Saturday, October 13, 2012

தமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்




தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் அழைத்துப் பேசியிருப்பது சிங்கள அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள அமைப்பின் தலைவர் குணதாச சமசரசேகர கூறியுள்ளதாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசுகிறது. இலங்கையில் ஈழத்தை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.

இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும்.
இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் அமெரிக்கா, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.

தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார் அவர்.

(தகவல் - தட்ஸ்தமிழ்)




No comments: