Saturday, July 21, 2018

நாடகப்பணியில் நான் - 11

1973ல்  தொடங்கப்பட்ட " Ambattur Cultural Academy" 1978 வரை நாடகங்களை தன் உறுப்பினர்களுக்கு அளித்தது.

கிட்டத்தட்ட 75 நிகழ்ச்சிகள்..எவ்வளவு பிரபலங்களின் தொடர்பு...எவ்வளவு மனம் நெகிழ்வு கொண்ட நிகழ்வுகள்.

என்னால் மறக்கமுடியா நிகழ்ச்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடிகவேள் எம் ஆர் ராதாவின் "ரத்தக்கண்ணீர்" நாடகத்தை ,
அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சில நாட்களில் அம்பத்தூரில் நடத்தினேன்.
அது பற்றி ஒரு குறிப்பு..

நானும்..நடிகவேள் ராதாவும்..ரத்தக்கண்ணீரும்

M.G.R.,சுடப்பட்டதும்..ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் வழக்கு நடந்து ..ராதாவும் தண்டிக்கப்பட்டு
சிறையிலிருந்து வெளிவந்த நேரம்.,ராதா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்தில் தங்கியிருநதார்.மூட்டுவலியால்
அவதிப்பட்டு வந்தார்.

அந்த சமயத்தில்..எனது சபாவில் அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் போட்டால் என்ன..என்ற எண்ணம் தோன்ற
அவரை அவரது இல்லத்தில் சந்தித்து தேதி கேட்டேன்.

என்னைப்பற்றி விசாரித்தார்.நான் state bankல் வேலை
செய்வதாகவும்..அம்பத்தூரில் 2 வருடங்களாக சபா நடத்திவருவதாகவும் கூறினேன்.

அவர் உடனே'தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே..என்று சொல்லிவிட்டு 'நீங்க என்ன ஜாதி" என்றார்.

எனக்கோ..இப்படி "பட்" டென்று கேட்கிறாரே..என ஆச்சர்யம்.உடன் சொன்னேன்.சரி என்றவர்..நாடகத்திற்கான
தேதியும் கொடுத்தார்.

ஒரு பெரிய கண்ணை கலரில் வரைந்து..அதிலிருந்து ரத்த நிறத்தில் கண்ணீர்த்துளிகள் வருவதுபோல..பிரமாதமாக
சுவரொட்டி போட்டு அம்பத்தூர் தெருக்களில் ஒட்டினேன்.

பின்னர்தான்..அதுபோல சுவரொட்டிகள் சென்னை சபாக்களில் அவர் நாடகம் போட்டபோது..போடப்பட்டன.

நாடகத்தன்று..காலையிலிருந்தே என் வீட்டிற்கு மக்கள் டிக்கட் வாங்க படையெடுத்தனர்.

மாலை...நாடகம் ஆரம்பிக்கும் நேரம் ராதா என்னைகூப்பிட்டு..இடைவேளையில் எனக்கு ஒரு மாலை போடு என்றார்.

நானும் சரி என தலையாட்டிவிட்டு....இவர் மரியாதையை கேட்டு வாங்குகிறாரே என எண்ணிக்கோண்டேன்.

இடைவேளையில்..சபா சார்பில் மாலை அணிவித்தேன்.பின் அவர் பேசினார்..
'M.G.R.,பற்றி குறிப்பிடும்போது மக்கள் கை தட்டினர்.சிவாஜி பற்றி குறிப்பிடும்போது வாளா யிருந்தனர்.ஏன்..இவருக்கு கை தட்டக்கூடாதா..என்றார்..பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிட்டார்.'இந்த பையன்.(என் ஜாதியை குறிப்பிட்டு) இந்த ஜாதி..ஆனாலும் தைர்யமா என் நாடகம் போடறான்..என்னை தெரிஞ்சவங்கக்கூட இப்போ
என்னைப்பார்க்கிறதை தவிர்க்கும்பொது ........ர ஜாதிப்பையன் தைர்யமா வந்து நாடகம் போடறியான்னு கேட்டான்.

அவனை பாராட்டறேன்னு சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த நான் போட்ட மாலையை கழட்டி எனக்கு அணிவித்தார்.

என்னைப்பாராட்டத்தான்..இடைவேளையில் மாலை போட சொல்லியிருக்கிறார்.
அவரை தப்பாக நினைத்து விட்டோமே என எண்ணினேன்.

பின்..பல சபாக்களில் நாடகம் தொடர்ந்தது.ஆனாலும் சிறையிலிருந்து வந்ததும் முதலில் போடப்பட்டது எனக்குத்தான் என்ற இறுமாப்பு இன்றும் எனக்கு உண்டு.

அடுத்து சோ அவர்களுடன் ஆன என் அனுபவம்..

(தொடரும்)

No comments: