பூங்காற்று திரும்புமா(முதல் மரியாதை),சின்னச் சின்ன ஆசை(ரோஜா),போறாளே பொன்னுத்தாயி(கருத்தம்மா),முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்(சங்கமம்),தெய்வந் தந்த பூவே(கன்னத்தில் முத்தமிட்டால்) ஆகிய பாடல்களுக்கு தேசியவிருதை ஐந்துமுறை பெற்றவர் வைரமுத்து ஆவார்.
ஆறாவது முறையாக தென்மேற்கு பருவக்காற்று படப் பாடலான, 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலுக்கு இம்முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
இது பற்றி கல்கி பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து..
ஆறுமுறை விருது பெற்றவன் ஒரு பாடலாசிரியன் எனக் கருதினால் அந்த மகிழ்ச்சியில் எல்லை சுருங்கிவிடும்.ஆறுமுறை விருது பெற்றது தமிழ் மொழி என்று கொண்டால் அந்த எல்லை பன்மடங்கு விசாலப்படும்.அப்படித்தான் இந்த விருதை புரிந்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
ஆறு விருதுகள் வாங்க முக்கியமான காரணங்கள் உண்டு.ஆறு விருதுகள் வாங்கக் கூடிய அளவிற்கு நீண்ட பயணம் அமைய வேண்டும்.அந்தத் துறை செழிப்பாக இருக்க வேண்டும்,அதற்கு ஏற்ப படைப்பாளி ஈடு கொடுக்க வேண்டும். மாறுகிற தலைமுறையைப் புரிந்துகொண்டு, அந்தத் தலைமுறையோடு பயணம் செய்ய வேண்டும்.தன் உடல்,உள்ளம்,வாழ்வு மூன்றும் தாழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தன்னத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.இவ்வளவு தகுதிப்பாடுகள் இருந்தால் தான், திரையுலகில் ஒருவன் சாதனை நிகழ்த்தி இருக்க முடியும்.இது வைரமுத்துவிற்கு மட்டுமல்ல், எல்லோருக்கும் பொதுவான இலக்கணம்.இயற்கையின் கொடை,சமூகத்தின் நேசம் இவற்றால் நான் அந்தப் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டு இருக்கிறேன் என்பதுதான் இங்கு முக்கியமான செய்தி.
ஆறாவது முறையாக விருதினைப் பெறுகிறபோது எனக்கு ஒரு பரவசம்.இந்திய மொழிகளில் திரைப்படப் பாட்டு என்கிற துறையில் தமிழ் முன்னணியில் இருக்கிறது என அறிந்து என் இதயம் இன்னும் விரிந்தது.தமிழ் செம்மொழியாகப் பெருமை பெற்ற காலகட்டத்தில், அதற்கான ஆதாரங்களுள் ஒன்றாக இந்த விருதும் அமைவதாகக் கருதிப் பெருமைப்பட வேண்டும்.
ஆறாவது முறையாக விருது பெற்ற தமிழனுக்கு வாழ்த்துகள்.