Thursday, January 31, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் - 11 (அழுகையில் நகை )





நகையும்..அழுகையும் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவைகள் ஆகும்.பிற சுவைகளோடு நகைச்சுவை கலத்தல் அரிதாகும்.ஆயின் அழுகைச் சுவையோடு..நகைச்சுவையைக் கலந்து கொடுப்பது இலக்கியச்சுவை ஆகும்.இரு முரண்பட்ட சுவையை கம்பர் சித்தரிக்கிறார்.ராமன் சிரித்ததை எண்ணி, அசோகவனத்தில் சீதை அழும் காட்சி.

ராமன்..ஏன் சிரித்தான்..எங்கு சிரித்தான்..

ராமனும் , சீதையும் லட்சுமணன் தொடரக் காடு செல்கின்றனர்.வழியில் ஏழி எளியவர்க்கு வேண்டியவற்றை வாரி வழங்கிய படி செல்கிறான் ராமன்.

ராமனிடம்..வேண்டுவோர்..வேண்டியதைப் பெரும் தருணம்..திரிசடன் என்னும் முனிவன் வெளியே போயிருந்தான்.நீண்ட நேரம் கழித்து இல்லம் திரும்பிய அவனை..அவன் மனைவி..'காடு செல்லும் ராமனிடம்..எல்லோரும் எல்லாம் பெற்று செல்கின்றனர்..நீ எங்கே போனாய்..நீயும் அவனைத் தேடிப்போய் எதாவது வாங்கிக்கொண்டு வா..' என துரத்துகிறாள்.

ராமன் செல்லுமிடம் அறிந்து முனிவனும் விரைந்து ராமன் முன் நின்று..'எல்லோருக்கும் எல்லாம் தருகிறாயே..எனக்கும் ஏதேனும் ஈ.' என ஈ என இளிக்கிறான்.

ராமன் காடு செல்வது பற்றி அவனுக்குக் கவலை இல்லை..தனக்கு ஏதேனும் கிடைக்க வேண்டுமென்ற கவலை.'அங்கே அரண்மனை பசுக்கள் ஆயிரக்கணக்கில் மேய்கின்றன..அவற்றுள்..இரண்டு அல்லது மூன்று பசுக்களை எடுத்துச் செல்' என்கிறான் ராமன்.

ஆனால் பேராசை முனிவனோ..தன் கையிலுள்ள தடியைச் சுற்றி எறிந்தால் அது எங்கு சென்று விழுகின்றதோஅதுவரையில் உள்ள பசுக்களை எனக்குக் கொடு..என்கிறான்.

மண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை ஒழித்ததாகக் கூறும் முனிவன் மாட்டாசை பிடித்து அலைகிறான்.ராமனும்..உன் ஆசையை நிறைவேற்றிக் கொள் என்கிறான்.

முனிவன் முற்கி..முனைந்து முழு வீச்சில் கைத்தடியை வீச..ஐநூறு பசுக்களுக்கு அப்பால் சென்று விழுந்தது தண்டம்.அப்போதும் ஆசை தீராது..எல்லாப் பசுக்களையும் கவரும் வலி தனக்கில்லையே என வெறுத்துக் கொண்டான் முனிவன்.முற்றும் துறந்தவன்.

ஆனால்...இப்போது நாட்டையும்..அரசையும்,முடியையும் துறந்து பற்றற்று நிற்கும் உண்மை முனிவனான ராமன் ,.ஐநூறு பசுக்களைப் பெற்றும் ஆசை ஒழியா போலி முனிவனின் நிலைக் கண்டு வாய் விட்டு சிரித்தான்.இந்த அரியக் காட்சியை..

பரித்த செல்வம் ஒழியப் படருநாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன்
கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால்
(கம்ப ராமாயணம்..சுந்தர காண்டம்)

என்று தன் கவியில் காட்டுகிறார் கம்பர்.ராமன் சிரித்த காட்சியை எண்ணி சீதை அழுதாலும்..கம்பரின் இக்காட்சி..அழுகைக்கிடையே நமக்கு சிரிப்பைத் தருகிறது..அழுகைச் சுவையோடு.நகைச்சுவை கலந்த அழகுக் காட்சி இது.


Wednesday, January 30, 2013

தாமதமான நீதி..மறுக்கப்பட்ட நீதியாகும்..(விஸ்வரூபம்)




ஜனவரி 11 ஆம் நாள் வெளியாக வேண்டிய  விஸ்வரூபம் டி.டி.எச். பிரச்னையால் 25 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப் பட்டது.

இதனிடையே..இஸ்லாமிய சகோதரர்கள் போராட்டம் காரணமாக..படத்தை தமிழக அரசு தமிழகத்தில் தடை செய்தது.இதனால்..மற்ற மாநிலங்களில் வெளியான இப்படம் ஆங்காங்கே ஏற்பட்ட சச்சரவுகளால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

விழுப்புரம் அருகே இப் படத்தின் திருட்டி டிவி டி கிடைத்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி..இப்படத்தைப் பார்த்துவிட்டு தடையை நீக்கினாலும்..அவசர அவசரமாக தமிழக அரசு செயல் பட்டு உயர்நீதி மன்ற பெஞ்ச்சிடம் மீண்டும் தடையுத்தரவைப் பெற்றது.கமல் உச்ச நீதிமன்றம் போகப் போவதாகத் தகவல்.அங்கும் உடனடியாக இவ் வழக்கு எடுக்கப்படுமா எனத் தெரியவில்லை.

கமல் இது குறித்து அறிக்கையில்..தன் ஆள்வார்பேட்டை வீட்டை அடமானம் வைத்து இப்படம் எடுத்ததாகவும்...இனி தான் தங்கக் கூட இடமில்லை என்று பொருள் பட பேசினார்.மேலும்..இதே நிலை நீடித்தால்..தான் மதச்சார்பற்ற மாநிலத்திற்கு குடி போகவும் தயார் என்றுள்ளார் வேதனையுடன்.

95 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் தலைவிதி இப்போது கேள்விக்குறியாய் உள்ளது.

சாதாரணமாக கமல் அநாவசியமாக அரசியலிலோ..அரசியல் சர்ச்சைகளிலோ ஈடுபடுபவர் இல்லை.அரசியலுக்கு நான் லாயக்கில்லை என்றும் அறிவித்துள்ளார்..

அப்படிப்பட்டவருக்கு...இந் நிலை ஏன்?

இதற்கான காரணம் பல கூறப்பட்டாலும்...உண்மை விரைவில் வெளிவரும்.



Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் படத்திற்குத் தடை நீங்கியது.. தமிழகம் முழுவதும் திரையிட உயர்நீதிமன்றம் அனுமதி




 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்தார். இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வந்தார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிலையில்இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார். நள்ளிரவுக்கு 2 மணி நேரததிற்கு முன்பு வந்த தீர்ப்பு ஆனால் தீர்ப்பு 10 மணிக்குத்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதியிடமிருந்து பின்னர் அறிவிப்பு வந்தது. இதனால் தீர்ப்பை அறியக் காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஏன் இத்தனை தாமதம் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில் ஒரு வழியாக பத்து மணிக்கு மேல் தீர்ப்பு வெளியானது. திரையிட அனுமதி அதன்படி விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 24ம் தேதி தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையிடலாம் என்று நீதிபதி அறிவித்தார். மேலும் தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடமுடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். பெருமளவில் போலீஸ் குவிப்பு முன்னதாக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கோர்ட் வளாகம் தவிர கோர்ட்டுக்கு வெளியேயயும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கோர்ட்டுக்குள் குழுமியிருந்த வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். உயர்நீதிமன்றத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 144 தடை உத்தரவுக்கும் தடை அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவுக்கும் தடை விதித்து நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்

(நன்றி -தட்ஸ்தமிழ்)



(As soon as the order was pronounced, Additional Advocate-General P.H. Arvindh Pandian wanted the judge to suspend his own order until Wednesday morning. However, he declined the request.
Advocate-General A. Navaneethakrishnan and Mr. Pandian rushed to the residence of Acting Chief Justice Elipe Dharma Rao in a midnight effort to get the order suspended. Later, the AG told reporters that Mr. Justice Dharma Rao had permitted them to mention the matter on Wednesday on moving an appeal before a Division Bench.

_the Hindu )
Latest News
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.

வாய் விட்டு சிரிங்க...




1) வெளிநாட்டிலே இருந்து தலைவருக்கு சென்ட் வாங்கி வந்தேன்..அதற்கு எம்மேலே அவருக்கு ஒரே கோபம்
ஏன்
சென்ட் எல்லாம் எனக்குப் பிடிக்காது ஏக்கர் தான் பிடிக்கும்னு உனக்குத் தெரியாதான்னு கேட்கறார்

2)நோயாளி-(ஆபரேஷன் தியேட்டரில்) டாக்டர் ஏ.சி., யை குறையுங்க..ஒரே குளிருது
டாக்டர்- உங்க உடம்பு மார்ச்சுவரி குளிரை தாங்க தயார் படுத்தறோம்

3)அரசர்- (அமைச்சரை நோக்கி) உம்மை முப்படைக்கு தளபதி ஆக்கணுமா? அதுக்கு உங்க கிட்ட என்ன தகுதி இருக்கு
அமைச்சர்- எனக்கு சொறி, சிரங்கு,தேமல் மூன்றும் உள்ளது மன்னா

4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்

5)போலீஸ் கான்ஸ்டபிள்-(இன்ஸ்பெக்டரிடம்) சார்..இன்னிக்கு கபாலி மாமூல் 150 ரூபாய் கொடுத்தான்
இன்ஸ்- அப்போ..ஆளுக்கு ஃபிஃப்டி ஃபிஃப்டி
போலீஸ் கான்ஸ்- அப்போ..மீதி ஃபிஃப்டியை என்ன பண்றது

6)Package டூர் போயிட்டு இவ்வளவு சீக்கிரம் ஏன் திரும்பிட்டே
Baggage எல்லாம் காணாம போயிடுச்சு


Monday, January 28, 2013

முறித்துக் கொள்ளவாநட்பு..??


நாம் ஒரு பதிவிடும்போதே அதை பலர் படிக்க வேண்டும் என விரும்புகிறோம்.சக பதிவர்கள் நூற்றுக்கணக்கில் வந்து படிக்கையில் மனம் குதூகலிக்கிறது.
அடுத்ததாக மனம் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறது.
நாம் மற்றவர்கள் வலைப்பூவிற்கும் சென்று..அவர்கள் இடுகையைப் படித்து..பின்னூட்டம் இட்டால்..அந்த பதிவரும் நம் வலைப்பூ பக்கம் வந்து..நம் இடுகையையும் படித்து பின்னூட்டம் இடுவர்.
சுருங்கச் சொன்னால்..ஒத்தையடி பாதை அல்ல இது..நீ என்ன செய்கிறாயோ..அது உனக்குத் திருப்பிக் கிடைக்கிறது.
இந்த கூற்றை யாரும் மறுக்க முடியாது..அப்படி மறுப்பவர்கள் உண்மை பேசுபவர்களாக இருக்க முடியாது.
அடுத்தாக..இடுகையும் படிக்கின்றனர்,பின்னூட்டமும் வருகிறது..இனி வாசகர் பரிந்துரையில் இடுகை வர ஏங்குகிறோம்.யாரேனும் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தால்..தமிழ்மண வாசகர் பரிந்துரை நிச்சயம்.நிலைமை இப்படியிருப்பதால் தான் பிறந்த நாள் வாழ்த்துகள்,கட்சி சம்பந்த பட்ட இடுகைகள்,சினிமா இடுகைகள் (திரைமணத்தில் இப்போது) பரிந்துரையில் பரிந்துரைக்கப் படுகின்றன.
இந்நிலையில்..நமக்கு வரும் பின்னூட்டங்கள் நம் எதிர்பார்ப்புக்கு இருக்க வேண்டும்..நம் எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும் என எண்ணுவது தவறாகிறது.
எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்துக் கொண்டவர்கள் இருப்பர்.
நம் இடுகையை பாராட்டுவதை மகிழ்ச்சியுடன் ஏற்பது போல மாற்று கருத்துகளையும் மகிழ்வுடன் ஏற்க மனம் மறுக்கிறது.
சமயங்களில் மாற்று கருத்து இடுவோரும்..வரம்பு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. இப்போது இடுகைகள் போதாது என buzz,facebookஆகியவற்றி


லும் உடனுக்குடன் சூடாக பின்னூட்டங்கள்,சாட் பண்ணுதல் மூலம் கிடைத்து விடுகிறது.
முகம் அறியாமலேயே..நட்பு வட்டம் பெருகுகிறது.மனித நேயம் வளர்கிறது என்றெல்லாம் இருந்தாலும்..சமீப காலங்களில் சில சமயங்களில் வரம்புகள் மீறப்படுகின்றன.
சமீபத்தில் இப்படி தேவையில்லாமல் ஒரு சர்ச்சை உருவாகி..நான் இப்படித்தான் விமரிசிப்பேன்..வேண்டுமானால் நட்பை முறித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பொருள் படும் படி எழுத ஆரம்பித்து விட்டனர்.உங்களுக்கு நட்பு கொள்வதற்கும்,வேண்டாம் எனில் முறித்துக் கொள்ளச் சொல்லவும் சுதந்திரம் இருக்கிறது..அந்த தனி மனித சுதந்திரத்தை..இல்லை என்று சொல்லவில்லை..ஆனால் அதே நேரத்தில் உங்கள் மீது உள்ள தவறையும் உணருங்கள்.
நினைத்தபோது நட்பு கொள்ளுதலும் நினைத்த போது முறித்துக் கொள்வதும் தான் நட்பிற்கு அடையாளமா?
யாருக்காகவோ..அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா?
மனம் வருந்துகிறது..
(மீள் பதிவு)

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - விமரிசனம்

                                     


நான் தற்போது அமெரிக்காவில் இருப்பதால்..24 ஆம்தேதியே இரவு எட்டு மணிக்கு விஸ்வரூபம் பிரீமியர் ஷோ பார்க்கமுடிந்தது.

கதையை எழுதினால்தான் விமரிசனம் என்றால் இது விமரிசனம் அல்ல.

விஸ்வனாதன் என்னும் ஒரு பார்ப்பன கணவன்..நடனமாடிக்கோண்டு காலத்தைத் தள்ளுகிறான்.அவன் மனைவி நியூக்கிளியர் ஆன்காலாஜியில் டாக்டர் பட்டம் பெற்றவள்.அவள் வேலை செய்யும் நிறுவன முதலாளியை விரும்ப, விவாகரத்திற்கு வழி தேடுகிறாள்.ஆகவே, தன் கணவனைப் பற்றி அறிய, தனியார் துப்பறியும் நிபுணரை கண்காணிக்கச் சொல்கிறாள்.அப்போது தன் கணவன் பிராமின் அல்ல முஸ்லிம் என அறிகிறாள்.\

அதற்குப் பிறகு..நாம் பார்க்குக் காட்சிகளே...இப்படத்தைப் பற்றிய சர்ச்சைக்குக் காரணங்கள்.ஆனால்..உண்மையில்..இஸ்லாமை பழித்தோ..இஸ்லாமிய சகோதரர்களை மட்டமாகவோ காட்டவில்லை என உறுதியாகக் கூறுகிறேன்.

கமல்....

ஆம்..இந்தப் பெயருக்கு அர்த்தம்  சாதனை நாயகன் என்றிருக்குமோ..

தமிழ்ப்படம் ஒன்று ஹாலிவுட் தரத்திற்கு எடுக்க நினைத்திருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவ்வளவு மெனக்கெட்ட கமல்..இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி...நம்மை எந்த கேள்வியையும் கேட்கவிடாமல் செய்திருக்கலாம்.ஆம்..விடை தெரியா பல கேள்விகள் இப்படத்தில் நமக்குத் தோன்றுகிறது (ஒரு வேளை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரோ)
 .

படத்திற்கு பலம் கமலின் நடிப்பு, மற்றும் படத்தொகுப்பு.

மற்றபடி, நடித்துள்ள அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.ஆங்காங்கு சற்றே  இதழ் சற்று விரியும் நகைச்சுவை வசனத்தில்..அதே சமயம் அவை சற்று விரசமாகவும் இருப்பதை மறுக்கமுடியாது.

படத்தின் கலை இயக்குநருக்கு பாராட்டு.

இப்படத்திற்கு இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ...அமைப்புகள் தான் காரணம் எனத் தோன்றுகிறது.

படத்தில் கமலைத் தவிர, நமக்கு பரிச்சியமானவர் ஆண்ட்ரியா மட்டுமே! கதாநாயகி பூஜாகுமார் அழகாகவும் இருக்கிறார்..அசட்டுத்தனமாகவும்,அதே சமயம் புத்திசாலியாகவும் நன்கு நடித்துள்ளார்.வில்லன் ஒமர் பாத்திரத்தில் ராகுல் போஸ் கச்சிதம்.

ஹாலிவுட் தரத்தை எண்ணியவர்..கடைசி சில காட்சிகளில் மசாலா பட லெவெலுக்கு ஏன் சென்றார்..புரியவில்லை.

படம் கண்டிப்பாக ஓடும்..ஓட வேண்டும்..

இப்படம் ஓடவில்லையெனில்..இனி..கமலும்..சாதிக்க வேண்டும் என்னும் வெறியை அடக்கி விட்டு...மைசூர் பா தின்னலாமா? என்று படமெடுக்கலாம்.

60 மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் படம் தேறிவிடும்.

டிஸ்கி - டி டி எச் செலவிற்கு நான் படம் பார்த்துள்ளேன்.ஆம்..இப்படத்தைப் பார்க்க நான் ஏறக்குறைய 800 ரூபாய் டிக்கெட் வாங்கியுள்ளேன்.ஹி..ஹி..டிக்கெட் 16 டாலர்..

Thursday, January 24, 2013

விஸ்வரூபம்..தணிக்கைச் சான்றிதழ்









விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியவர்களில் முதல் பெயர் ஒரு இஸ்லாமிய சகோதரருடையதே!

Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதித்தது சரிதானா...




உங்கள் எண்ணங்களை கமெண்டாக இந்த பதிவில் பதிவு செய்யுங்கள்...

புத்தகக் கண்காட்சியும்...பிரபல எழுத்தாளர்களும்..




புத்தகங்கள் படிக்கும் வழக்கம் மக்களிடையே குறைந்துவிட்டது என்னும் புலம்பல் அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தாலும்..புத்தகக் கண்காட்சிக்கு வருகின்ற கூட்டம் சற்றும் குறைவதில்லை.தவிர்த்து..கண்காட்சி காலத்தில் வெளியிடப் படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

எழுத்துகள்..குறிப்பாக பல பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகள், நம்மை எப்படி கட்டிப் போட்டு விடுகின்றன.பல பிரபல எழுத்தாளர்கள் அமரர் ஆன நிலையிலும் சரி, எழுதுவதை நிறுத்திக் கொண்டுவிட்ட போதும் சரி..நம்மால் அவர்கள் எழுத்தை மறக்கமுடிவதில்லை.

உதாரணத்திற்கு..கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கியின் நாவல்கள். அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன்..எத்தனை முறை வார இதழில் வந்திருந்தும்..பல பதிப்பகங்கள் புத்தகமாக அதிக விலையிலும் சரி, மலிவு பதிப்பாகவும் சரி வெளியிட்டிருந்த போதும்..கண்காட்சிகளில் முக்கியமாக பலரால் வாங்கப்பட்டுக் கொண்டே இருக்கும் புத்தகமாகும்.

கவியரசு கண்ணதாசனின் தித்திக்கும் பாடல்கள், எழுத்துக்களிடையே..மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டு இருப்பது 'அர்த்தமுள்ள இந்து மதம்' .மக்கள் அள்ளிக்குவிக்கும் புத்தகங்களில் ஒன்று.

சாண்டில்யனின், கன்னி மாடமும், கடல்புறாவும் இன்னமும் வேகமாக பறந்து கொண்டிருக்கின்றன.

தேவனின் கதைகள்..இன்னமும் உம்மணாமூஞ்சிகளை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

சுஜாதாவின் எழுத்துகள்..மக்களை வசீகரித்துக் கொண்டிருக்கின்றன இன்னமும்.

தி ஜா ரா வின் மரப்பசு, நளபாகம்,மோகமுள் மீதான மோகம் தீரவில்லை வாசகர்களுக்கு.

சுந்தர ராமசாமியின் புளியமரத்தை மக்கள் இன்னமும் விரும்புகின்றனர்.

பாரதிக்கும், வள்ளுவனுக்கும் என்றுமே இங்கு இடம் உண்டு.

சரி..இன்றுள்ள எழுத்தாளர்கள் புத்தகங்கள் எப்படி..

ஜெயகாந்தனின் புத்தகங்கள் இன்னமும் விலை மதிப்பில்லாதவையாக விருப்பப்படுகின்றன.

சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன், லட்சுமி ஆகியோர்  நாவல்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் மக்கள் வீடுகளில் குவிக்கப்படுகின்றன.

வண்ணதாசன், எஸ்.ரா., நாஞ்சில் நாடன் இப்படி அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர் ஆதரவு உண்டு.

கண்காட்சியில்..வெளியே ஒரு நடிகரைக் கண்டால் மயங்கும் அளவுக்கு தங்கள் விருப்ப எழுத்தாளரைக் கண்டால் மக்கள் மகிழ்கின்றனர்.

ஐயா ..பாரதி நீ இருந்திருந்தால் இன்று என்ன கூறியிருப்பாய்..

பேதை சொன்ன 'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்ற வார்த்தைகளுக்கு பதிலாக..'எட்டுத் திக்கிலிருந்தும் மக்கள் கூடி கண்காட்சிக்கு வந்து தங்கள் அறிவு,இலக்கியத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுமட்டும் தமிழ் சாகாது 'என உரைத்திருப்பாய்..

தமிழுக்கு..கடைசித் தமிழன் உள்ளவரை மறைவு இல்லை.

Tuesday, January 22, 2013

வாய் விட்டு சிரிங்க...




1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்

2)தலைவர் தன் சின்ன வீட்டை ஏன் தன் வீட்டு மாடியிலேயே குடியேற்றிருக்கார்
யாரோ அவர்கிட்ட 'keep it up ' ன்னு சொன்னாங்களாம்

3)என்னோட சமூகக் கதையைப் படிச்சுட்டு மர்மக்கதைன்னு சொல்றீங்களே
திரும்பத் திரும்பப் படிச்சும் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியாமல் மர்மமாய் இருக்கே

4)எங்கப்பா சபாநாயகரா இருக்கறது தப்பாப் போச்சு
ஏன்
என் கல்யாணத் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிட்டார்

5)நம்ம ஃப்ளாட்டும் அடுத்த ஃப்ளாட்டும் பக்கத்திலே பக்கத்திலே இருக்கறதாலே ஒரே problem
ஏன் அப்படி சொல்ற
அவங்க டிவி சேனலை மாத்தினா..நம்ம டிவிலேயும் சேனல் மாறுதே

6)டாக்டர் என் கணவருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கு
அதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப் படறீங்க
மத்தியானம் ஒரு மணிக்கு ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு நடந்து வந்துடறார்


கணப்பொழுது ...

                                       
கணநேரத்தில்
நிகழ்ந்து விடுகிறது

*** *** ****

நடக்கையில்
கணப்பொழுது தன்
கனத்தை யோசித்தான்
கணப்பொழுது
கனம் நிறைந்ததாயிற்று நினைவு
கணத்தில் தலைசுற்ற
கனவான் விழுந்தான்
கணப்பொழுதில் 108 வர
கனவோ என எண்ணினான்
கணப்பொழுது தாமதித்திருந்தால்
கனத்திருப்பான் உடல்
மருத்துவமனையில்
கணப்பொழுதில் முதலுதவி

*** **** ****
கணப்பொழுது தவறு
எங்காவது
யாருக்காவது நடக்கிறது
என்றான் கிங்கரன்
காலனிடம்

Monday, January 21, 2013

விஸ்வரூபம்..




"பாலு..இங்கே வைச்சுட்டுப் போன ஆயிரம் ரூபாய் எங்கே? நீ எடுத்தியா?..இல்லையா..? சொல்லுடா...வாயில என்ன கொழுக்கட்டையா?..பதில் சொல்லேண்டா"

கல்லுளிமங்கன் போல பாலு நின்றுக்கொண்டிருந்தான்..சிவராமனின் பொறுமை மெல்ல விடை பெற்று கொண்டிருந்தது.

"பளார்" என பாலுவின் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது.

பாலு..அப்பவும் ..வாயைத் திறக்காமல் ..அடி விழுந்த கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தான்.

'இதோ பார்..உனக்கு அஞ்சு நிமிஷம் டயம் தரேன்..குற்றத்தை ஒத்துக்க..இல்ல..என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது..' என்றவாறு சிவராமன் கல்லாவில் வந்து அமர்ந்தார்.

ஹோட்டல் ராஜன்....உரிமையாளர் சிவராமன்..

நகரின் மையப் பகுதியில் இருந்தது.காலை நேரத்திலேயே கூட்டம் களை கட்டிவிடும்.அங்கு கிளீனராக வேலை செய்ய சிவராமனால் அழைத்து வரப்பட்டவன் தான் பாலு.

சிவராமனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திலிருந்த பூங்குளம் கிராமத்தில் தான் பாலுவின் தாயார் சிவராமனின் வீட்டில் வேலை செய்து வந்தார்.

பாலுவிற்கு அப்பா கிடையாது.அவர் ஒரு பெயிண்டராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தார்.ஆனால்..எப்படியோ குடி பழக்கத்திற்கு ஆளாகி குடல் கெட்டு இறந்த போது குடும்பத்தை பரம ஏழையாகி விட்டு இருந்தார்.

நல்லவேளை..பாலு அவர்களுக்கு ஒரே மகன்.பாலுவின் தாய் சிவராமன் வீடு உள்பட சில வீடுகளில் வேலை செய்தவாறே பாலுவை படிக்க வைத்தாள்.

பாலு , பார்க்க சுமாராகத்தான் இருப்பான்.எப்போதும் தலை தரையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.கருமையான நிறம்.சற்றே முன்னுக்கு வந்திருந்த பற்கள்.உடைகள் அழுக்காக இல்லாவிட்டாலும் தோய்த்து பழுப்பேறி கசங்கலாக இருக்கும்.அவற்றில் ஒட்டுப் போட்ட கிழிசல்கள் வேறு..சற்றும் அடங்காமல் வளர்ந்து காடாக இருக்கும் தலைமுடி..கண்களில் எப்போதும் ஒரு ஏக்கம்.தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் பேச மாட்டான்.

உடன் படிக்கும் மாணவர்களுக்கும்..பாலுவைக் கண்டுவிட்டால் இளக்காரம்..அவனை சீண்டுவார்கள்.

வகுப்பில் ஏதேனும் காணாமல் போனாலும், ஆசிரியருக்கு சந்தேகம் முதலில் அவன் மீதுதான் வரும்.

அப்படித்தான்..ஒரு நாள்..பாஸ்கர் என்னும் பணக்கார மாணவன் ஒருவனின் பையிலிருந்த ஐம்பது ரூபாய் பணத்தைக் காணவில்லை.

அந்த பையன் ஆசிரியரிடம் முறையிட்டதுடன் அல்லாமல், தனக்கு பாலுவின் மீதுதான் சந்தேகம் என்றான்..

ஆசிரியரும் ...பாலுவைக் கூப்பிட்டு விசாரித்தார்.அவன் மௌனமாக இருக்கவே..கையை நீட்டச் சொல்லி தன் கையிலிருந்த பிரம்பால்..'சுளீர்' என இரண்டு அடி அடித்தார்.

அப்படியும் பாலு வாயைத் திறக்கவில்லை.அவனை வகுப்பின் வெளீயே முட்டி போடச் சொல்லி விட்டார் ஆசிரியர்.

பாஸ்கரன், அடுத்த வகுப்பிற்கான சரித்திரப் புத்தகத்தை எடுத்து புரட்டுகையில், ஐம்பது ரூபாயை அதில் வைத்திருந்ததைப் பார்த்தான்..

ஆசிரியரிடம், 'சார்..பணம் கிடைச்சுடுத்து.நான் புத்தகத்திற்கு உள்ளே வைத்திருக்கிறேன்' என்றான்.

ஆசிரியரும் அவனிடம் பவ்யமாக, 'பாஸ்கர்..நாம அநாவசியமா ஒருத்தர் மேல பழியைப் போடக் கூடாது' என்று சொல்லிவிட்டு..குற்ற உணர்ச்சியுடன் பாலுவை வகுப்பிற்குள் வரச் சொன்னார்.

தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் பாலுவுடன் சற்று நெருங்கிப் பழகி அந்த மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை.

தவிர்த்து..அவரும் அவனை சந்தேகக் கண்ணோடுதானே பார்த்தார்..காரணம்..

அவனது வறுமை....

இடைவேளையின் போது, பாஸ்கர் பாலுவிடம், 'நீ எடுக்கவில்லைன்னு வாத்தியார் கிட்ட சொல்லியிருக்கலாமே..ஏன் வாயைத் திறக்காம அடி வாங்கின..?' என்றான்.

'வாத்தியார் கிட்ட நீ..என் மேல சந்தேகம்னு சொன்ன..அப்போ நான் எடுக்கலைன்னு சொன்னா வாத்தியார் நம்புவாரா? உடனே உன்னைக் கேட்பார்..நீ என்ன சொன்னாலும் உன்னைத்தான் நம்புவார்.எனக்கு இன்னும் இரண்டு அடி அதிகம் கிடைத்திருக்கும்' என்றான்.

அன்று பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் வந்து சொன்னான் பாலு.பின்னர், 'அம்மா..இனிமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.எது காணும்னாலும் என் மேலதான் சந்தேகப் படறாங்க' என்றான்.

அம்மாவும், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது என எண்ணி, பாலுவை அழைத்துக் கொண்டு சிவராமனின் வீட்டிற்குச் சென்றாள்.

சிவராமனின் தந்தை ராஜன், 'விமலா..நீ கவலைப் படாதே..இவன் படிச்சது போதும்.என்னோட பையன் சென்னையில பெரிய ஹோட்டல் ஒன்னு வைச்சிருக்கான்.அதுல இவனுக்கு கிளீனர் வேலை போட்டுத் தரச் சொல்றேன்.இவனுக்கான சாப்பாடும் இலவசமாகக் கிடைக்கும்.வருஷத்திற்கு நாலு ஜோடி டிரஸ் கிடைக்கும்.துணி செலவும் மிச்சம்.மாசம் ஏதாவது சம்பளம் போட்டு..அதை அப்படியே உனக்கு அனுப்பச் சொல்றேன்' என்றார்.

விமலாவின் வறுமையும் அதற்கு 'சரி' என சொல்ல வைத்துவிட்டது.

$$$$$    $$$$$$      $$$$$    %%%%

அன்று கல்லாவில் ஒரு வாடிக்கையாளர் கொடுத்த ஆயிரம் ரூபாயை மேசை மீது வைத்து விட்டு, அவரது பில் பணத்திற்கான பணம் போக , மீதியை கல்லாவிலிருந்து எடுத்துக் கொடுத்த சிவராமன் ,ஆயிரம் ரூபாயை நோட்டை எடுத்து சட்டைப் பைக்குள் வைக்க நினைக்கையில்..

சர்வர் ஒருவன் கொண்டுவைத்த காஃபியில் ஈ ஒன்று விழுந்து விட்டது என ஒரு வாடிக்கையாளர் சப்தமிட..அவரிடம் ஓடினார் சிவராமன்.

அவரை ஒரு மாதிரி சமாதானப் படுத்திவிட்டு , அவருக்கு வேறு ஒரு காஃபி கொடுக்கச் சொல்லிவிட்டு கல்லாவிற்கு வந்தவர்..மேசையில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் தேடினார்.

ஆனால்..அருகில் கையில் கிளீனிங் வாளியுடன், மறு கையில் அழுக்குத் துணியுடன் 'திரு..திரு' என விழித்துக் கொண்டிருந்த பாலுவின் மீது அவர் பார்வைச் சென்றது.

@@@@    @@@@@      @@@@@    @@@@@@

சிவராமன் கொடுத்திருந்த நேரம் கழிந்தும், கண்களில் கண்ணீர் முட்ட..கன்னத்தைத் தடவியவாறு..வாயைத் திறக்காமல் நின்றிருந்த பாலுவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் சிவராமன்.

இரவு பத்து மணி..

கடையை மூடிவிட்டு..பணி புரிபவர்கள் ..அவரவர் பாதை நோக்கிச் செல்லும் போது..வாயிலில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த பாலுவை, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாது பசியால் வாடி வதங்கியிருந்த அந்த இளம் பிஞ்சை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

கடைசியாக வெளியே வந்த சர்வர் மணி பாலுவைப் பார்த்துவிட்டு குற்ற உணர்ச்சியுடன்..'சாரிடா..பாலு..பணத்தை நான் எடுத்தேங்கிறதை முதலாளியிடம் நீ சொல்லியிருக்க்லாமே' என்றான்.

அதற்கு பாலு,' மணி..நீ அந்த பணத்தை எடுத்ததை நான் பார்த்தேன்.நீ உங்க அம்மாவிற்கு மருந்து வாங்க அவசரமா பணம் வேணும்னு கார்த்தால சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன்.நீ தான் பணத்தை எடுத்தேன்னு நான் சொல்லியிருந்தா..முதலாளி உன்னிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி இருப்பார்.அதனால உங்கம்மாவிற்கு உன்னால மருந்து வாங்க முடியாது.அவங்களும் கஷ்டப்படுவாங்க.வேலை செய்ய முடியாத உங்கம்மா..வேலை இல்லாத நீ..என்ன செய்வீங்க? எனக்கோ..வேலையில்லேன்னாலும்..என் அம்மா..ஏதாவது வீட்டு வேலை செஞ்சு சாப்பாடு போடுவாங்க.' என்றான்.

பாலுவின் விஸ்வரூபத்தைப் பார்த்த மணிக்கு "ஓ' வென அவனை கட்டி அழ வேண்டும் போல இருந்தது.

அன்றைய கணக்கை சரிபார்த்து கல்லாவை பூட்டிக் கொண்டிருந்த சிவராமன் காதுகளில் பாலு சொன்னவை அனைத்தும் கேட்டது.

தீர விசாரிக்காமல் பாவம் ஒரு சிறு பையனை தண்டித்து விட்டோமே..அவனுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம்..என்று எண்ணியபடியே தலை நிமிர்ந்தவருக்கு, எதிரே மாட்டிவைத்திருந்த படத்தில் "ஓம்" என்ற பிரவண மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உணர்த்திய பாலமுருகன் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.


Saturday, January 19, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா....(ஒரு குறிப்பு)




பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் காபி தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா? என்ற சர்ச்சை இருப்பதும்..விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதும் நாம் அறிவோம்.

அப்படம் காபி என்றாலும்..நம் சட்டம் சில விஷயங்களில் சொல்லுவதை வைத்துப் பார்த்தால்..இப்படம் காபி யடிப்பதின் கீழ் வருமா எனத் தெரியவில்லை.

ஆனால் இரண்டு படத்தைப் பார்த்தவர்களுக்கு..இந்த காபி விவகாரம் உண்மையா..பொய்யா..எனத் தெரியும்..

சரி, விஷயத்திற்கு வருவோம்..

இன்று போய் நாளை வா படத்தை ரசித்ததில் 50 சதவிகிதம் கூட லட்டுவை ரசிக்கமுடியவில்லை.அதற்கான காரணம் பாக்கியராஜ் அவர்களின் திரைக்கதை அமைப்பு.

'லட்டு..' மக்களிடையே நன்கு ரீச் ஆகியுள்ளதே..எனக் கேட்பீர்களானால்..

அந்த பெருமை கண்டிப்பாக பாக்கியராஜின் கதைக்காகத்தான் எனலாம்.தவிர்த்து..பொங்கலுக்கு வந்த மிகப்பெரிய படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதும் காரணமாகக் கொள்ளலாம்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் கதைதான்.

நகைச்சுவை படங்கள் என்றால்..'காதலிக்க நேரமில்லை' 'அடுத்த வீட்டுப் பெண்' 'காசேதான் கடவுளடா' தரத்திற்கு படம் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்களுக்கு..இப்படம் ஏமாற்றமே.

மற்றபடி..பெருமைப் பட்டுக் கொள்ளத் தக்க வகையில்..எந்த நடிகரும் இப்படத்தில் எதுவும் சாதித்துவிடவில்லை.

ரகு தாத்தாவை சின்னஞ் சிறிய பறவையால் என்ன செய்ய முடியும்?!

ஜஸ்ட்..பாஸ் மார்க்கில்தான் இப்படம் தேர்வாகுகிறது.

Friday, January 18, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் -10




கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ
(மலரும் மாலையும்)


Wednesday, January 16, 2013

Chappa Kurishu (மலையாளத் திரைப்படம்)



இதற்கான அர்த்தம்..Head or Tails (பூவா தலையா)

இந்தத் திரைப்படம் புதிய படமல்ல.ஆனாலும் இப்படத்தை சமீபத்தில்தான் நான் பார்க்க நேர்ந்தது.அருமையான திரைக்கதை.'ஹெட் ஃபோன்' என்னும் கொரிய திரைப்படக்கதை என்று சொல்லப்பட்டாலும்..அதை சிறந்த இந்தியத் திரைப்படம் ஆக்கியுள்ளார்கள்.அதற்கு நன்றி.
கதை இதுதான்..
அர்ஜுன் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்.அவரது உதவியாளர் சோனியா. தவிர்த்து அர்ஜுனுக்கும், அவளுக்கும் தனிப்பட்டமுறையில் தொடர்பும் உள்ளது.

அன்சாரி என்னும் இளைஞன் கொச்சினில் உள்ள ஸ்லம் ஒன்றில் வாழும் ஏழைத் தொழிலாளி.ஒரு சூப்பர் மார்க்கெட்டில், கழிவறை,தரை சுத்தம் செய்யும் தொழிலில் உள்ளான்.

இந்நிலையில் ஒருநாள் அர்ஜூன், சோனியாவுடன் உறவுகொள்ளும் காட்சியை தனது மொபைலில் அவள் அறியாமல் எடுக்கிறான்.அர்ஜூனுக்கு அவனது பெற்றோர் பெண் பார்த்து..நிச்சயிக்கின்றனர்.விவரம் அறிந்த சோனியா, அர்ஜூனை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துக் கேட்கிறாள்.அப்போது அவர்களுக்குள் ஏற்படும் சர்ச்சையில், அர்ஜூனின் மொபைல் தொலைந்து விடுகிறது.

அம்மொபைல் அன்சாரிக்குக் கிடைக்கிறது.முதலில் சபலப்பட்டாலும், அவனது கடைத்தோழி சொல்ல  அந்த ஃபோனை அர்ஜுனுக்கு திரும்பத்தர அன்சாரி முடிவெடுக்கிறான்.அப்போது ஃபோனில் சார்ஜ் தீர, அன்சாரி ஒரு கடை.யில் சார்ஜ் .ஆனால் அக்கடைக்காரனோ, சோனியா, அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சியைத்  திருடி, யூ டியூபில் ஏற்றிவிடுகிறான்.

சோனியா நிலை என்ன?
அர்ஜூன் திருமணம் ஆனதா?
அன்சாரி மொபைலை என்ன செய்தான்?

இதையெல்லாம் படம் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆனால்...ஒவ்வொரு நிமிடமும்..அருமையான திரில் இருக்கிறது.

ஃபாஹத் ஃபாஸில். வினீத் ஸ்ரீனிவாசன், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.சமீர் தாஷீர் இயக்கம்.

மொபைலில் விளையாடும்  ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.


Tuesday, January 15, 2013

அலெக்ஸ் பாண்டியன் (விமரிசனம்)




நீண்ட நாட்களுக்குப் பிறகு , ஒரு அருமையான திரப்படத்தைப் பார்த்த திருப்தி இப்படத்தைப் பார்க்கையில் ஏற்பட்டது.

சமீப காலமாக..மிகுந்த பொருட்செலவில் தயாராகும் படங்கள், வசூலில் வெற்றி பெற்றாலும், தோல்வி படங்களாக அமைந்தது குறித்து வருத்தப்படும் நேரத்தில் இப்படம் ஆறுதல் அளிக்கிறது.

புதிய கதைக்களம்..

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் அசத்தலான நடிப்பு..படத்தின் வெற்றிக்கு துணை செய்கிறது.

லாஜிக்கைப் பற்றிக் கவலைப்படாமல் கண்டபடி எடுக்கப்படும் படங்களுக்கு இப்படம் ஒரு மாறுதல்.

குறிப்பாக..சண்டைக் காட்சிகள் மிகவும் நம்புமாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சகுனி தந்த ஏமாற்றத்தை 'பருத்தி வீரன்" ஈடு செய்துவிட்டார்.

இப்படியெல்லாம் விமரிசனம் எழுத ஆசைதான்...

ஆனால்..ஆசை நிராசையாகப் போய்விட்டதே!

Monday, January 14, 2013

வாழ்வில் வெற்றிபெற...




ஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
கதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.
பலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.
பீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறிவோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(?)சாதூர்யம்.
நம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.
நம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு" என்பதுதான்.

இப்போது ஒரு சிறு கதை.

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
கடைசியில் ஒருவன் கேட்டான்
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்

Sunday, January 13, 2013

அம்மாவும்..பொங்கலும்..நானும்..




அம்மா...

அவளைப்பற்றி..எண்ணினாலே ..மனம் இனிக்கிறது..கண்களில் கொப்பளிக்கிறது கண்ணீர்.

ஒவ்வொருவரும் மண்ணில் ஜனிக்க காரணமாய் இருப்பது தாய்க்குலம். ஆண்டவன்..தனிப்பட்டு ஒவ்வொருவரையும் கவனிக்க முடியாது என்பதால்..அம்மாக்களை படைத்தான்..என்பது சரியென்றே சொல்லலாம்.

என் அம்மா....

அவளைப் பற்றி..எதைச் சொல்வது..எதை விடுப்பது.

எங்கள் மீது பாச மழை பொழிந்தவள்.என் தமிழ் ஆர்வத்திற்கு உரமிட்டவள். அவள் வேலைக்குப் போனதில்லை.ஆனால் முழு நேரமும்..தன் குழந்தைகள் மீது பாசமழை பொழிவதே அவள் வேலையாய் இருந்தது.குடும்ப நிர்வாகம் முழுதும் அவள் கைகளில்.கல்கியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள்..ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அர்த்தம் சொன்னவள்.புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன்.லா.சா.ரா.,சுந்தர ராமசாமி ஆகியவர்கள் அவளால் தான் எனக்குத் தெரியும்.

தனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை.

1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'

ஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.

ஆண்டுகள் பல கடந்தும்..இப் பதிவை எழுதும்போது..கண்களில் கண்ணீர்த்திரை..எழுத்துக்களை மறைக்கிறது.

(அம்மாவை..அவள்..என்று எழுதக் காரணம்..ஆத்திகர்கள் அம்மனை..அவள் என்று சொல்வதில்லையா?..அதுபோலத்தான்)

Saturday, January 12, 2013

எனக்கு பொங்கல் பிடிக்கும்..



பச்சரிசி,பாசிப்பருப்பு சரியான விகிதத்தில் கலந்து உப்பிட்டு,நெய்யில் முந்திரி,மிளகு, சீரகம் வறுத்துப் போட்ட பொங்கல் எனக்குப் பிடிக்கும் என்பதால் இத் தலைப்பிடவில்லை.

எனக்குப் பிடித்தப் பண்டிகை 'பொங்கல்' என்பதால் இடுகைக்கு இப்பெயர்.

நம் பண்டிகைகள் பல..கடவுள்கள் அவதரித்த தினமென்றும்,அரக்கர்களை அழித்த தினம் என்றும்..இதிகாசம், புராணங்களை மேற்கொள்காட்டி..கொண்டாடப்படுபவை.இவற்றில் மெய்யைக் காட்டிலும்..கற்பனைகளே அதிகம்.

சிலமிகைப்படுத்திச் சொல்லப்படுபவை. (அதனால் என்ன..நடிப்பு, அரசியல் எல்லாவற்றிலும் ஒரு இந்தியனுக்கு மிகைப்படுத்துதலே பிடித்திருக்கிறது..என்பது வேறு விஷயம்)

சரி..தலைப்புக்கு வருகிறேன்..

பொங்கல்..முதலில் தமிழ்ப் பெயர்..அதனால் பிடிக்கும்.

தமிழர் திருநாள் என்பதால் பிடிக்கும்

சாதி, மத பேதமின்றி அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் பண்டிகை என்பதால் பிடிக்கும்.

இயற்கை நாம் உயிர் வாழ..நெல்,கரும்பு,பருப்பு.இஞ்சி,மஞ்சள் என ஏராளமாய் படைத்துள்ளது.இது பஞ்சபூதங்கள் என்னும் இயற்கையின் அன்பளிப்பு மனிதர்களுக்கு.அந்த இயற்கையை வழிபடும் நாள் இது என்பதால் பிடிக்கும்

இயற்கைதான் கடவுள் என தெள்ளத் தெளிவாய் விளக்கும் பண்டிகை என்பதால் பிடிக்கும்

இயற்கையின் படைப்பான வயலில் ..நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி..மண்ணிலே நெல் முத்தை விளைவிக்கும் அந்த உழைப்பாளி உழவரின் திருநாள் என்பதால் பிடிக்கும்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

இந்நாளில் விவசாயியின் வாழ்வு செழிக்க பிரார்த்திப்போம்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

Friday, January 11, 2013

உங்களின் குணம் மாற வேண்டுமா?




மனோபாவம்....
இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.


Thursday, January 10, 2013

7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..


7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..
விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என ஒரு சமயம் கேள்வி கேட்ட போது..

'இப்படம் 3000 திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதுவே வெளியாக தாமதம்' என்றார்.

பின்..ஒரு மாதிரி..சென்ற ஆண்டு பல படங்களுக்கு வழிவிட்டு..வெளியாகும் தேதி தள்ளீப் போனது.இந்நிலையில்..சென்ற டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் ஒருநாள்..ஜனவரி 11ஆம் நாள் படம் வெளியாகும் என விளம்பரப் படுத்தப் பட்டது.

50 கோடி பட்ஜெட் போட்டு..95 கோடிகள் வரை செலவானதாக சொல்லப்பட்ட இந்த படம்..ஜனவரி11 ஆம் நாள் சொன்னபடி திரையரங்குகளில் வந்திருந்தால்..வசூலில் கொடிகட்டி பறந்திருக்க வாய்ப்பு உண்டு.

சமயத்தில்..நமக்கு நேரம் சரியில்லையெனில்...நம் வாயாலேயே நாம் கெடுவோம்..

படத்தின் தரம் பற்றி சந்தேகம் வந்ததாலோ என்னவோ...10 ஆம் தேதியே டி.டி.எச்,சில் ஒரு காட்சி வெளியிடப்படும் என்றார் கமல்.இதனால்..30 கோடி அதற்காக முதலிலேயே பணம் கிடைத்துவிடும் என்றெல்லாம் பேசப்பட்டது.

வந்தது வினாசகாலம்..

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு.சற்றும் அசராமல் இருந்த கமல்..சற்று பின் வாங்கினார்..

காரணம்..எதிர்ப்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை.மிஞ்சி, மிஞ்சி போனால்..300 திரயரங்குகளே கிடைக்கும் என்னும் நிலை/

இப்போது..ஏதோ சமரசம் ஏற்பட்டு, பட வெளியீடு 25ஆம் நாள் அன அறிவித்துள்ளார்.டி.டி.எச்.சில் எப்போது எனெத் தெரியாது..பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.(எதிர்பார்த்த அளவு 1000 ரூபாய் கொடுக்க மக்கள் தயாராக இல்லை என்றும் கேள்வி)
கிடைத்த 300 திரங்குகளில் வெளிவந்திருந்தாலும்..ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என..விடுமுறை நாட்கள் ஐந்து நாட்களிலும் அரங்கு நிறையும்.ஆக 7500 அரங்கு நிறைந்த காட்சிகளை பட வெளியீடு தள்ளிப் போனதால் கமல் இழந்தார்.

ஒரு கலைஞன்..நடிப்பத் தவிர..வேறு துறைகளிலும் தலையிட்டால் ,..அதற்கு இப்படி ஒரு தடையா..

கமல் விஸ்வரூபம் எடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பிரச்னைகளிலிருந்து விடுபடட்டும்.

Wednesday, January 9, 2013

புத்தகக் கண்காட்சி..




சென்னை புத்தகக் கண்காட்சியில் எங்களது கீழ்கண்ட புத்தகங்கள் வானதி பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கிறது..

1)சிறுவர் உலகம்  பாகம் -1- சிறுவர் நீதிக் கதைகள் (by Kanchna Radhakrishnan)

2)வாய் விட்டு சிரிங்க..(ஜோக்ஸ்)  (by Kanchana Radhakrishnan)

3)பாரத ரத்னா.(நாடகம்) இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது

4)பத்மவியூகம் - நாடகம்

5)மனசேதான் கடவுளடா (நகைச்சுவை நாடகம்)

காதலாவது..கத்திரிக்காயாவது ..(சிறுகதை)


தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமெரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Tuesday, January 8, 2013

வாய் விட்டு சிரிங்க..




உனக்குப் பிடிக்குமேன்னு சோளப்பொரி வாங்கிவந்தேன்..
எனக்கு அது பிடிக்காது...பாப்கார்ன் தான் பிடிக்கும்

2.உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசியா என்ன ஆச்சு
நான் பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன்

3.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) ஒருத்தி- என்னைவிட நீ கொடுத்து வைத்தவ..நாலு பிள்ளங்க..நாலு மருமகளோட சண்டை போடலாம்.ஆனா எனக்கு ஒரே பிள்ளை..ஒருத்தியோட மட்டும்தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியும்.

4.இயக்குநர்- (கதாசிரியரிடம்)தொப்புள்ல பம்பரம் விட்டாச்சு..ஆம்லெட் போட்டாச்சு..நீ வேற ஐடியா கொடுய்யா
கதாசிரியர்- கதாநாயகியை நாய் கடிச்சுடுது.. டாக்டர் 14 ஊசி போடணும்னு சொல்லிடறார்..அப்படின்னு எழுதறேன்..14 முறை தொப்புளை குளோசப்ல காட்டிடலாம்.

5.அந்த கிளினிக்ல என்ன கூட்டம்
ஆடி தள்ளுபடியாம்..ஒரு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டா ஒரு ஆபரேஷன் இனாமாம்

6.அந்த தயாரிப்பாளர் வீட்டு வாசல்ல ஒரே கிழவிகள் கூட்டமா இருக்கே...என்ன விஷயம்
அவர் எடுக்கப்போற படத்துக்கு 18 வயசு புதுமுகம் தேவைன்னு விளம்பரம் கொடுத்தாராம்..தவறி 81ன்னு பிரசுரமாயிடுச்சாம்.


Sunday, January 6, 2013

2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...




1) உஸ்தாத் ஹோட்டல் - அன்வர் ரஷீத் இயக்கத்தில் மம்முட்டியின் மகன் சல்மான் கதாநாயகனாக நடித்த படம்.புதிய கதைக்களம்.
  திலகனின் அருமையான நடிப்பு.

2)ஆகாசத்திண்டே நிறம்- டாக்டர் பிஜு இயக்கத்தில் நெடுமுடி வேணு,இந்திரஜித்,அமலா பால் நடித்திருந்தனர்.அந்தமானில் முழுதும் படமாக்கப்பட்டது.ராதாகிருஷ்ணனில் ஒளிப்பதிவில் குளுமையான இயற்கைக் காட்சிகள்..மனதைக் கொள்ளைக் கொண்டன.

3)ஸ்பிரிட் - மோகன் லால், திலகன் நடித்தது.குடியின் கேட்டை சொன்ன படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்

4)தட்டாதின் மரயாது - இளம் ரசிகர்களுக்கான ரொமாண்டிக் படம்.வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி, இயக்கியுள்ளார்.ஈஷா தல்வார் கொள்ளை அழகு.இப்படமும் ஹிட்

5)தப்பனா- மம்மூட்டி நடித்த மசாலா படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்

6)ரன் பேபி ரன்- இப்படம் பார்க்கும் போது ஜீவா நடித்த கோ ஞாபகம் வருகிறது.காமிரா மேனாக மோஹன்லால், அறிவிப்பாளராக அமலா பால்.வழக்கமான அரசியல்வாதி, சேனல் ரேட்டிங்க்..என்ற கதை.நல்ல வசூல் படங்களில் இதுவும் ஒன்று.

7)டயமண்ட் நெக்லேஸ் -லால் ஜோஸ் இயக்கம்.ஃபாஹத் ஃபாஸில் (ஃபாசில் மகன்). நல்ல கதயம்சம்.பார்க்க வேண்டிய படம்.துபாயிலேயே  எடுக்கப்பட்ட படம்.

8)ஃப்ரைடே- நெடுமுடி வேணு, ஃபாஹத் ஃபாசில் நடிப்பு.பல வித்தியாசமான பாத்திரங்கள்.கடைசியில் படகு மழையில் மாட்டிக்கொண்டு..பயணம் செய்வோர் தப்பிக்கும் காட்சியை அருமையாக எடுத்துள்ளார்கள்.கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

9)22 ஃபீமேல் கோட்டேயம் - ஆஷிக் அபு இயக்கம். ஃபாஹத் ஃபாஸீல்,ரீமாகல்லிங்கல், பிரதாப் போத்தன்  நடிப்பு.கதை, இயக்கம், நடிப்பு,ஒளிப்பதிவு என அனைத்துமே கலக்கல்.ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

மொத்தத்தில் மேற்சொன்னவை 2012ல் வந்த என்னைக் கவர்ந்தவை.

சந்தர்ப்பம் கிடைத்தால் இப் படங்களைப் பாருங்கள்.


கலைஞரும்..ஸ்டாலினும்..




எனக்கு அடுத்தது ஸ்டாலின் தான் என் கலைஞர் கோடி காட்டிவிட்டாராம்..

இதற்கு..ஊடகங்கள், மற்ற கட்சியினர் என்ன அட்டகாசம் செய்து வருகின்றனர்.

ஸ்டாலினைத் தவிர்த்து..அடுத்து வேறு யார் உள்ளனர்.அப்படியே யாரேனும்..தென்பட்டாலும்..அவர்களுக்கும் ஸ்டாலினுக்குமான இடைவெளி எவ்வளவு.

அவசரக்கால நிலையில்..சிறை சென்றவர் ஸ்டாலின்.1967 முதல் கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்.மேயராக சென்னையில் ஆற்றிய பணியை மறக்க முடியுமா?..எம்.எல்.ஏ,வாகவும், துணை முதல்வராகவும், கட்சியின் பொருளாளராகவும்...எல்லாவற்றிற்கும் மேல் கழகத்தின் கடைசித் தொண்டன்வரை இனிமையாக பேசுபவராகவும் உள்ளவர் அவர்..கலைஞரின் மகனாக அவர் பிறந்தது தப்பா..?

ஆம்..அது தப்பாய் இருந்ததால் தான் இவர் இவ்வளவு ஆண்டுகள்..அத்தலைவனின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது.

ஒரு தொண்டனுக்கு..தன் கட்சியின் தலைவன் இப்படித்தானே இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பான்.

இதுவெல்லாம் போகட்டும்..

நீங்கள் அக்கட்சியைச் சேர்ந்தவனல்ல..

அக்கட்சி யாரைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு என்ன?

அடுத்தவன் வீட்டிற்குள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?

ஸ்டாலின்..அழகிரி ..சர்ச்சைகள் எல்லாம்..அக்கட்சியின் தலைவலி..

அந்தத் தலைவலிகயைப் போக்கும் மருந்து அவர்களுக்குத் தெரியும்.

உங்கள் அரைகுறை வைத்தியம் அவர்களுக்கு வேண்டாம்.


Saturday, January 5, 2013

சிவாஜி ஒரு சகாப்தம் - 7




1960 ல் வெளியான படங்கள்
இரும்புத்திரை
குறவஞ்சி
தெய்வப்பிறவி
ராஜபக்தி
படிக்காதமேதை
பாவை விளக்கு
பெற்றமனம்
விடிவெள்ளி

சென்ற ஆண்டு கட்டபொம்மன்,பாகப்பிரிவினை..வெள்ளிவிழாவை தொடர்ந்து.ஹேட்ரிக்காக இரும்புத்திரை வெள்ளிவிழா படம்.வைஜெயந்திமாலா கதாநாயகி. ஜெமினி தயாரிப்பு.

தெய்வப்பிறவி..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம்..சிவாஜி,பத்மினி..கமால் பிரதர்ஸ் உடன் ஏ.வி.எம்.,கூட்டு தயாரிப்பு.சிவாஜி,பத்மினி,எஸ்.எஸ்.ஆர்., நடித்த படம்.அருமையான பாடல்கள்.,

படிக்காத மேதை..சிவாஜி., சௌகார்..நடித்தது..சிவாஜியின் அற்புத படைப்பு.அனைத்து பாடல்களும் அருமை.

விடிவெள்ளி..ஸ்ரீதர் இயக்கத்தில் முதல் சிவாஜி நடித்த படம்.சரோஜா தேவி கதாநாயகி. ஏ.எம்.ராஜா வின் 'கொடுத்துபார் உண்மை அன்பை' என்ற அருமையான பாடல்.

தெய்வப்பிறவி,படிக்காதமேதை,விடிவெள்ளி மூன்றும் 100 நாட்கள் படம்.

குறவஞ்சி,ராஜபக்தி,பாவைவிளக்கு,பெற்றமனம் ஆகியவை தோல்வி படங்களாக அமைந்தன.

பாவைவிளக்கு...அகிலன் எழுதிய நாவல்..இப்படத்தில்..நடிகர்கள் முதலில் அவர்களாகவே வருவார்கள்...அதாவது சிவாஜி சிவாஜியாகவே..பின் நாவலை படிக்கையில் அந்தந்த கதா பாத்திரமாகவே மாறுவர். சிதம்பரம் ஜெயராமனின்..'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ' பாடல் இடம் பெற்ற படம்.

பெற்றமனம்..மு.வ.,வின் எழுத்தில் வந்த படம்.

அடுத்த பதிவில் 1961 படங்கள்.


Friday, January 4, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் - 9





தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.


Wednesday, January 2, 2013

8 - சிறுகதை




தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை.

அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம்.

அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே நிரந்தரமாக இருக்கிறது.

கண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும் வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே தூக்கி 'எட்டு' போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே போய்விடும்.

அந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.'நீ என்ன தப்பு செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத மாடு படியாது..நல்லா அடி வாங்கு..' என்று கூறிவிடுவார்கள்.

ம்..அதெல்லாம்..அந்தக்காலம்.

இப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.

தர்மலிங்கத்திற்கு ..அன்று போதாத காலம் போலிருக்கிறது.அவர் வகுப்பில் படிக்கும் விக்ரம் என்னும் மாணவன்..முதல் நாளன்று கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை.

அந்த மாணவனை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.அவன் நடவடிக்கை சரியில்லை.அவனை இப்போது திருத்த முயற்சிக்கவில்லை என்றால் அவனது எதிர்காலமே கேள்விக் குறி ஆகிவிடும் என அவரது உள்மனம் சொல்ல..அவனுக்கு எட்டு போட்டு விட்டார்.மாணவனும் மயங்கி விழுந்து விட்டான்.

பள்ளியே..அல்லோலகலப்பட்டது.ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொன்னார்கள்.அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.மாணவனின் பெற்றோருக்கும்..காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

என்ன செய்வது..என்று அறியாது..தர்மலிங்கம் தானே சரணடையும் நோக்கத்தில் காவல் நிலயத்திற்கு சென்றார்.அங்கு காவல்துறை அதிகாரி இல்லாததால்..இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர..எழுந்து நின்று தர்மலிங்கம் பள்ளியில் நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

பொறுமையாக...எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி..தன் அரைக்கை சட்டையின் கைகளை சற்றே உயர்த்தி..அந்த கருமை நிற வடுவைக் காண்பித்தார்.

இந்த வடுவைப் பார்த்தீங்களா..இது எனக்கு நீங்க போட்ட எட்டு...என்னைத் தெரிகிறதா உங்களுக்கு..நான்தான் அருணாசலம்..உங்க பழைய மாணவன்.ஒருநாள்..நான்..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தைத் திருடிட்டேன்.அதைத் தெரிஞ்சுக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு 'டேய்..அருணாசலம்..இனிமே நீஒரு தப்பும் செய்யக்கூடாது.ஏதாவது செஞ்சா..அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கற எண்ணம் உனக்கு வரணும்..இந்த காயத்தால ஏற்படப் போகும் வடு..உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்' என்று சொன்னீங்க...அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா..நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாய் மாறியிருப்பேனான்னு தெரியாது.

'நீ...நீ.. நீங்க..அருணாசலமா ..இப்படி..ரொம்ப மகிழ்ச்சி...ரொம்ப ..ரொம்ப..மகிழ்ச்சி' தர்மலிங்கத்தின் கண்களில் கண்ணீர்...ஆனந்தக் கண்ணீர்.

'ஐயா..அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு ..எனக்கு கொடுத்த அதே தண்டனையைக் கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்துட்டான்.இது பெரிய தவறா எனக்குத் தெரியலை..உங்க மேல எதாவது புகார் வந்தா..நான் பார்த்துக்கறேன்..நீங்க போங்க...கான்ஸ்டபிள்..சாரை..நம்ம ஜீப்ல கொண்டுபோய் வீட்டில விட்டுட்டு வா' என்றார்.

தர்மலிங்கம்..இரு கைகளையும் கூப்பி விடை பெற்றார்..'இன்று..இந்த ஆசிரியரின் தண்டனையைப்பெற்ற மாணவன் நாளைக்கு நிச்சயம் என்னைப்போல நேர்மையானவனாக வருவான்.ஏனெனில் அந்த மாணவன் என் ரத்தம்' என்று எண்ணியவாறே..வேறு யாரும் பார்க்காதபடி..தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் அருணாச்சலம்.


Tuesday, January 1, 2013

வைகைப் புயல் வடிவேலு...




தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக கொடி கட்டி பறந்தவர்கள் பலர்.

தலையானவராக கருதப்படுபவர்..கலைவாணர் அவர்கள்.

எம்.ஆர்.ராதா, பாலையா ஆகியோர் நகைச்சுவையோடு, குணசித்திர நடிப்பிலும் நம்மை கவர்ந்தவர்கள்.

பின்னர், தங்கவேலு, ஏ.கருணாநிதி, நாகேஷ்,தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன்,கவுண்ட மணி, செந்தில்,விவேக் ஆகியோர் முதன்மை காமடியனாகத் திகழ்ந்தனர்.

மேற்குறிப்பிட்ட அனைவரின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

ஆனால்...சிறுவர்கள்கூட..ஏன்..குழந்தைகள் கூட விரும்பும் நகைச்சுவை நடிகனாக திகழ்ந்தவர் வடிவேலு மட்டுமே..இதை..நான் உறுதியாக கூறமுடியும்.

நரசிம்ம ராவ் போன்றோரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு...

ஆணி புடுங்குதல்
வடை போச்சே
கைப்புள்ளே
நாய் சேகர்
என்னவச்சு காமெடி பண்ணலியே
நல்லா கிளப்பறாங்கய்யா பீதியை
அவ்வ்வ்வ்வ்வ்வ்
(இப்பதிவு எழுதும் போது உடன் ஞாபகம் வந்தவை இவை.இவர் நடித்த பாத்திரங்கள் பற்றி அவ்வப்போது பதிவிடுகிறேன்)

இப்படி அவர் நம்மிடையே..அன்றாட நடவடிக்கைகளில் அவ்வசனங்களை நம்மை பேச வைத்தார்.

ஆனால்..தனிப்பட்ட நடிகர் ஒருவரை வீழ்த்துவதாக எண்ணிக்கொண்டு..அரசியல் மேடைகளில் இவர் பேசப்போக..திரை வாய்ப்புகளை இழந்தார்.இடைக்காலத்தில் இவர் இடத்தை நிரப்ப வந்தவர்களால்..நம்மை புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்த்து.

வடிவேலுவின் இடம் இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையில்..மீண்டும் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் இவர்.

விட்ட இடத்தை இந்த கலைஞன் இந்த ஆண்டாவது பிடிக்க வேண்டும்.

கலைஞனுக்கு அரசியல் தேவையா இல்லையா என்பது கேள்வியில்லை.

அரசியலையும் மிறி அவன் பொதுவானவனாகவே கருதப்பட வேண்டும்.

அவர் மறு பிரவேசத்தையும்...திறமையையும் வரவேற்க தமிழ் ரசிகர்கள் தயாராகவே உள்ளனர்.

வடிவேலு..இந்த ஆண்டு உங்கள் ஆண்டாக இருக்க வாழ்த்துகள்.


2012 ம் 2013ம்




         


இருட்டு

கும்மிருட்டு

இருளுக்கு முடிவில்லையா?

உண்டென்று நம்புவோம்

விரைவில்

ஒளி பிறந்திடும்.



டிஸ்கி - அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

டிஸ்கி-2 இது 2012 புத்தாண்டில் போட்ட பதிவு.இன்றைக்கும் சரியாய் உள்ளது அல்லவா?