Sunday, July 8, 2018

நாடகப்பணியில் நான் - 3

அந்த நாளில் "காதல்" என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வந்து கொண்டிருந்தது.அதன் ஆசிரியர் அரு.ராமநாதன்.இவர் எழுதிய "வீர பாண்டியன்மனைவி" என்ற சரித்திரத் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

அரு.ராமநாதன், "ராஜ ராஜ சோழன்" நாடகத்தையும் எழுதினார்.அதை டி.கே எஸ் சகோதரர்கள் நாடகமாக நடித்தனர்.இன்றும் டி கே எஸ் கலைவாணனும்,புகழேந்தியும் இந்நாடகத்தை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நாடகமே , முதல் தமிழ் சினிமாஸ்கோப் படமாக நடிகர்திலகம் நடிக்க வெளியானது.

"ஆமாம்..இந்தப் பதிவிற்கும், இதெற்கெல்லாம் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா?" சொல்கிறேன்

"அடாது மழை" நாடகத்தில் நான் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்தது..எனது பள்ளிவரை எட்டிவிட்டது.

திரு ஸ்ரீனிவாசன் பிள்ளை என்பவர் எனது வகுப்பு ஆசிரியர்.தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவர்.அவர் என்னிடம் இடைவேளையில் தன்னை வந்து ஆசிரியர்கள் அறையில் பார்க்கச் சொன்னார்.எதற்கு வரச் சொல்கிறார்? என பயந்தபடியே சென்றேன்

"என்ன நாடகங்களில் எல்லாம் நடிக்கிறயாமே!" என்றார்.பின், "பயப்படாதே..நாம இந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில் "ராஜ ராஜ சோழன்" நாடகம் போடறோம்.(சென்ற ஆண்டு ஆண்டு விழாவிலும் அதே நாடகத்தை நடத்தினார்.அந்நாடகம் மீது அவ்வளவு பற்று).அதில் "மேதீனி ராயன்" என்ற நகைச்சுவை புலவன் வேடம் வருது.அந்த வேடத்தை நீ செய்" என்றார்.

பள்ளி ஆண்டுவிழா என்பதால், தந்தையின் அனுமதி எளிதில் கிட்டியது

நாடகம் அனைவரின் பாராட்டுதலைப் பெற்றது.அந்நாடகத்தின் டைடில் சாங் இன்றும் பசுமரத்தாணியாய் ஞாபகத்தில் உள்ளது..

"வேங்கை நாட்டு
மன்னர் மன்னன்
மாலை சூடினான்
மன்னன்
மாலை சூடினான்
தமிழ் அன்னை
வண்ண சிலை அமைத்து
வாழ்த்து பாடினான்
மன்னன்
வாழ்த்து பாடினான்"

என ஆரம்பிக்கும்
.
பள்ளி விடுமுறை முடிந்து நான் 9th standard சென்றேன்.

பெரிய கிளாஸ்..இனிமே நாடகம் கீடகம்னு சுத்தாதே என்று என் நாடக ஆசைக்கு இடைக்கால தடை விதித்தார் அப்பா.

தடையை விலக்கக் கூறி அம்மா விடம் அப்பீல் செய்தேன்.
பின், அம்மா, அப்பா இருவர் அமர்வு, இடைக்காலத் தடையை நீக்காமல்..சில கன்டிஷன்ஸை தளர்த்தினார்கள்.

அது என்ன? அடுத்த பதிவில்

(தொடரும்)

No comments: