Friday, July 13, 2018

நாடகப்பணியில் நான் - 6

அம்பத்தூர் மக்களிடையே எங்களைப் பற்றிய புகழ் பரவியது என்றேன் அல்லவா? அதற்கானக் காரணம் என்ன?

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் கலைத்தாய் தமிழர்களுக்கு அளித்த கலைப்பொக்கிஷம் ஆவார்.

அவர் 288 படங்களில் நடித்து பல தேசிய விருதுகள் பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி படங்களில் நடித்தவர்.1966ல் பத்மஸ்ரீ,1984ல் பத்மபூஷன்,1995ல் ஃபிரான்ஸ் நாட்டு செவாலியே விருதுகளைப் பெற்றவர்.1995ல் தாதா சாஹேப் பால்கே விருது இவருக்கு அளிக்கப்பட்டது.இவர் பெருமைகளையும், சாதனைகளையும் எழுத வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுத வேண்டும்.

விஷயத்திற்கு வருகிறேன்..

கலைத்தாயின் மூத்த புதல்வனுக்கு 1966ல் பத்மஸ்ரீ விருது கிடத்ததும்..எங்களது youngsters cultural association சார்பில் அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்த தீர்மானித்தோம்.

ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் அவரும் தேதி ஒதுக்கித் தந்தார்.பாராட்டுவிழா எப்படியும் ஒரு மணிநேரத்தில் முடிந்து விடுமே..வேறு என்ன செய்யலாம்? என யோசித்த போது..நாமே ஏன் ஒருமணி நேரத்திற்கு நகைச்சுவை நாடகம் ஒன்று போடக்கூடாது எனத் தோன்றவே..மௌலி எழுத "love is Blind"  என்ற நாடகத்தை நடத்த தீர்மானித்தோம்

சிவாஜி கணேசனை,  விசுவின் தந்தை ராமசாமி ஐயர் அழைத்துவர, நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நடிகர் ரஞ்சனையும், முன்னிலை வகித்த பிரபல ஆர்கிடெக்ட் ரவால் கிருஷ்ண ஐயர்  அவர்களையும்எங்கள் நண்பர்களின் இரு உறவினர்கள் அழைத்து வந்தனர்

பூர்ணகும்ப மரியாதையுடன் சிவாஜிக்கு பாராட்டு விழா அமர்க்களமாக நடந்தது.

மௌலியின் நாடகத்தையும் திலகம் மிகவும் ரசித்தார்.
அந்த நாடகத்தில் விசுவும் நடித்தார்.நான் ஒரு பத்திரிகை நிருபராக நகைச்சுவை வேடத்தில் நடித்தேன்

இந்த நிகழ்ச்சி எங்களது நாடக ஆர்வத்தை மேலும் தூண்ட அடுத்து நாங்கள் செய்தது அடுத்த பதிவில்

(தொடரும்)  

No comments: