Saturday, July 26, 2014

குறுந்தொகை - 56



தலைவன் கூற்று
(தலைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தோழிக்கு உடன்படாது தனியே பிரிந்து சென்ற தலைமகன் பாலைநிலத்தின் தீமையைக் கண்டு, "இத்தகைய கடினமான இடத்தில் தலைவி வருவாளாயின் மிக இரங்கத் தக்காள்!" என்று கூறியது.)


பாலைத்திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்.


இனி பாடல்-


வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்

குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
   
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
   
வருகதில் லம்ம தானே

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

                          -சிறைக்குடியாந்தையார்

    உரை-

வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிகைப் பூ மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சிலவாகிய நீரை வளையையுடைய கையாளாய் எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு தலைவி வந்தால், என் நெஞ்சில் அமர்ந்த என் தலைவி மிக இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.

    (கருத்து) கடினமான பாலை நிலத்தில் தலைவி வருதற்குரியவள் அல்ல,.

(பாலை நிலத்தில் நீரற்ற சுனையைத் தோண்டி வரும் சிறிதளவு தண்ணீரை மக்களும், விலங்குகளும் அருந்துவர்.காட்டுமல்லிகை அருகிலுள்ள மரங்களிலிருந்து  விழுந்து அழுகி நீரில் கொடும் தீய நாற்றத்தை உண்டாக்கும்.தலைவியை பிரிந்திருந்தாலும், அவள் உஅன் வந்திருந்தால் இந்நீரை குடிக்கும் நிலைக்கு ஆளாகி இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.ஆகவே, இப்படிப்பட்ட பாலை நிலத்திற்கு வராதது அவளுக்கு நல்லதே!

No comments: