Tuesday, October 9, 2012

மத்திய அமைச்சர் செய்தது தவறு - கலைஞர்





 தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு கடிதம் எழுதியது மிகப்பெரிய தவறாகும் என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக மாநில உணர்வோடு நடந்து கொள்வது தவறாகும்.

ஒருவேளை இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை மனதிலே கொண்டு வாக்கு வாங்கவேண்டுமென்பதற்காக கிருஷ்ணா மாநில மக்களைக் கவருகின்ற வகையில் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மக்களும், தலைவர்களும் கட்சி உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள். அந்த மாநில அரசும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிலே முடிவெடுத்து, அதன்படி செயல்படுகிறார்கள். அதன் விளைவாகத்தான் கர்நாடக மாநிலத் தலைவர்கள் எல்லாம் பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டிலோ தனக்கே எல்லாம் தெரியும், யாருடைய ஆலோசனையும் தயவும் தேவையில்லை என்று கருதுகின்ற அரசு நடக்கின்றது. எப்படியிருந்தாலும், காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பிரதமர் அறிவித்த முடிவுக்கு மாறாக நண்பர் கிருஷ்ணா பிரதமருக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதியது தவறு, கண்டிக்கத்தக்கது.

நல்லவேளையாக காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமரும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டுமென்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: