Thursday, October 18, 2012

தினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)


இல்லாமை, இயங்காமை அல்ல!



மின்வெட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விதவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் கடையடைப்பு நடத்துகிறார்கள். சில ஊர்களில் ஆர்ப்பாட்டம், தெருமுனைக்கூட்டம். சிறுதொழிலதிபர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவை போன்ற நகரங்களில் பேரணி நடத்தப்படுகின்றது.
மின்சார அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிடுகிறார்கள். சில இடங்களில் இரவு நேரத்தில் முற்றுகையிட்ட மக்கள், ஆத்திரத்தில் மின் அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.
கரண்ட் காணாமல் போய்விட்டது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று சிலர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அந்தப் புகாருக்கு காவல்நிலையமும் ரசீது கொடுக்கிறது. "காணவில்லை- பெயர் மின்சாரம், அடையாளம் - தொட்டால் ஷாக் அடிக்கும்' என்று சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இதெல்லாம் சரி. மின்தடைக்குத் தமிழக அரசு மட்டுமே காரணமா, தமிழக அரசும் காரணமா, அல்லது எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலையைச் சந்திக்க வேண்டியாகியிருக்குமா? மின்சாரத்தை வைத்துக்கொண்டே தமிழக அரசு வழங்க மறுக்கிறதா? சுமார் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருக்கும்போது ஒரு மாநிலம் என்ன செய்ய இயலும்?
இந்தக் கேள்விகளைப் போராட்டம் நடத்துபவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே இந்தப் பிரச்னையை அணுகுகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிர்வாகம் செய்யத் தெரிந்திருந்தால், இந்நேரம் தட்டுப்பாட்டை போக்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றன. ஆனால், மத்திய அரசு ஏன் தர மறுக்கிறது என்பதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை. கூடுதல் விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு எத்தனைக்காலத்துக்கு சமாளிக்க முடியும் என்பது பற்றியும் அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை.
மின்வாரியத்திடம் மின்சாரம் போதுமான அளவு இல்லை என்பதே உண்மை. மத்திய தொகுப்பிலிருந்து அதிக மின்சாரத்தை தமிழகம் கெஞ்சிக் கேட்டாலும் தரப்படவில்லை. மேட்டூர் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகியன அடிக்கடி பழுதாகின்றன. பருவமழைக் காலத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்துபோனது. உற்பத்தியாகும் குறைந்த மின்சாரத்தை பகிர்மானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழக மின்வாரியம் திணறிக்கொண்டிருக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு மட்டுமே இழப்பு என்றில்லை. மின்வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு. மாதம் முழுவதும் நாள்தோறும் 12 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் செய்ய முடியும் என்றால், மின்வாரியத்துக்குக் கிடைக்க வேண்டிய மின்கட்டண வசூல் 50% குறையும். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுமென்றே மின்தட்டுப்பாட்டை தமிழக அரசு உருவாக்குகிறது என்ற பிரசாரங்கள் ஏற்புடையவை அல்ல. நீதிமன்ற விவகாரமும், ரஷ்யா தற்போது,"இழப்பீட்டுக்கும் பொறுப்பேற்க வேண்டுமானால், கூடங்குளத்தின் மின்உலைச் செலவுகள் இன்னும் கூடுதலாகும்' என்று சொல்வதால், கூடங்குளம் மின்உற்பத்தி இன்னும் சில ஆண்டுகளுக்கு நிச்சயமில்லை என்பதுதான் உண்மை நிலைமை.
கூடங்குளத்தால் தமிழகத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்ற செய்திக்கு முகநூலில் ஒரு அன்பர் ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார். "எங்கள் வீட்டுல விளக்கெரிய அடுத்தவன் வீட்ல பொணம் விழணும்னு நாங்களா கேட்டோம்?' என்று. நல்லவேளை, அவருக்கு உண்மை தெரிந்திருக்கவில்லை. தமிழகத்தின் பாதித் தேவையைப் பூர்த்தி செய்யும் அனல்மின்சாரம், பல ஆயிரம் ஏக்கர் காடுகளை அழித்துக் கிடைத்த நிலக்கரியை எரிப்பதால் கிடைப்பதும், புவிவெப்ப மாறுதலை அது ஏற்படுத்துகிறது என்பதும்! தெரிந்தால், அனல் மின் நிலையங்களையும் மூட வேண்டும் என்பார்!.
இத்தகைய சூழ்நிலையில், மின்தட்டுப்பாடு குறித்து நிலைமையை ஆராய மின்துறை அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து, திங்கள்கிழமைதோறும் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வரின் நடவடிக்கை இந்த நேரத்திற்கு அவசியமானது. அதே நேரத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், அரசியல் கட்சியினரை அழைத்து நிலைமையை விளக்குவது பயன் உள்ளதாக அமையும்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பதால்தான் அரசு ஜூன் மாதத்தில் திறக்கவில்லை என்பது விவசாயிகளுக்குப் புரிவதைப் போல, இன்றைய மின்உற்பத்தி இவ்வளவுதான்; இதைக்கொண்டு இவ்வளவு நேரம்தான் மின்சாரம் வழங்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அரசு மக்களிடம் வெளிப்படையாக விளக்கம் தர வேண்டும். தொழில்துறைக்கு மின்சாரத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்குப் புரியவைத்தால் போராட்டங்கள் தானே குறையத் தொடங்கும்.
தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நிலவும் வேளையில், புதிய தொழிற்கூடங்களுக்கு அனுமதி அளிப்பதை சிறிது காலம் தள்ளிப்போடலாம். அல்லது மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக்கொள்ள முன்வரும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம். அரசும் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
நாள்தோறும் மத்திய அரசு தரும் மின்சாரம் இவ்வளவுதான் என்று சொல்வதால், அரசியல் ரீதியாகவும் மாநில அரசுக்கு சாதகம்தான். உள்ள நிலைமையை வெளிப்படையாகப் பேசுங்கள். மக்கள் புரிந்துகொள்வார்கள். பேசாவிட்டால், இதை, அரசின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் சித்திரிக்கும். இல்லாமை வேறு, இயலாமை வேறு, இயங்காமை வேறு! அரசியல் ரீதியாக அணுக வேண்டிய பிரச்னைகளை அதிகாரிகள் மூலம் தீர்க்க முடியாது. மக்களாட்சியில் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது. அரசின் இன்றைய நிலைமை இல்லாமைதானே தவிர, இயலாமையோ, இயங்காமையோ அல்ல என்பதைப் புரியவைக்காததால்தான் இத்தகையப் போராட்டங்கள்!

16 comments:

Unknown said...

ஒரு சிறிய சந்தேகம்.. இதை ஏன் இன்னும் பன்னாட்டு கம்பனிகளுக்கு மட்டும் சொல்ல தயங்குகிறது தினமணி தலையங்கமும் அதன் ஆசிரியர் குழுவும்?

TNEB Jawahar said...

soopper

rara said...

தி மு க ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டுக்கு எப்படி தலையங்கம் எழுதியது ?
அல்லாமே அவாள் .

Selvadurai said...

"மேட்டூர் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகியன அடிக்கடி பழுதாகின்றன"

இதை ஏன் நிர்வாகம் தவிர்க்கவில்லை? பராமரிப்பு என்பதே இல்லையா?

செல்வதுரை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kamalchandar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி madhuri madhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி rara

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி selvadurai

sasero said...

Thiraani illaatha arasu

sasero said...

Keduketta arasu.

கோவி.கண்ணன் said...

மூன்று மணி நேர மின்வெட்டு அமலில் இருந்த தி.மு.க.
------------------------------------------------------------------------------
ஆட்சியில் தினமணி தலையங்கம் :
-------------------------------------------------

இப்போதைய தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்துறையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டதன் விளைவுதான், இன்றைய தினம் மின்தட்டுப்பாட்டில் மிகப்பெரும் நெருக்கடியும், நாளொன்றுக்கு மூன்று மணி நேர மின்தடையும் அவசியம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை.

பதினாறு மணி நேர மின்வெட்டு அமலில் இருக்கும்
------------------------------------------------------------------------
இன்று தினமணி தலையங்கம்
------------------------------------------
இல்லாமை வேறு, இயலாமை வேறு, இயங்காமை வேறு!இன்றைய மின்உற்பத்தி இவ்வளவுதான்; இதைக்கொண்டு இவ்வளவு நேரம்தான் மின்சாரம் வழங்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.அரசின் இன்றைய நிலைமை இல்லாமைதானே தவிர, இயலாமையோ, இயங்காமையோ அல்ல.

**********

நண்பர் ஒருவர் இதைச் சுட்டிக் காட்டி தினமணியின் நேர்மை பற்றிக் கூறினார்.

தினமணியெல்லாம் நடுத்தெருவில் வைத்துக் கொளுத்த வேண்டிய ஒன்று, நடுக்கூடத்தில் வைத்து படிக்க வேண்டிய தரம் கிடையாது

Unknown said...

கண்ணனின் கூற்றே முற்றிலும் உண்மை! சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான்!

buginsoup said...

// இதை, அரசின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் சித்திரிக்கும்//

இதுக்கு மேல ஜால்ரா வேணுமா?

மாநில அரசின் திட்டமின்மை, சரியான அள்வில் மின் தேவையை கணிக்கத்தவறியமை, எல்லா வரிப்பணத்தையும் இலவசங்களாக மாற்றியது (மன்னிக்கவும், விலையில்லாமல் அளித்தது), இதெல்லாம் ரொம்பச்சரியா?

Appu Chellam said...

Dinamani oru admk support thalayangam. karuththu yenbatho sarithaan. aanaal pathavi yetru 1.5years aaguthu innum JJ yenna seythu kondu irukkiraarkal. Ippozhuthu thaane 10per konda kuzhuve amaithu irukkukkiraarkal. Ivvalavu naalaka thalaimai cheyalagathil yenna thaan seykiraarkal.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து தங்கள் எண்ணங்களை பின்னூட்டமாய் இட்ட அனைவருக்கும் நன்றி

dravid said...

கண்டிப்பாகப் படிக்கவும் என்பதால் தான் ,இந்த தினமணியின் நஞ்சு நன்கு தெரிய வந்தது. காலம் ,காலமாக இப்படித்தான் இந்த யோக்கிய சிகா மணிகள் தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்தி வருகின்றார்கள்.