ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஹேஸ்யங்களுக்கு இனி இடமில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அரசிய லில் நுழைவது பற்றி எடுத்த முடிவை ரஜினி இப்பொழுதுதான் உறுதி செய்து கொண்டுள்ளார்.
ரஜினியின் பொதுவான வழக்கம், எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு முழுமையான தெளிவு பிறக்காதவரை அதுபற்றி அவ்வப்பொழுது சில கருத்துக்களை வெளியிடுவார். அதற்கு வரும் எதிர்ப்புகள், ஆதரவுகள், விளக்கங்கள் அனைத்தையும் உற்று கவனித்து தனக்குள் யோசிப்பார். அந்த மாதிரி சிந்தனையின்போது பொறிபோல் தோன்றும் முடிவில் உறுதியாகிவிடுவார்.
அந்தப் பாணியில்தான் அரசியலைப் பற்றியும் தனது இறுதி முடிவை ரஜினி எடுத்துள்ளார். அது என்ன முடிவு என்கிற அறிவிப்பு, வரும் அக்டோபர் 9 ரஜினி பிறந்த திருவோணம் நட்சத்திரத்தில் வரும் விஜயதசமியன்று வெளியாகும். ரஜினியின் ரசிகர்கள் விஜயதசமியன்று வெற்றிக் கொடிகட்டி பட்டாசு வெடிக்கலாம்!'' என்று சூப்பர் ஸ்டாரின் நீண்டகால நண்பரும், கலைக் குடும்பத் தலைவர், நாட்டாமை நடிகரின் தூரத்து உறவினருமான பட்டுக்கோட்டைக்காரர் பளிச்சென்று சொல்ல, நம்மால் நம்பவே முடியவில்லை... ஆனால் படிப்படியாக நடந்த விஷயங்களை அவர் பட்டியல்போட நமக்குள்ளும் படபடப்பு கூடியது.
``எந்த ஒரு விஷயத்திலும் ரஜினி கமிட் ஆகும் ஸ்டைலே தனி. ஒரு படத்தை ஒப்புக்கொள்வது முதல் ஒரு பயணத்தை மேற்கொள்வதுவரை எதுவாயினும் இறுதி முடிவு என்று ஒன்றை ரஜினி எடுத்துவிட்டார் என்றால், உடனே அதை அந்த சமயத்தில் கையில் கிடைக்கும் காகித்தில் தன் கைப்பட எழுதி பத்திரப்படுத்திக் கொள்வார்... அப்படி எழுத்து வடிவம் பெற்ற எந்த முடிவையும் அவர் ஒருநாளும் மாற்றமாட்டார்.
ஒரு படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வது, அதற்கான கால்ஷீட்டை ஒதுக்கித் தருவதுகூட இந்தத் துண்டுச் சீட்டு வழி முறையினால்தான். முத்திரைத்தாள்கள் எல்லாம் ஒரு நாளும் ரஜினியின் முடிவைக் கட்டுப்படுத்தியதில்லை.
தனக்குத் தோன்றியபோது துண்டுக் காகிதத்தில் சில தேதிகளை எழுதி வைத்திருப்பார். எதிர்பாராத சமயத்தில் யாராவது ஒரு தயாரிப்பாளரின் கையில் அந்தக் காகிதத்தைத் திணித்து, ``இதுதான் டேட்ஸ்... மற்ற ஏற்பாட்டை கவனிங்க!''ன்னு ஒற்றை வரியில் சொல்லிவிட்டு சடக்கென திரும்பி ஸ்டைலாக காரில் ஏறிப் போய்விடுவார்...
அடுத்த விநாடி அந்தக் காகிதம் கையில் கிடைத்த தயாரிப்பாளர் கோடீஸ்வரன்.. அப்படியொரு காகிதம் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கருக்கும் கிடைத்தது. அதன்பின் உருவான படம்தான் `ராஜாதி ராஜா'. ரஜினி கைப்பட தேதிகளை கிறுக்கிக் கொடுத்த அந்தக் காகிதத்தை தன் இறுதிக்காலம் வரை பர்ஸில் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாஸ்கர். இதுபோல் பட உலகில் ரஜினி கொடுத்த பல பொக்கிஷங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.
இதே பாணியில்தான் தனது அரசியல் முடிவையும் ரஜினி ஒன்றரை வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து காகிதத்தில் எழுதி பத்திரப்படுத்திவிட்டார். அந்த முடிவை வெளியிடும் நேரம் இப்பொழுது வந்துவிட்டதால், அரசியல் பிரவேசத்திற்கு ஆலோசனையும், அருள்வாக்கும் தந்த முக்கியமான ஒருவருக்கு முதலில் நன்றி தெரிவித்து கைப்பட கடிதம் எழுதி, பத்தாயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்துள்ளார்!'' என்று மொத்தக் கதையையும் சொல்லி பல முடிச்சுகளையும் போட்டுவிட்டார் அந்தப் பட்டுக்கோட்டைக்காரர்.
பத்தாயிரம் ரூபாயை யாருக்கு அனுப்பினார் என்பதைச் சொல்ல அவர் மறுத்தாலும் அந்த நபரின் ஊரைத் தெரிவிக்க, நாம் நமது உளவுத்துறையை ஏவினோம்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நடராஜ குருக்கள்தான் அந்த நபர். பின்னிமில்லில் `சிவாஜி' படத்தின் ஷூட்டிங்கின்போது, காரவனுக்குள் வைத்து நடராஜ குருக்கள் ரஜினிக்கு அருள்வாக்கை வழங்கியிருக்கிறார்... `அக்டோபர் 9 விஜயதசமியன்று வெற்றிக்கொடி ஏற்றுங்கள்!' என்பதுதான் அந்த அருள்வாக்கு.
அதைக் கேட்டுக் கொண்ட ரஜினி பதில் எதுவும் சொல்லாமல் குருக்களை அனுப்பி வைத்துவிட்டார். பல நாட்கள் கழித்து அந்த முடிவில் தான் ஃபிக்ஸ் ஆகிவிட்டதை, மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தெரிவிக்க எழுதப்பட்டதுதான் அந்தக் கடிதம். முடிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அன்பளிப்புதான் அந்த பத்தாயிரம் ரூபாய்.
நடராஜ குருக்கள் ரஜினி யின் அரசியல் முடிவை பரம ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்தாலும் சில நாள் முன்பு தன் நண்பர் ஒருவருக்கு ரஜினியின் கடிதத்தைக் காட்டியிருக்கிறார். அந்த நண்பர் நம் உளவுத் துறையின் ரேடாருக்குள் வந்தபொழுதுதான் மொத்த விஷயமும் நமக்குத் தெரிந்தது.
இறுதி முயற்சியாக நாமும் நடராஜ குருக்களை நேரில் சந்தித்து ரஜினியின் கடிதத்தைக் கேட்டோம். சந்திப்பை ஒப்புக்கொண்ட அவர், `கடிதத்தைக் காட்டுகிறேன். ஆனால் தருவது தர்மமல்ல' என்று நம்மிடம் காட்டிவிட்டு வாங்கிக் கொண்டார். எது எப்படியானாலும் அக்டோபர் 9 விஜயதசமிக்கு ரஜினிவெடி தயாராகிவிட்டது. அது வெடிக்குமா, மீண்டும் ஒரு புஸ்வாணமா என்பது தொடரும் மர்மம்....
6 comments:
Its not pubished in kumudam Reporter.Its published in Kumudam
/Anonymous said...
Its not pubished in kumudam Reporter.Its published in Kumudam/
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..தவறு திருத்தப்பட்டு விட்டது
என்னங்க ஆச்சாம் ... ?
வாராரா வரலியா?
//தருமி said...
என்னங்க ஆச்சாம் ...//
எப்பவும் போலத்தான்..கூழுக்கும் ஆசை....
//நசரேயன் said...
வாராரா வரலியா?//
எப்ப வருவேன்..எப்படி வருவேன்னு அவருக்கே தெரியாதாம்
Post a Comment