Wednesday, April 11, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 11


(திருமதி ஒய்ஜிபி,மகேந்திரன், ஏ ஆர் எஸ்., ஜெயலலிதா)

1969ஆம் ஆண்டு கண்ணன் வந்தான் நாடகத்திற்கான மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தரம் எழுத (வியட்நாம்வீடு நாடகத்திற்குப் பிறகே இவர் வியட்நாம் வீடு சுந்தரம் என அறியப்பட்டார்) "நலந்தானா" என்ற நாடகம் அரங்கேறியது

65 காட்சிகள் நடந்த இந்நாடகம் , ஒய் ஜி மகேந்திரனால் மறக்கமுடியாததாகும்.

அதற்கான காரணம் இரண்டு..

முதல் காரணம் - இநாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த யூஏஏவின் ஆஸ்தான நடிகரான ஏ ஆர் ஏஸ், அலுவலகப் பணி நிமித்தமாக அவ்வப்போது வேறு வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் நடித்த பாத்திரத்தில், அவர் இல்லாத காலகட்டத்தில் ஸ்ரீகாந்த நடித்து வந்தார்.நாடகத்தில், மகேந்திரனுக்கு, சுண்டு என்ற அரைகிறுக்கு வேடம்.அவ்வேடத்தில், சிறப்பாக அவர் நடிப்பதைக் கண்ட ஸ்ரீகாந்த்,அது பற்றி கலாகேந்திரா கோவிந்தராஜனிடம் சொன்னார்.அவர், இயக்குநர் திலகம் கே.பாலசந்தரிடம் கூற, நவக்கிரகம் திரைப்படத்தில் மகேந்திரனை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார்இயக்குநர் கே பாலசந்தர்

               (வியட்நாம் வீடு சுந்தரம்)

இரண்டாம் காரணம்-


எம்.ஜி.ஆர். பாட்டை வைத்து “ஜோக்” “கலங்கரை விளக்கம்” படத்தில், “காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்” என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும்.  “நலந்தானா” நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் வரும்.
“நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு” என்று ஜோக்கடிப்பார் மகேந்திரன்.. இது ரொம்ப பாப்புலர்.
ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று  மகேந்திரனுக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
“இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்” என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.
“அந்த ஜோக் அவசியம் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினார் மகேந்திரன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்” என்று கூறினார்
இந்நிகழ்ச்சி மகேந்திரனால் மறக்கமுடியாத ஒன்றாகும்.

No comments: