Friday, July 25, 2014

குறுந்தொகை - 54


தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணம் புரியாது நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலால் உண்டாகும் வீண்வம்பையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, “ தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் என்னை மணந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்” என்றது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் மீனெறி தூண்டிலார்.


யானே யீண்டை யேனே யென்னலனே

 ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
   
கான யானை கைவிடு பசுங்கழை
   
மீனெறி தூண்டிலி னிவக்கும்

கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.

                            - மீனெறி தூண்டிலார்

உரை-

தோழி! நான் இங்குள்ளேன் என்னோடு முன்பு ஒன்றியிருந்த என் பெண்மை நலன், தினை புனங் காப்பார் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி காட்டுயானை கைவிட்ட பசிய மூங்கிலானது, மீனை கவர்ந்துகொண்டதூண்டிலைப் போல மேலே செல்வதற்கு இடமாகிய காட்டையுடைய தலைவனோடு நான் பழகிய அவ்விடத்தே நீங்கியது.

    .(கருத்து) தலைவன் பிரிவினால் யான் பெண்மைநலனிழந்தேன்.

கவண் கல்லின் ஒலி கேட்டு அஞ்சி, தான் உண்ணுக் கொண்டிருந்த பசுமையான மூங்கிலை யானை விட்டதும்..அது வளைந்த நிலையிலிருந்து விடுபட்டு உடன் மேலே செல்வது போல (அது எப்படி..இருக்கிறதாம் மீனைப் பிடித்த தூண்டில் மேலே செல்வது போல இருக்கிறதாம்) அன்பு செலுத்தி அன்பற்ற காலத்து பிரிந்து சென்றானாம் தலைவன்.இந்த உவமையின் சிறப்பால் இப்பாடல் ஆசிரியர் நல்லிசைச் சான்றோர் மீனெறி தூண்டிலார் எனப் பெயர் பெற்றார்.

No comments: