Sunday, January 31, 2016

உணவும்....செரிமானமும்




நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

Wednesday, January 27, 2016

இனிக்கும் தமிழ்



மேன்மக்கள் விரும்பாத சொற்களைக் கூறமாட்டார்கள்.எந்த ஒரு துயரம் வந்தாலும் தன் நிலை மாறாதிருப்பர்.புறங்கூற மாட்டார்கள்.இதைத்தான், "கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பார் மூதுரையில் ஔவையார்.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது தன் சுவையில் குன்றாது.அதுபோல எவ்வளவு துன்பங்களில் இருந்தாலும் நற்பண்புகள் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவே இருப்பர்.அது எப்படிப்பட்டது என்றால் வெண்மை நிறத்தில் உள்ள சங்கு தீயில் எவ்வளவு சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும் அதுபோல., என்கிறார்.


என்னவொரு அழகான உவமை

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

( நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள்.  நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு
எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.
தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்
போன்றது அவர் நட்பு.)

இதையே வள்ளுவர் எப்படி சொல்கிறார்..தெரியுமா?

சாதாரணமாக ஒரு பயிரைக் கண்டதுமே அந்து எப்பேர்ப்பட்ட நிலத்தில் விளைந்தது என்பதை ஒரு விவசாயி கூறிவிடுவான்.அதுபோல ஒருவர் பேசுவதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்திட முடியும் என்கிறார்.

இதை வைத்துதான், ஒருவன் செயல் வீரனா அல்லது வாய்ச்சொல் வீரனா என்பதையும் சொல்லி விடலாம்.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

(விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என்பதி கண்டுபிடித்து விடலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச்சொல்லை வைத்தே அவர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தவர் என்பதை உணரலாம்)

Friday, January 22, 2016

மக்களுக்காக......


மக்களுக்குச் செய்கிறேன்
மக்களுக்கு உழைக்கிறேன்
மக்களுக்காக எதையும் செய்வேன்
மக்களுக்கே என் உடல் பொருள்
தலைவன் பேசி முடித்ததும்
தொண்டர்களின் விண்ணதிரும்
கைதட்டல்கள்..
மக்கள் எனில்
மகன்..மகள் என்பதை
மறந்ததேன் தொண்டன்

Thursday, January 21, 2016

அஷ்டாவதானி கே.என்.சிவராமன்



கர்ணனின் கவசமா, சகுனியின் தாயமா, மாஃபியா ராணிகளா..
இன்ன வேண்டும் என்று சொல்லிவிட்டால்...அதை
சூடாக வாசகர்களுக்கு அளித்திட சிவராமன் தயார்.
இன்று..தினகரன் வெள்ளிமலரில் அவரது சினிமா சம்பந்தக் கட்டுரைகள் ....
முழுதும் சினிமாவே சம்பந்தப்பட்ட பத்திரிகை என்றாலும்....பக்கங்களை நிரப்பும் திறமையை நிரூபித்துள்ளது.
ஒரு எழுத்தாளன்..
ஒன்று சிறுகதை எழுதுவான்  அல்லது
தொடர் கதை எழுதுவான் அல்லது
அமானுஷ்ய தொடர் எழுதுவான்
சரித்திரத் தொடர் எழுதுவான்
சினிமா நட்சந்திரங்கள் வாழ்க்கையை எழுதுவான்
சினிமா துணுக்குகளை எழுதுவான்
விமரிசங்களை எழுதுவான்

ஆனால் இந்த சிவராமன் ..எமகாதகன்...

எதையும் எழுதத் தயார் என்கிறான்

அவனை அஷ்டாவதானி என்று சொல்வதைத்தவிர வேறு எந்த சொல்லும் ஞாபகத்தில் வரவில்லை

(சற்று உரிமை எடுத்துக் கொண்டு அவன்..இவன்..என்று சொல்வதற்கு சிவராமன் மன்னிப்பாராக)

Wednesday, January 20, 2016

ஆம் ஆத்மியில் இணைந்த தலைவர்

அரசியல் தலைவர் நந்திவர்மன், திடீரென ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
அவரது நெருங்கிய நண்பர் அதற்கானக் காரணத்தைக் கேட்க நந்திவர்மன் சொன்னார்..
"எனது பிரச்னை கெஜ்ரிவாலால் தீர்ந்தது அதனால் தான்" .
நண்பருக்குப் புரியவில்லை...நந்திவர்மனே தொடர்ந்தார்..
"எனக்கு இரண்டு மனைவிகள்.முதல்மனைவி வீட்டுக்குப் போனால் இரண்டாவது மனைவி கோபிக்கிறாள்.
இரண்டாவது மனைவி வீட்டுக்குப் போனால்...முதல்மனைவி என் மீது பீப் சாங்  பாடுகிறாள்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன எனத் தெரியாது இருந்தேன்.
இந்நிலையில்,கெஜ்ரிவால், தில்லியில்..ஒத்தப்படை எண் கார் ஒருநாளும், இரட்டைப்படை கார் ஒருநாளும்  என்ற திட்டத்தைக் கொணர்ந்தார்.
உடனே எனக்கும் என் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்டது.
முதல் மனைவி வீட்டுக்கு ஒருநாள்..அடுத்தநாள் இரண்டாம்மனைவி வீட்டிற்கு என அதே கெஜ்ரிவால் பாணியில் முடிவெடுத்தேன்.
என் பிரச்னைக்குத் தீர்வு காட்டிய கெஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லும் விதமாக..அவரது கட்சியில் சேர்ந்து விட்டேன்" என்றார்.

Tuesday, January 19, 2016

நீண்ட நாட்கள் வாழ....



இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்


ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.

Saturday, January 16, 2016

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,

தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஜெயலலிதா-
எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.

ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு காமராஜ்தான்
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.


(இது ஒரு மீள் பதிவு)

Wednesday, January 13, 2016

வைரமுத்துவின் வரிகளில் மீசைக்கவிஞன்


பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

Monday, January 11, 2016

வாள்...வாள்..எனக் கத்துபவரா நீங்கள்?



அப்படிப்பட்ட ஒருவர் நோய்வாய்ப் பட்டார்.அவர் பார்க்காத வைத்தியம் இல்லை.

ஒருநாள் அவர் மனைவி அவரை ஒரு நல்ல வெட்னரி மருத்துவரைப் பார்க்கச் சொன்னாள்

'என்னது மிருக டாக்டர் கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.

'எனக்கொண்ணும் மூளை கெட்டுப் போகலே! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலங்காத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னால எழுந்துக்கிறீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சுட்டு, குரங்கு மாதிரி 'லபக் லபக்' னு ரெண்டு வாய் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமா ஓடி ஆஃபீசுக்கு போறீங்க.! அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க மேல கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆஃபீஸ் விட்டவுடனே, ஆடுமாடுங்க மாதிரி பஸ்ல அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா, நாள் பூரா வேலை செஞ்ச களைப்பில, நாய் மாதிரி என் மேல சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்' ன்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க! மறுபடியும் விடிஞ்சா அதேமாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவ்ங்களை மனுஷ டாக்டர் எப்படீங்க குணப்படுத்த முடியும்? அதனால தான் சொல்றேன் நாளைக்கே ஒரு கால் நடை டாக்டரைப் போய்ப் பாருங்க" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, - 'கோட்டான் மாதிரி முழிக்காதீங்க" என்றாள் மனைவி 

Sunday, January 10, 2016

விவாக ரத்து ஏன்?




 சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.

இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.

தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

Thursday, January 7, 2016

எல்லாம் இன்பமயம்




நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின்  .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

Wednesday, January 6, 2016

எது நகைச்சுவை?



என்னிடம் ஒரு குணமுண்டு..

அது வேடிக்கையாய் பேசுவது. நண்பர்களும் அவற்றை ரசிப்பதுண்டு.

உதாரணத்திற்கு, நண்பர் ஒருவர் தன் வீட்டில் செய்த இனிப்பு ஒன்றைக் கொடுத்தார்.நன்றாய் இருந்தது.நண்பர், 'எப்படி இருக்கிறது "என்றார். வழக்கமான நக்கல் தலைகாட்ட நான்,'நன்றாய் இருக்கிறது..ஆனால் சற்று உப்பு குறைவு' என்றேன்.சுற்றியிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.நண்பரின் முகமும் சுருங்கிவிட்டது.

மற்றொரு நண்பர் டிரட் மில் வாங்கியிருந்தார்.ஒருநாள் எங்கள் அனைவரையும் கூட்டிக் காட்டினார்.என்னால் காலையில் வாக் போக முடிவதில்லை.ஆகவே வீட்டிலேயே செய்திடுவேன் என்றார்.ஆனால்..அவர் அப்படி செய்யவில்லை.ஒரு சமயம் ஊரிலிருந்து வந்த அவர் உறவினர், 'டிரட் மில்லில் தினம் நடக்கிறாயா?' என்றார்.நான் சும்மா இருக்கக் கூடாது.அதுதான் நம் பழக்கம் இல்லையே , அதனால்' உங்களுக்குத் தெரியாதா? இந்த டிரட் மில் அதற்காக வாங்கவில்லை.அது வாங்கிய கடையில் இடமில்லாததால்..இதை இங்கே கடைக்காரர் போட்டு வைத்துள்ளார்.' என்றேன்.நண்பர் நெளிந்தார்.

இப்படி எனது நா காக்காததால்..பல நண்பர்களை இக்கட்டில் ஆழ்த்தியுள்ளேன்..நகைச்சுவை என்ற பெயரில்.

ஒருநாள் ஒருவரிடம் இப்படி செய்யப்போக அவர் மிகவும் வருந்தினார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது.இது போல எவ்வளவு நண்பர்களை வருத்தப்பட வைத்திருக்கிறேன் என்று.

நாம் நகைச்சுவை என்று நினைத்து சொல்வது, பிறரை வருத்தப்பட வைத்துள்ளதே ..அது கூட எனக்குத் தெரியவில்லையே! என.வருந்தினேன்.

இனி யாரிடமும் இப்படி நடக்கக்கூடாது என தீர்மானித்து விட்டேன்.

சமீபத்தில் ஒரு நண்பர், 'வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை' என்றார்..கீழே வாழைப்பழத்தோல் வழுக்கி(!!) விழுந்தவரைக் கண்டு நான் நகைக்காததால்..பிறர் துயர் நமக்கு நகைச்சுவை என அவர் எண்ணியதால்.

பிறர் புண்பட பேசுவது, பிறர் துயர் கண்டு நகைப்பது, பிறர் செயலை எள்ளி நகையாடுவது போன்றவை நகைச்சுவை என்றால்..அந்த உணர்வு என்னை விட்டு சாகட்டும்.

யாரையும் புண் படுத்தாத நகைச்சுவை உணர்வு  நம் அனைவரிடமும் வளரட்டும்.

Monday, January 4, 2016

இனிக்கும் தமிழ்


சாதாரணமாக கவிஞர்கள் அந்த நாளில் அரசனைப் பாடிப் பொன்னும் பொருளும் பெறுவர்.வறுமையில் அவர்கள் வாடினாலும், அவர்களின் தமிழில் பாடப்படுபவரைப் பற்றி நக்கலும், கிண்டலும் கூட இருக்கும்.அப்படி, பாடி பரிசு பெற எண்ணி அரசன் ஒருவனை இராமசந்திர கவிராயர் பாடுகிறார்.(இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்).  பாடி முடித்ததும் அந்த அரசன் பரிசு ஏதும் தரவில்லை.அந்த மனச் சலிப்பை இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

கல்லாத வொருவனைநான் கற்றா யென்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்
பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்
மல்லாரும் புயனென்றேன் சூம்பற் றோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே !



(கல்லாத ஒருவனை நான் மெத்தப்படித்த மேதை என்றேன்;
காட்டை அழைத்துச் செழிக்கும் ஒருவனை நாடாளும் மன்னனே என்றேன் ;
தீயவனை நல்லான் என்று புகழ்ந்துரைத்தேன் ;
போர்க்களத்தையே பார்த்திராத கோழையை வேங்கையை ஒத்த வீரன் என்றேன்;
சூம்பிய தோள்களைக் கொண்ட நோஞ்சானை மல்யுத்தத்துக்கு ஏற்ற திடம் கொண்ட தோளன் என்றேன்;
எச்சில கையால் காகம் ஓட்டாதவனை வள்ளல் என்றேன்;
இப்படி இல்லாததைச் சொல்லி புகழ்ந்த எனக்கு, அவன் இல்லை எனச் சொல்லி விட்டான்).