Wednesday, October 3, 2012

உணவகம் - ஆரோக்கிய பவன்




அடையாறு சிக்னலில் இறங்கி, சற்று கிழக்கு நோக்கி நடந்தால்..ஒரு பழைய கட்டிடம் இருக்கும்.அக்கட்டிடத்தின் வாசலில் சென்னை மாநகராட்சியின் குப்பைத்தொட்டியைப் பார்க்கலாம்.கட்டிடத்தில் ஒரு அழுக்கேறிய..வாசகங்கள் மறைந்து போன போர்ட் ஒன்று இருக்கும்.அதை சற்று எக்ஸ்ரே கண்ணுடன் பார்த்தால்..ஆரோக்கிய பவன் என்பதை கண்டுபிடித்து விடலாம்.உள்ளே நுழைந்தால்..கல்லாவில் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கும், அவ்வப்போது இருமலுடன்.இருமும் போதே தொண்டையில் சளி இருப்பதைக் காணலாம்.அவருக்கு டிபி யாய் இருக்கலாம்.அதனாலென்ன..

நாம் உள்ளே போய் அமர்ந்தால்..எல்லா மேசையிலும் ஈக்கள் குவிந்து இருக்கும்.அதனால் என்ன நாம ஈக்களையா சாப்பிடப் போறோம்.என்ன ஒன்று..அவை பக்கத்து தட்டில் அமர்ந்து, நம் தட்டில் அமராவண்ணம் இடது கையால் நாம் வீசிக்கொண்டிருக்கலாம்.காற்றுக்கு காற்று ஆச்சு...ஈக்களும் நம் தட்டை அண்டாது.சர்வர்..அவனது விரல்கள் அனைத்தையும் உள்ளே விட்டு..தண்ணீர் கொணர்ந்து வைப்பான்.

இரண்டு இட்லி ஆர்டெர் செய்தால்...அத்துடன் மஞ்சள் கலரில் ஒரு திரவம் (சாம்பார்?)..சற்று வெண்மையும் ,பச்சையும் சேர்ந்த கலரில் ஒரு சட்னி வைக்கப் படும்.இட்லியை சற்று கஷ்டப்பட்டுதான் விள்ள வேண்டும்.கல் போல இருக்கும்.இட்லி மலிவாய் இருப்பதால், வீடு கட்டும்சிலர்..செங்கல்லுக்கு பதிலாக இவற்றை வாங்கி உபயோகிப்பதும் உண்டு..என செவி வழிச் செய்தி.

கஷ்டப்பட்டு..இட்லி சாப்பிட்டுவிட்டு தோசை ஆர்டர் செய்தால்...நாயின் தொங்கவிட்ட நாக்கு போல் தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள்.கடையில் ஃபேனோ, ஏசியோ இல்லை எனினும், தோசை மட்டும் ஏசியில் வைத்திருந்தாற் போல சில்லென்றிருக்கும்.

கடைசியில் காஃபி சாப்பிடலாம் என்றால்..காஃபி என்னும் வெந்நீர் வரும் டபராவில் உள்ள அழுக்கை, கையினாலேயே அகற்றலாம்.அந்த அளவு சுத்தம்.

ஆரோக்கிய பவனில் உணவருந்துவோர் தேவைக்கென...கடையை ஒட்டி..சில மருத்துவர்கள் கிளீனிக் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்த கிளீனிக்கில் சம்பாதித்து தலைக்கு இரு வீடு வாங்கிவிட்டார்களாம்.

டெங்கு,சிக்கன்குன்யா போன்றவை வருபவர்கள்..உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள இந்த ஓட்டலுக்கு செல்லலாம் என சிபாரிசு செய்கிறேன்.