Thursday, November 29, 2012

காவிரி நதி நீர்..(தினமணி தலையங்கம்) கண்டிப்பாக படிக்கவும்





பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை!
By ஆசிரியர்

சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்'. இது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் காலதாமதத்தால் சலிப்புற்ற மக்களின் சொலவடை. அதை நீதிமன்றமே சொல்லத் தொடங்கினால் எப்படி?

ஒரு பிரச்னை முதல்முறையாக நீதிமன்றத்தின் படியேறும்போது இத்தகைய ஆலோசனை சரியானது. நியாயமும்கூட. ஆனால், காவிரிப் பிரச்னை அப்படியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு. காவிரி நடுவர் மன்றம், நதிநீர் ஆணையம், பிரதமர் முன்னிலையில் சமரசம் என்று எதுவுமே தீர்மானமான முடிவைத் தராத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தால், நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்களேன் என்று சொன்னால் எப்படி? கர்நாடகத்தைத் தமிழகமும், தமிழகத்தைக் கர்நாடகமும் பல வகையிலும் விமர்சனங்களை அள்ளி வீசிய பிறகு பேசித் தீர்த்துக் கொள்வது எப்படி சாத்தியம் என்று உச்ச நீதிமன்றம் யோசிக்க வேண்டாமா?

காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகம் யாருக்குமே கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்கிவருவதால்தான் இன்றைய சிக்கல் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது இந்தியா முழுமைக்கும் தெரியும். கர்நாடக மாநிலம் தமிழகத்துக்குத் தர வேண்டிய 52.8 டிஎம்சி தண்ணீரை வழங்கவும், பருவம் (ஸீசன்) என்றால் என்ன என்பதை வரையறை செய்யவும் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். இதன்படியே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 29}இல் பெங்களூர் சென்று பேசவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தையில் முடியாமல்தான் மத்திய அரசிடம் போய் நின்றோம். மத்திய அரசு நியமித்த நடுவர்மன்றத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்கவே இல்லை. இடைக்காலத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டதும் கிடையாது. காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் பிரதமரின் உத்தரவுக்கும்கூட மறுப்பு தெரிவித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்றத் தவறியதால், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான மாநிலம் கர்நாடகம். இந்நிலையில்தான், அதாவது பேசித் தீரவில்லை என்ற நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் சொல்கிறது, ""இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வுகாண வேண்டும்'' என்று.

இதைச் சொன்னதற்குப் பதிலாக, "நாங்கள் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். எங்கள் தீர்ப்புக்கு மரியாதையே கிடையாது. ஆகவே நீங்களே முடிந்தால் பேசிப் பாருங்கள்' என்று நீதிபதிகள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அத்தகைய மெய்யான வார்த்தைகள், இந்திய அரசையும், மற்ற மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும். ஆனால் நீதிபதிகள் அதைச் சொல்லாமல், இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண்பது முடியாதது ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்கே 3 நாள் மாநில எல்லையில் பஸ்கள் ஓடவில்லை. நடிக நடிகையர்களும் பங்குகொண்ட எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால், அணையின் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாகவே கர்நாடகம் பணிந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வர், தமிழகம் கேட்கும் நியாயமான அளவு தண்ணீரை வழங்க முன்வருவாரா?

இது ஒருபுறம் இருக்க, காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் வெளிநடப்பு செய்தபோது இந்தியாவில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், பெங்களூரில் தமிழக முதல்வருக்கு - அது யாராக இருந்தாலும் - அவமானம் நேர்ந்தது என்றால், தமிழ்நாடு கொந்தளித்து விடாதா? அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் ஏற்படக்கூடிய எதிர்போராட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இதைப் பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்திருந்தால், இத்தகைய ஆலோசனையைச் சொல்லியிருக்காது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும்கூட, தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்கக் கேரளம் மறுக்கிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. இதிலும்கூட, இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண வேண்டும் என்றால், தமிழக முதல்வர் திருவனந்தபுரம் சென்று அவமானப்பட வேண்டுமா?

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்குத் தொடுத்தால், அந்த வழக்கிலும்கூட, "தமிழக முதல்வர் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பேசித் தீர்வுகாண வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லுமா?

இதுவரை பல முறைக்கு மேல் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராதது காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. மத்திய அரசு நடுவர்மன்றம் அமைத்தும் பயனளிக்காத பிரச்னை இது. அதனால்தானே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு முறையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தால் எப்படி?

கர்நாடக மாநிலம் காவிரியின் மேல்பகுதியில் இருக்கிறது. அவர்கள் அணையைத் திறந்தால்தான் தமிழகத்துக்குக் காவிரி நீர். இந்தப் புவியியல் காரணங்களால், கர்நாடகம் "கொடுப்பவன்' நிலையில் இருக்கிறது. தமிழகம் "கொள்பவன்' நிலையில் இருக்கிறது. கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தமிழகத்தை ஒருநாளும் அழைக்கப்போவதில்லை. அவர்களுக்கு அது தேவையில்லாத வேலை. ஆனால், தமிழகம்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களிடம் செல்ல வேண்டும், வாசலில் நிற்க வேண்டும், அவர்கள் சொல்லும் மறுதேதிக்கெல்லாம் போயாக வேண்டும், அவர்கள் கொடுப்பதைப் பெற்றாக வேண்டும். இதற்குப் பெயர் பேச்சுவார்த்தையாக இருக்க முடியாது. பிச்சை கேட்பதாகத்தான் இருக்க முடியும்!

No comments: