Wednesday, July 16, 2014

குறுந்தொகை - 43



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில், “அவர் பிரிவாரென்று சிறிதும் கருதாமையின் நான் சோர்ந்திருந்தேன்; அக்காலத்து அவர்தம் பிரிவைக் கூறின் யான் ஆற்றேனென எண்ணிச் சொல்லாமற் போயினார். இதனை நினைந்து என் நெஞ்சம் வருந்தும்” என்று இரங்கித் தலைவி கூறியது.)

இன்றைய காலகட்டத்தில்..விட்டுக் கொடுத்தல் இல்லாததாலேயே..விவாகரத்துகள் பெருகிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

அந்தக் காலத்திலும் அப்படி நடந்துள்ளதாகத் தெரிகிறது.


பாலத் திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-

 
செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
 
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
 
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
 
நல்லராக் கதுவி யாங்கென்

அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

                     -ஔவையார்



  உரை-

தலைவன் தன்னைப் பிரிந்து செல்லமாட்டார் என எண்ணி, சற்று அலட்சியமாய் இருந்துவிட்டேன்.தன் பிரிவை இவளுக்கு அறிவித்தால் அதற்கு இவள் உடன்படமாட்டாள் என எண்ணி என்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டார்.அச்சமயம்,இருவரிடமும் இருந்தது "தான்" என்ற போக்கு.கவலையுறும் என் நெஞ்சம், நல்லபாம்பு கவ்விக் கடித்ததால் வருத்தப்படுவது போல இப்பொழுது கலக்கப்படுகிறது.

(தலைவர் தலைவியிடம் சொல்லாமல் பிரிந்ததால் தலைவி கலங்குகிறாள்)

நல்லபாம்பு கவ்விக் கடித்ததால் வருத்தப்படுவது போல..(உவமை)

No comments: