிகளிடம் காண்பிக்கட்டும். மக்களிடம் காண்பிக்கட்டும். மாறாக, என்னைப் போன்ற சாதாரண மானவர்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை! வெட்கங்கெட்ட அரசியலை வெளிப்படுத்துகிறார், விஜயகாந்த்''.

இவ்வளவு ஆவேசமாக நீங்கள் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் பின்னணியாக இருப்பது ஆளும் தி.மு.க.தான் என்றும் இதற்காக, ஆற்காடு வீராசாமி மற்றும் ஸ்டாலின் போன்றோர் உங்களை அழைத்துப் பேசியதாகவும் கூறுகிறார்களே?

``இப்படியெல்லாம் நீங்கள் கேட்பதே, மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. உண்மையில் நான் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுக்கும் வேண்டியவனாகவே இருக்கிறேன். அண்ணா தி.மு.க. அம்மாவுக்கும், தி.மு.க. ஐயாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் மட்டுமின்றி இங்குள்ள ஒவ்வொரு கட்சித் தலைவரின் குடும்பத்திற்கும் அறிமுகமானவனாகவும் வேண்டியவனாகவும் இருக்கிறேன். இப்படியெல்லாம் இருந்தாலும் நான் எந்தக் கட்சிக்கும் அனுதாபி கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் என்னை யாரோ பயன்படுத்துவதாக அபாண்டமாகக் கூறுவது அநியாயம்; அக்கிரமம். உண்மையில் போன வருஷம் என் அலுவலகத்தைத் தாக்கியவர்களை கோர்ட்டில் அடையாளம் காண்பிக்க இருந்தேன். இதைத் தடுக்கவே என்னை மிரட்டிப் பார்க்கிறார்கள். இதன் மூலம், என்னை ஓர் எதிரியாகவே பாவிக்க ஆரம்பித்துவிட்டார். விஜயகாந்திற்கு கேடுகாலம் தொடங்கிவிட்டது. இனி, என் வாழ்க்கையில் ஒரே எதிரி என்றால், அது இந்த விஜயகாந்த் தான். இவரின் அராஜகப் போக்கைத் தடுக்க எல்லா வழிகளையும் கையாளப் போகிறேன்''.

அப்படியானால், நீங்களும் அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் இறங்கப்போகிறீர்களா?

``தேவைப்பட்டால் அதற்கும் தயாராவே இருக்கிறேன். இவரின் போக்கைத் தடுக்க, தேவைப்படும் ஆதரவை இங்குள்ள ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் கேட்பேன். எந்த இடத்திலும் இவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டுமென்றாலும், தயாராகி விட்டேன். ஒரு காமெடியன் குடும்பத்தையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் மகாபாவத்தைச் செய்யும் ஓர் அரசியல்வாதியை எதிர்ப்பதே என் ஒரே லட்சியம்''.

அதிருக்கட்டும், இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கத்தில் இருந்து யாராவது உங்களுடன் ஆறுதலாகவோ அக்கறையாகவோ பேசினார்களா?

``அதை ஏன் கேட்கிறீர்கள்? நடிகர் சங்கத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது. இப்போதைக்கு காவல்துறை மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது''.

ஆனால் தி.மு.க. அரசுதான் உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவதாக விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?

``இதெல்லாம் குழந்தைத்தனமான குற்றச்சாட்டு. இந்த அரசு, மக்களுக்கு நல்லது பண்ணவே நினைத்துக் கொண்டிருக்குமே தவிர, இவரை ஒழிப்பதற்கு ஒருபோதும் யோசனை செய்யாது. அதிலும், இந்த அரசு என்னைப் பயன்படுத்தி இவரை அழிக்கத் திட்டமிடுவதாக கற்பனை செய்வது ரொம்ப ஓவராக இருக்கு. உண்மையில் நடந்த தவறுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை சட்டத்தின் முன் நிரூபிக்கட்டும். அதைச் செய்யாமல் அடுத்தடுத்து என்னையும் என் குடும்பத்தையும் தாக்கு.ம் வேலையை அவர் நிறுத்திக் கொள்ளட்டும்!'' என்று சொல்லி முடித்துக் கொண்டார் வைகைப்புயல்.

இவ்வளவு அதிரடியாக பல விஷயங்களைப் பேசிய வடிவேலுவின் குற்றச்சாட்டுகள் பற்றி விஜயகாந்தின் ரியாக்ஷனை அறிய முயன்றோம். நாள் முழுவதும் அவரைச் சந்திக்க முயன்ற நிலையில்தான் அவர் நிருபர்களை அழைத்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், ``பரபரப்பான செய்திகள் என்னைப்பற்றி வந்துள்ளதால் விளக்கம் கொடுக்க உங்களை எல்லாம் சந்திக்கிறேன். நான் யாரையோ தூண்டிவிட்டு வடிவேலுவைத் தாக்கியதாகக் கூறியிருக்கிறார்கள். அது மிகவும் தவறான செய்தி. இது ஆளுங்கட்சியின் தூண்டுதலால் போடப்பட்ட பொய்ப் புகார் மற்றும் பொய் வழக்கு என்றுதான் கூறுவேன். இதற்குப் பலிகடா ஆகியுள்ளார், வடிவேலு.

எங்கள் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், ஆளுங்கட்சியினர் சுமத்தியுள்ள வீண்பழி. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்னை சந்தித்ததில், அப்செட்டாகி குறுக்குப் புத்தியைப் பயன்டுத்தி என் இமேஜைக் குறைக்க முயல்கிறார்கள். இதற்கெல்லாம், அடிப்படைக் காரணம் நான் இதுவரை `கலைஞர்' என்று குறிப்பிட்டு வரும் கருணாநிதிதான். இப்படியெல்லாம் நடப்பதைப் பார்க்கும் போது `அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழியை நினைவுப் படுத்தி அமைதி காக்கிறேன்'' என்று விளக்கம் அளித்தார்.

விஜயகாந்தின் இந்த தன்னிலை விளக்கப் பேட்டியை சன் நியூஸ் சேனல் நேரடியாக ஒளிப்பரப்பியது தனிக்கதை. இந்நிலையில் இந்தப் பேட்டி முடிந்ததும் விஜயகாந்திடம் ஒருசில வார்த்தைகள் நம்மால் பேசமுடிந்தது.

``இந்த வழக்கில் மட்டுமல்ல. நாளை தமிழகத்தில் எந்த வழக்கு வந்தாலும் அதிலும் என்னைச் சேர்க்கலாமா? என்று யோசிப்பார்கள். இப்படியெல்லாம் என்னை யாரும் ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. என் தைரியத்தைப் பறிக்க எந்த சக்தியாலும் முடியாது. ஒருவேளை இந்த ஆட்சியாளர்கள், என்னைக் கைது செய்து சிறை வைத்தால் அதையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். அதுபோல் நடந்துவிட்டால், தி.மு.க. மற்றும் அண்ணா தி.மு.க. போல, எங்களது தே.மு.தி.க. தொண்டர்கள் பஸ்களைக் கொளுத்தவோ, ரயில் மறியல் செய்யவோ, பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதோ நடக்கவே நடக்காது. இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது என்பதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டம் ஒழுங்கு அறவே இல்லை என்பதை நிரூபிக்க அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதுடன், தமிழகத்தில் கொடுங்கோலாட்சி ஒழிய வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள்'' என்று நம்மிடம் ஆவேசப்பட்டார் கேப்டன்.

ஒரு சாவு வீட்டில் நடந்த கைகலப்புச் சம்பவம், தே.மு.தி.க. தலைவர் கேப்டனையும் காமெடி நடிகர் வைகைப் புயலையும் நேரடியாகவே மோதவிட்டிருக்கிறது. மதுரைக்காரர்களான இருவரும், மோதிக்கொள்ள `அவரது படத்தில் நான் நடிக்க மறுத்ததுதான் காரணம்' என்று வடிவேலுவும் `இதற்குக் காரணம் ஆளுங்கட்சியின் தூண்டுதல்' என்று விஜயகாந்தும் மாறிமாறி பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். தே.மு.தி.க.வின் வளர்ச்சியினால் கடுப்பாகியிருக்கும் திராவிடக் கட்சிகளும் கூட்டணிக்கு சம்மதிப்பாரா? என்று எதிர்பார்த்திருந்த தேசியக் கட்சிகளும் இந்த விவகாரத்தை அரசியலாக்க ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. (நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்)

No comments: