Wednesday, April 25, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 34

அத்தியாயம் - 34
(நாடகம் நாடகத்திற்கு வந்து ரஜினி மகிழும் காட்சி)
நாடகம் 2011ல் அரங்கேறியது..
என்ன சொல்ல வருகிறேன் என புரியவில்லையா?
2011ல் யூஏஏ அரங்கேற்றிய நாடகத்தின் தலைப்பு "நாடகம்" எழுதியவர் சித்ராலயா ஸ்ரீராம் இயக்கியவர் மகேந்திரன்
யூஏஏவின் அனைத்து நாடகக் கலைஞர்களுடன் நாடகம் துவங்குகிறது.முதல் காட்சியில் மகேந்திரன் இடையில் வாளுடன், ராஜ உடையில் வருகிறார்.சரித்திர நாடகமோ என் எண்ணும் போதே, தமிழ் உச்சரிப்புகள் மாறுகின்றன.சென்னை த் தமிழ், பின்னர் தங்கிலீஷ் என நகைச்சுவை நாடகமாக மாறுகிறது.பிறகு சென்டிமென்ட் ,அதற்கு அடுத்து நாட்டுப்பற்று என..
இதெல்லாம் என்ன என்கிறீர்களா?சரி கதைக்கு வருகிறேன்
ஒய்ஜிஎம் 1975ல் நாடகக் குழு ஒன்றினைத் தொடங்குகிறார்.பல கலைஞர்களின் வாழ்வு தொடங்குகிறதுஒப்பனை அறையில் ஒப்பனை தொடங்குகிறது.அங்கு கலைஞர்கள் அடிக்கும் கொட்டம்.
மகேந்திரனின் மனைவிக்கு நடிப்பில் ஆர்வமில்லை.ஆனாலும் கணவனுக்காக எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.தொலைக்காட்சி வருகிறது.நாடகங்கள் பாதிக்கப் படுகின்றன.கலைஞர்கள் தனது வாழ்வாதாரத்தைத் தேடி பிரிகின்றனர்.
யார் சென்றாலும் நாடகம் போடுவோம் என் கிறார் மகேந்திரன்(பாசமலர் படத்தில் சிவாஜியின் கம்பெனி strike வரும்போது..யார் இல்லையென்றாலும் கவலையில்லை இந்த ராஜசேகரன் (சிவாஜி) ஒரு அகல் விளக்காய் இங்கு எரிந்துகொண்டிருப்பான் என சிவாஜியின் வசனம் ஞாபகம் வருகிறதா).
இறுதிக் காட்சியில் வாஞ்சிநாதனின் வீரவரலாறு நாடகம் வருகிறது,ஆஷ்துரையை சுட்டுவிட்டு வாஞ்சிநாதனாக நடிக்கும் மகேந்திரனும் தன்னை சுட்டுக் கொள்கிறார்.
ரயில் பெட்டி,மணியாச்சி ஸ்டேஷன் என அரங்க அமைப்பு ம் கைதட்டல்களைப் பெறுகிறது.
சிந்திக்க வைத்த நாடகம்.நாடகத்தில் மதுவந்தியும் கண் தெரியாத பாத்திரம் ஒன்றில் வந்து கலக்குவார்.
பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள், நாடகத்தைப் பார்த்துவிட்டு அனுப்பிய வாழ்த்து மடலில் கூறுகிறார்.
'கோவிலைவிட நாடகமேடையை நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதற்கு இந்நாடகம் உதாரணம்.ஒவ்வொரு நாடக நடிகர்களும்,திரைப்பட நடிகர்களும்,நாடக ஆர்வலர்களும் காணவேண்டிய உன்னத நாடகம் உங்கள் நாடகம்.நடிகர்திலகம் நடித்திருக்க வேண்டிய அந்தத் தியாகி வாஞ்சிநாதன் பாத்திரத்தில் நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள்.நாடகம் முடியும் தறுவாயில்,அரங்கத்தின் உள்ளே இருந்த
 இருளில்,ஒரு ஓரத்தில் இரு நிழல் உருவங்கள் நிற்பது என் விழிகளில் தென்பட்டது.முதலில் அவர்கள் யாரென சரியாகப் புலனாகவில்லை.உற்று உன்னிப்பாகக் கவனித்தேன்.பிறகு தெரிந்தது..ஒரு உருவம் நாடக வெறியரான உங்கள் தந்தை ஒய் ஜி பார்த்தசாரதி.இன்னொன்று நடிப்புப் பிரியரான சிவாஜி"
சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பாராட்டில் கூறுகிறார்."இதுவரை நீங்கள் தயாரித்துள்ள நாடகங்களில் நம்பர் ஒன் இந்த நாடகம்.அனைத்து நடிகர்,நடிகைகளும் பார்க்க வேண்டிய நாடகம்.ஒரு நாடக நடிகரின் வாழ்வை சிறந்த நாடகமாக்கியிருக்கிறார்"
இத்துடன் நில்லாது, நாடகத்தைப் பார்த்துவிட்டுச் சென்ற ரஜினி, அன்றிரவு 11 மணியிலிருந்து 11-45 வரை நாடகம் பற்ரி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததையும் மகேந்திரன் நினைவில் கொண்டு மகிழ்கிறார் மகேந்திரன் 

No comments: