ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, January 21, 2013
விஸ்வரூபம்..
"பாலு..இங்கே வைச்சுட்டுப் போன ஆயிரம் ரூபாய் எங்கே? நீ எடுத்தியா?..இல்லையா..? சொல்லுடா...வாயில என்ன கொழுக்கட்டையா?..பதில் சொல்லேண்டா"
கல்லுளிமங்கன் போல பாலு நின்றுக்கொண்டிருந்தான்..சிவராமனின் பொறுமை மெல்ல விடை பெற்று கொண்டிருந்தது.
"பளார்" என பாலுவின் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது.
பாலு..அப்பவும் ..வாயைத் திறக்காமல் ..அடி விழுந்த கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தான்.
'இதோ பார்..உனக்கு அஞ்சு நிமிஷம் டயம் தரேன்..குற்றத்தை ஒத்துக்க..இல்ல..என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது..' என்றவாறு சிவராமன் கல்லாவில் வந்து அமர்ந்தார்.
ஹோட்டல் ராஜன்....உரிமையாளர் சிவராமன்..
நகரின் மையப் பகுதியில் இருந்தது.காலை நேரத்திலேயே கூட்டம் களை கட்டிவிடும்.அங்கு கிளீனராக வேலை செய்ய சிவராமனால் அழைத்து வரப்பட்டவன் தான் பாலு.
சிவராமனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திலிருந்த பூங்குளம் கிராமத்தில் தான் பாலுவின் தாயார் சிவராமனின் வீட்டில் வேலை செய்து வந்தார்.
பாலுவிற்கு அப்பா கிடையாது.அவர் ஒரு பெயிண்டராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தார்.ஆனால்..எப்படியோ குடி பழக்கத்திற்கு ஆளாகி குடல் கெட்டு இறந்த போது குடும்பத்தை பரம ஏழையாகி விட்டு இருந்தார்.
நல்லவேளை..பாலு அவர்களுக்கு ஒரே மகன்.பாலுவின் தாய் சிவராமன் வீடு உள்பட சில வீடுகளில் வேலை செய்தவாறே பாலுவை படிக்க வைத்தாள்.
பாலு , பார்க்க சுமாராகத்தான் இருப்பான்.எப்போதும் தலை தரையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.கருமையான நிறம்.சற்றே முன்னுக்கு வந்திருந்த பற்கள்.உடைகள் அழுக்காக இல்லாவிட்டாலும் தோய்த்து பழுப்பேறி கசங்கலாக இருக்கும்.அவற்றில் ஒட்டுப் போட்ட கிழிசல்கள் வேறு..சற்றும் அடங்காமல் வளர்ந்து காடாக இருக்கும் தலைமுடி..கண்களில் எப்போதும் ஒரு ஏக்கம்.தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் பேச மாட்டான்.
உடன் படிக்கும் மாணவர்களுக்கும்..பாலுவைக் கண்டுவிட்டால் இளக்காரம்..அவனை சீண்டுவார்கள்.
வகுப்பில் ஏதேனும் காணாமல் போனாலும், ஆசிரியருக்கு சந்தேகம் முதலில் அவன் மீதுதான் வரும்.
அப்படித்தான்..ஒரு நாள்..பாஸ்கர் என்னும் பணக்கார மாணவன் ஒருவனின் பையிலிருந்த ஐம்பது ரூபாய் பணத்தைக் காணவில்லை.
அந்த பையன் ஆசிரியரிடம் முறையிட்டதுடன் அல்லாமல், தனக்கு பாலுவின் மீதுதான் சந்தேகம் என்றான்..
ஆசிரியரும் ...பாலுவைக் கூப்பிட்டு விசாரித்தார்.அவன் மௌனமாக இருக்கவே..கையை நீட்டச் சொல்லி தன் கையிலிருந்த பிரம்பால்..'சுளீர்' என இரண்டு அடி அடித்தார்.
அப்படியும் பாலு வாயைத் திறக்கவில்லை.அவனை வகுப்பின் வெளீயே முட்டி போடச் சொல்லி விட்டார் ஆசிரியர்.
பாஸ்கரன், அடுத்த வகுப்பிற்கான சரித்திரப் புத்தகத்தை எடுத்து புரட்டுகையில், ஐம்பது ரூபாயை அதில் வைத்திருந்ததைப் பார்த்தான்..
ஆசிரியரிடம், 'சார்..பணம் கிடைச்சுடுத்து.நான் புத்தகத்திற்கு உள்ளே வைத்திருக்கிறேன்' என்றான்.
ஆசிரியரும் அவனிடம் பவ்யமாக, 'பாஸ்கர்..நாம அநாவசியமா ஒருத்தர் மேல பழியைப் போடக் கூடாது' என்று சொல்லிவிட்டு..குற்ற உணர்ச்சியுடன் பாலுவை வகுப்பிற்குள் வரச் சொன்னார்.
தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் பாலுவுடன் சற்று நெருங்கிப் பழகி அந்த மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை.
தவிர்த்து..அவரும் அவனை சந்தேகக் கண்ணோடுதானே பார்த்தார்..காரணம்..
அவனது வறுமை....
இடைவேளையின் போது, பாஸ்கர் பாலுவிடம், 'நீ எடுக்கவில்லைன்னு வாத்தியார் கிட்ட சொல்லியிருக்கலாமே..ஏன் வாயைத் திறக்காம அடி வாங்கின..?' என்றான்.
'வாத்தியார் கிட்ட நீ..என் மேல சந்தேகம்னு சொன்ன..அப்போ நான் எடுக்கலைன்னு சொன்னா வாத்தியார் நம்புவாரா? உடனே உன்னைக் கேட்பார்..நீ என்ன சொன்னாலும் உன்னைத்தான் நம்புவார்.எனக்கு இன்னும் இரண்டு அடி அதிகம் கிடைத்திருக்கும்' என்றான்.
அன்று பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் வந்து சொன்னான் பாலு.பின்னர், 'அம்மா..இனிமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.எது காணும்னாலும் என் மேலதான் சந்தேகப் படறாங்க' என்றான்.
அம்மாவும், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது என எண்ணி, பாலுவை அழைத்துக் கொண்டு சிவராமனின் வீட்டிற்குச் சென்றாள்.
சிவராமனின் தந்தை ராஜன், 'விமலா..நீ கவலைப் படாதே..இவன் படிச்சது போதும்.என்னோட பையன் சென்னையில பெரிய ஹோட்டல் ஒன்னு வைச்சிருக்கான்.அதுல இவனுக்கு கிளீனர் வேலை போட்டுத் தரச் சொல்றேன்.இவனுக்கான சாப்பாடும் இலவசமாகக் கிடைக்கும்.வருஷத்திற்கு நாலு ஜோடி டிரஸ் கிடைக்கும்.துணி செலவும் மிச்சம்.மாசம் ஏதாவது சம்பளம் போட்டு..அதை அப்படியே உனக்கு அனுப்பச் சொல்றேன்' என்றார்.
விமலாவின் வறுமையும் அதற்கு 'சரி' என சொல்ல வைத்துவிட்டது.
$$$$$ $$$$$$ $$$$$ %%%%
அன்று கல்லாவில் ஒரு வாடிக்கையாளர் கொடுத்த ஆயிரம் ரூபாயை மேசை மீது வைத்து விட்டு, அவரது பில் பணத்திற்கான பணம் போக , மீதியை கல்லாவிலிருந்து எடுத்துக் கொடுத்த சிவராமன் ,ஆயிரம் ரூபாயை நோட்டை எடுத்து சட்டைப் பைக்குள் வைக்க நினைக்கையில்..
சர்வர் ஒருவன் கொண்டுவைத்த காஃபியில் ஈ ஒன்று விழுந்து விட்டது என ஒரு வாடிக்கையாளர் சப்தமிட..அவரிடம் ஓடினார் சிவராமன்.
அவரை ஒரு மாதிரி சமாதானப் படுத்திவிட்டு , அவருக்கு வேறு ஒரு காஃபி கொடுக்கச் சொல்லிவிட்டு கல்லாவிற்கு வந்தவர்..மேசையில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் தேடினார்.
ஆனால்..அருகில் கையில் கிளீனிங் வாளியுடன், மறு கையில் அழுக்குத் துணியுடன் 'திரு..திரு' என விழித்துக் கொண்டிருந்த பாலுவின் மீது அவர் பார்வைச் சென்றது.
@@@@ @@@@@ @@@@@ @@@@@@
சிவராமன் கொடுத்திருந்த நேரம் கழிந்தும், கண்களில் கண்ணீர் முட்ட..கன்னத்தைத் தடவியவாறு..வாயைத் திறக்காமல் நின்றிருந்த பாலுவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் சிவராமன்.
இரவு பத்து மணி..
கடையை மூடிவிட்டு..பணி புரிபவர்கள் ..அவரவர் பாதை நோக்கிச் செல்லும் போது..வாயிலில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த பாலுவை, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாது பசியால் வாடி வதங்கியிருந்த அந்த இளம் பிஞ்சை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
கடைசியாக வெளியே வந்த சர்வர் மணி பாலுவைப் பார்த்துவிட்டு குற்ற உணர்ச்சியுடன்..'சாரிடா..பாலு..பணத்தை நான் எடுத்தேங்கிறதை முதலாளியிடம் நீ சொல்லியிருக்க்லாமே' என்றான்.
அதற்கு பாலு,' மணி..நீ அந்த பணத்தை எடுத்ததை நான் பார்த்தேன்.நீ உங்க அம்மாவிற்கு மருந்து வாங்க அவசரமா பணம் வேணும்னு கார்த்தால சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன்.நீ தான் பணத்தை எடுத்தேன்னு நான் சொல்லியிருந்தா..முதலாளி உன்னிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி இருப்பார்.அதனால உங்கம்மாவிற்கு உன்னால மருந்து வாங்க முடியாது.அவங்களும் கஷ்டப்படுவாங்க.வேலை செய்ய முடியாத உங்கம்மா..வேலை இல்லாத நீ..என்ன செய்வீங்க? எனக்கோ..வேலையில்லேன்னாலும்..என் அம்மா..ஏதாவது வீட்டு வேலை செஞ்சு சாப்பாடு போடுவாங்க.' என்றான்.
பாலுவின் விஸ்வரூபத்தைப் பார்த்த மணிக்கு "ஓ' வென அவனை கட்டி அழ வேண்டும் போல இருந்தது.
அன்றைய கணக்கை சரிபார்த்து கல்லாவை பூட்டிக் கொண்டிருந்த சிவராமன் காதுகளில் பாலு சொன்னவை அனைத்தும் கேட்டது.
தீர விசாரிக்காமல் பாவம் ஒரு சிறு பையனை தண்டித்து விட்டோமே..அவனுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம்..என்று எண்ணியபடியே தலை நிமிர்ந்தவருக்கு, எதிரே மாட்டிவைத்திருந்த படத்தில் "ஓம்" என்ற பிரவண மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உணர்த்திய பாலமுருகன் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
Labels:
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment