Tuesday, July 15, 2014

குறுந்தொகை - 42



தோழி கூற்று
(இரவில் வந்து தலைவியோடு பழகவேண்டுமென்று விரும்பிய தலைவனை நோக்கி, “நெருங்கிப் பழகாவிடினும்  நட்பு அழியாது” என்று குறிப்பால்  மறுத்தது.)
 
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

காம மொழிவ தாயினும் யாமத்துக்
 
கருவி மாமழை வீழ்ந்தென வருவி
 
விடரகத் தியம்பு நாடவெம்
 
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.

                      - கபிலர்

உரை -

நடு இரவில் மின்னல், இடி இவற்றுடன் பெரு மழை பெய்தலால் நீர் வரத்து அதிகமாகி, அதனால் அருவியானதுபின் நாளிலும் மலையிடத்துள்ள வெடிப்புகளிலும், குகைகளிலும் ஒடும் ஒலி நிறந்த குறிஞ்சி நிலத்தையுடையவனே, காமமானது நீங்குவதாக இருப்பினும் உன்னிடத்தில் எனக்குள்ள நட்பு அழியுமோ?(அழியாது)



 (கருத்து) நீ இரவில் வாராவிடினும் தலைவிக்கும் உனக்கும் உள்ள நட்பு அழியாது.

 
(மழை பெய்து முடிந்தாலும், அதனால் உண்டான நீர்ப்பெருக்கு அருவியாய் நீண்ட நாள் ஓடுவது போல, ஒரு நாள் இரவே  பழகியிருந்தாலும் உன்னுடன் ஆன நட்பு இரவில் நீடிக்காவிடினும் அழியாது)

No comments: