ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, October 30, 2012
தினமணி தலையங்கம்..(கண்டிப்பாக படிக்கவும்) அதுவரை... இது தொடரும்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன் அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கியதில் முறைகேடு குறித்து நிரூபித்தால் பதவி விலகுவேன் என்று அறிவித்தார் அப்போது சட்டத் துறை அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். அமைச்சரவையில் மாற்றம் என்று பேசப்பட்டபோது, குர்ஷித் பதவி விலகுவார் என்று எதிர்பார்த்தால், அவரை வெளியுறவு அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர்.
ஐபிஎல் அணி உரிமம் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்து, பெரிய விவகாரமாகி, அதனால் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்த சசி தரூர், தற்போது மீண்டும் மனித வள ஆற்றல் துறைக்கு அமைச்சராக்கப்பட்டுள்ளார். மிகவும் பொருத்தமான பதவிதான் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது!
ஊழல் புகாரில் சிக்கியவர்கள், அந்த ஊழல் குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும்வரை தாங்களாகவே பதவி விலகுவதுதான் அரசியல் நாகரிகம். சல்மான் குர்ஷித் மீதும், சசிதரூர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். நிரூபிக்கப்படாதவரை தவறு இல்லை என்றால், ஆ. ராசாவையும் தயாநிதி மாறனையும் மீண்டும் அமைச்சர்களாக்கி அழகு பார்த்திருக்கலாமே...
ஆ. ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இதைக் கூறவில்லை. தமிழகம் காரணமே இல்லாமல் வஞ்சிக்கப்படுகிறதே என்கிற ஆதங்கம்தான். மத்திய அமைச்சரவை மாற்றம் எத்தகைய அளவில் எப்படி நடந்திருந்தாலும், இந்த மாற்றத்தால் தமிழகத்துக்குக் கிடைத்தது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. தமிழகத்தின் தலையாய பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் யாருக்குமே உளப்பூர்வமான அக்கறை இல்லை என்பதற்கு அமைச்சரவை மாற்றத்தில் தமிழகம் தவிர்க்கப்பட்டிருப்பது ஓர் உதாரணம்.
புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை அண்மையில் அமைச்சர் நாராயணசாமி சந்தித்துப் பேசியபோது, அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு நல்ல இலாகா அளிக்கும்படி கருணாநிதி கூறியதாகப் பேச்சு எழுந்தது. நல்ல இலாகாவாகக் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானபோது, அமைச்சர் பதவிகளை தமிழ்நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தக் கேட்கிறாரோ என்று நினைக்கத் தோன்றியது. அப்படி ஏதாவது செய்து, தமிழகத்தின் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நல்ல பெயருடன் மக்கள் செல்வாக்கைத் திமுக பெற்றுவிடுமோ என்கிற அச்சம் அதிமுக தலைமைக்கேகூட ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.
இன்றைய தமிழகத்தின் உயிர்த்தேவை மின்சாரம். உடனடியாக மின் உற்பத்தி செய்ய இயலாத நிலையில், வெளியில் இருந்துதான் விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தாக வேண்டும். ஆனால், மத்திய மின்வழித்தடத்தில் இடமில்லை என்று மறுக்கப்பட்டதால்தான் தமிழகத்தால் அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தாலும் மின்சாரத்தைக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை.
"வடமாநிலங்கள் தன் மின்வழித்தடப் பாதையை நவீனமயமாக்கி, கூடுதல் பாதைகள் அமைத்துத் தடையின்றி மின்சாரம் கிடைக்க வகை செய்துகொண்டுவிட்டன. கடைக்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கரிசனம் காட்டவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று வரும் தமிழகத்தின் காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் இத்தகைய மின்வழித் தடத்தை தமிழகத்துக்காக அமைக்கத் தவறிவிட்டனர்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில் - பிரச்னையை ஜெயலலிதா திசை திருப்புகிறார் என்பது மட்டுமே.
முதல்வர் ஜெயலலிதா இத்தகைய புகார் எழுப்பிய அடுத்த கணமே அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, உண்மையிலேயே தமிழர்களின் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு தன்னால் உதவ முடியும் என்று நினைத்திருந்தால், தற்போது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மின்துறையைத் தனது திமுக அமைச்சர் ஒருவருக்குப் பெற்றுத்தந்து, தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்கச் செய்திருக்க முடியும். இதை அவர், தனது தனிப்பட்ட சாதனையாகச் சொல்லிக் கொள்ளவும், 2014-மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசவும் வாய்ப்பாக அமைந்திருக்கும். இந்த வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி தவறவிட்டுவிட்டார். தமிழர் நலனும் நழுவிப் போனது.
மத்தியில் தமிழகத்துக்கான ஒரு மின்துறை அமைச்சர் இருந்தால், நாம் நீதிமன்றத்தின் படியேறி உபரி மின்சாரத்தைக் கேட்டு நிற்க வேண்டியதில்லை. மின்வழித்தடங்களை சரியாக அமைத்துக்கொண்டு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும் சிக்கல் இருக்காது. இதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகவே தெரியவில்லையே...
ரயில்வே, மின்சாரம், விவசாயம் போன்ற துறைகளை நமது மாநிலக் கட்சிகள் கேட்டுப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு, தனிப்பட்ட முறையில் பயனளிக்கும் துறைகளைத்தான் கேட்டுப் பெறுகின்றன. இல்லையென்றால், அப்படி வாய்ப்பிருந்தும் அமைச்சர் பதவியே வேண்டாம் என்று வலிய வரும் அதிர்ஷ்டத்தையும் எட்டி உதைத்து விடுகிறார்கள்.
÷இன்றைய தமிழக ஆளும் கட்சி மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சி. அதனால் தமிழகத்திற்கு வர இருப்பது வரப்போவதில்லை. சரி, மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவாவது தமிழக நலன் கருதி செயல்படுகிறதா என்றால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் அதன் பயன் அதிமுகவுக்குப் போய்விடுமோ என்று பயந்து, வேண்டுமென்றே வாளாவிருக்கிறது.
தங்களது தலைமையில் கூட்டணி அமையப் போவது இல்லை என்பதாலும், தங்களை மாநிலக் கட்சிகள் வளரவிடப் போவதில்லை என்பதாலும் தேசியக் கட்சிகளுக்கும் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. அப்படியானால், தமிழகத்தின் வருங்காலம்தான் என்ன? பகலில் இரவும், தெருவில் போதையுமாகத் தேர்தலுக்கு தேர்தல் நமது வாக்குகளுக்கு வழங்கப்படும் பிச்சைக் காசை எதிர்பார்த்து வாழ்வதுதான் நமது தலைவிதியா?
÷தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 மக்களவை உறுப்பினர்களும், கட்சி மனமாச்சரியங்களை மறந்து, தமிழகத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எப்போது செயல்படுகிறார்களோ, ஓர் குரலில் தமிழகத்தின் கோரிக்கைகளைத் தில்லித் தலைமைக்கு வலியுறுத்திப் பெறப் போகிறார்களோ, அப்போதுதான் தமிழகத்தின் தலைவிதி திருத்தி எழுதப்படும். அதுவரை... இது தொடரும்...!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தமிழகத்தின் தலை எழுத்து இந்த இரண்டு கழகங்களும். இவர்கள் பூண்டோடு அழியும் வரை நமக்கு எதிர்காலம் இல்லை. அருமையான பதிவு.
வருகைக்கு நன்றி கும்மாச்சி
Post a Comment