Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, January 31, 2012

ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்





 தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது.
 இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு சந்திரகுமார் என்ற தேமுதிக எம் எல் ஏ எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,
தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக கூறினார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும்
விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில்
 தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார்.

 தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர்..ஆளுநர் ஆட்சி எனில் தனித்து நிற்கத் தயார் என விஜய்காந்த் கூறினார்


Sunday, October 9, 2011

திராவிடக் கட்சிகள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப இல்லை...





ஏறிய ஏணியை எட்டி உதைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்..
ஆனால்...தனது கட்சிக்கு உயிர் அளித்த கட்சிகளை எட்டி மிதித்ததை இன்று உள்ளாட்சி தேர்தலில் சந்திக்கிறோம்..

ஆம்..1967 ஆம் ஆண்டு..திராவிடக்கட்சியால்..தூக்கி எறியப்பட்ட காங்கிரஸ்..அதற்கு பின் ததிங்கணத்தோம் போட்டும்..தமிழகத்தில் தனியாக ஒன்றும் செய்ய முடியவில்லை.அதுவும் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., ஆரம்பித்ததும் தமிழகத்தில் மாற்றி மாற்றி இரு கட்சிகளே ஆட்சி அமைத்து வருகின்றன.மற்ற கட்சிகள் இவற்றுடன் கூட்டு சேர்ந்து சில இடங்களைப் பெற்று..அவற்றில் மிகச் சில இடங்களில் வென்று..தாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டி வந்தன.

இதற்கு..அகில இந்திய அளவில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல..

ஆனால்...பாலத்தை கடக்கும் யானையின் மீது அமர்ந்த கொசு தன் தயவால்தான் யானையால் பாலம் கடக்க முடிந்தது என்று கூறும் கதையைப் போல..எங்களது ஆதரவால்தான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் மாற்றி மாற்றி அரசு அமைக்க முடிந்தது என காங்கிரஸ் கூறுவது சிரிப்பையே வர வழைக்கிறது.
 அதுவும் அதை ஒரு மத்திய அமைச்சர்,(திராவிடக்கட்சியால் வென்று அமைச்சர் ஆனவர்) கூறுகிறார் என்றால்...!!!!!!

கடலூரில் பேசியுள்ள G.K.வாசன்..'இவ்வளவு ஆண்டுகளாக நமது ஆதரவுடன் மாற்றி மாற்றி ஆட்சி புரிந்த திராவிடக் கட்சிகள் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுள்ளார்.

பாரதியின் ஒரு கவிதையே இச் சமயத்தில் ஞாபகம் வருகிறது

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வா ரடி - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி
நாட்டத்தில் கொள்ளா ரடி - கிளியெ
நாளில் மறப்பா ரடி!

Wednesday, March 30, 2011

கே.வி.தங்கபாலுவின் சொத்து விவரம்..





தங்கபாலு வேட்புமனு தாக்கும் போது அறிவித்துள்ள சொத்து விவரம்..

திருவள்ளூர் மாவட்டம் கண்ணம்பாக்கத்தில் 31.51 ஏக்கர் நிலம் (இதன் இன்றைய சந்தை விலையை மிகவும் குறைத்து4 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்)

கிருஷ்ணகிரி மாவட்டம் இகண்டம் கொத்தபள்ளியில் 1.38 ஏக்கர் நிலம் (சந்தை விலை 17000 மாம்)

பள்ளிகரணையில் 1.35 ஏக்கர் நிலம் 2.55 லட்சம் இன்றைய விலையாம்

சைதாப்பேட்டையில் .54 ஏக்கர் நிலம்.தற்போதைய மதிப்பு 7.86 லட்சமாம்

தவிர்த்து மனைவி அறங்காவலராய் இருக்கும் அறக்கட்டளைக்கு ஓ.எம்.ஆர்., சாலையில் பல ஏக்கர் நிலம்..அந்த அறக்கட்டளை சார்பில் தங்கவேல் இஞ்சினீரிங்கல்லூரி.

மனைவியிடம் 2 கிலோ தங்கம், 21 கிலோ வெள்ளி.

தங்கபாலுவின் வேட்புமனுவில் சொத்துகள் விவரங்களையும்..சந்தைவிலையையும் மிகவும் குறைத்துக் காட்டியிருக்கிறாராம்.ஆகவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்

Monday, March 28, 2011

இங்கே யாரும் யோக்கியன் அல்ல





ஆளும் கட்சியானாலும் சரி..எதிர்க் கட்சி ஆனாலும் சரி அவ்வப்போது அடித்துக் கொண்டாலும்...ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் குறைவு இல்லை.

ஆனால் அது தெரியாதிருக்க அவ்வப்போது ஒன்றன் மீது ஒன்று அவதூறு சேற்றை வாரி வீசிக் கொள்ளும்.

கடைசியில்..இதைப் பார்க்கும் மக்கள் 'ஆகா..இந்தக் கட்சி எவ்வளவு யோக்கியம்' என்று எண்ணுவர்.

ஆனால் காமராஜர் சொன்னாற் போல்..'எல்லாருமே ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்' தான்.

இந்த எண்ணமே ..இன்றைய தினமணியின் இத் தலையங்கத்தைப் படித்ததும் தோன்றியது.
 
 
 

:என்ன உறவோ, என்ன பிரிவோ!


ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

மக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.

இந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனிநபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.

காங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக்கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.

அவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.

சில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்குரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் ""டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் "ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.

இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!

(நன்றி தினமணி )

Wednesday, March 9, 2011

தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் என்ன சொல்லும்..





தமிழகத்தில் அடித்துப் பிடித்து.. மறைமுகமாக மிரட்டியோ..எப்படியோ செய்து கேட்ட 63 தொகுதிகளை தி.மு.க., விடம் இருந்து வாங்கிவிட்டது காங்கிரஸ்.

இதை தி.மு.க., முன்னரே தந்திருக்கலாம்..ஏனோ தெரியவில்லை..மத்திய அரசிலிருந்து அமைச்சர்கள் ராஜிநாமா...பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு என்றெல்லாம் பேசப்பட்டது.

பூம்புகார் படத்திற்கு வசனம் எழுதிய கலைஞரும்..கண்ணகியாய் மாறி அரசி சோனியாவிடம்..நீங்கள் செய்தது நியாயமா..நேர்மையா..அழகா..தர்மமா என நீதி கேட்டார்.

தவறை சிலப்பதிகாரத்தில் உணர்ந்தான் மன்னன்.

ஆனால் சோனியாவோ பிடித்த பிடியை விட வில்லை..

கண்ணகியாய் மாறிய கலைஞர்..திடீரென தருமியாய் மாறினார்..நீங்கள் கேட்டதைக் கொடுத்துவிடுகிறோம்..கூட்டணியை விட்டு ஓட வேண்டாம் என வேண்டினார்.

நமட்டுச் சிரிப்புடன் காங்கிரஸும் ..மூன்று நாட்கள் அவதிப் படவைத்து , தான் கேட்ட 63 இடங்களைப் பெற்றது.ஆனால் கலைஞர் என்னும் ராஜதந்திரி..சாணக்கியர் மனதிற்குள் சிரித்திருப்பார்.

அவர் நினைத்தது நடந்துவிட்டது.

இனி..தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,வும் சேர்ந்து பணி புரிந்தாலே அவர்களால் வெற்றி பெற முடியும்..

இவ்வளவு ஆர்பாட்டங்கள் செய்த காங்கிரஸிற்கு தி.மு.க.,வின் உண்மையான தொண்டன் களம் இறங்கி உழைத்து வெற்றி பெற்றுத் தருவானா? சிறிது சந்தேகம் தான்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில்..தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் மண்ணைக் கவ்வியதற்கு..தி.மு.க., சரியாக உழைக்கவில்லை என்று புகார் சொன்னது நினைவிற்கு வருகிறது.

ஆகவே..தேர்தல் முடிவகள் வந்தபின் ..தி.மு.க., வினர் சரியாக ஆதரவு தராததாலேயே தோற்றோம் என காங்கிரஸ் சொல்லும்..

அதை எப்போதும் போல தி.மு.க., மறுக்கும்.

காங்கிரஸ் தனது கெடுபிடியின் மூலம் தன் தலையில் தானே மணலை வாரி போட்டுக் கொள்ளப் போவது என்னவோ உண்மையாகப் போகிறது.



Monday, April 19, 2010

நளினி-பார்வதி அம்மா-சோனியா மற்றும் கலைஞர்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..ஒரு வேளை நாடாளுமன்றத்திலும்..நிறைவேறி விட்டால்..பல மாநில சட்டசபைகளும் ஒப்புதல் தெரிவித்து அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலேயே அமுலில் வர நேரிடலாம்.

அப்படி நடந்தால் முதலில் மகளிர்களுக்கு வாழ்த்துகள்..கிட்சன் கேபினட் என்பது போல..வென்று வரும் எம்.எல்.ஏ.,க்களின் கணவர்கள் பினாமி எம்.எல்.ஏ.,க்களாக செயல் படாதிருக்கட்டும்.

அப்போது..தமிழகத்தில் 78 இடங்கள் மகளிருக்கு ஒதுக்க நேரிடும்..இதனால் தி.மு.க., மூத்தவர்கள் பலருக்கு தேர்தலில் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்..அப்படிப்பட்டவர்களுக்கு தஞ்சம் கொடுக்க மேலவை வரப்போகிறதே..ஐயா ஆர்.எம்.வி., பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்..ஆர்காட்டார்,பேராசிரியர்,வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் மேலவை உறுப்பினர்கள் ஆகலாம்.

சட்டசபை தேர்தலில்..காங்கிரஸுடன் ஆன கூட்டணியை கலைஞர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..காங்கிரஸ் கேட்கும் அளவு சீட் ஒதுக்கப்பட முடியாவிட்டால்..அவர்கள் பலரையும் மேலவை வரவேற்கக் காத்திருக்கும்..

காங்கிரஸுடன் ஆன கூட்டு நிலைத்திருக்க மேலும் வழி..சோனியாவை திருப்தி படுத்த வேண்டும்..

நளினி 19 ஆண்டுகள் சிறையில் கழித்தாயிற்று..அவரை விடுவிக்க மறுத்து தமிழகத் தரப்பில் சொன்ன காரணம்..அவர் சிறையில் இருந்தே பட்டப் படிப்புப் படித்துள்ளார்..மேலும்..அவரை வெளியே விட்டால்..ராயப்பேட்டையில்தான் தங்குவார்..அதன் அருகேதான் யு.எஸ்.,கான்சுலேட் அலுவலகம் உள்ளது....அடடா..எப்படிப்பட்ட காரணம் என நாம் வியந்தாலும்..சோனியா சற்று திருப்தி அடைந்திருப்பார்..இந்திராவின் மருமகளே வா..உனது ஆதரவைத் தா..

அடுத்து..பிரபாகரனின் தாய்..எண்பது வயது மூதாட்டி..சிகிச்சைக்காக வருகிறார்..கணவனையும் சமீபத்தில் இழந்தவர்..பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்..எழுந்து நடமாட முடியாதவர்..கொடுத்த அனுமதி மறுக்கப் பட்டு..வந்த மலேஷிய விமானத்தில் இருந்து இறக்கக் கூடப் படாமல் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்..குடியுரிமை அதிகாரிகளால்..இந்த விஷயம் கலைஞருக்கு தெரியாமல் நடந்து இராது..ஏதேதற்கோ..மைய அரசுக்கு கடிதங்கள் எழுதிக் குவிப்பவர்..எம்.பி.க்கள் குழுவை பிரதமரை சந்திக்கச் சொல்பவர் இந்த விஷயத்திலும் தலையிட்டிருக்கலாம்..தலையிடாததன் காராணம்..'சோனியாவே நமஹ..'வாய் இருக்கக்கூடும்.

ஒரு விதத்தில்..அனுமதி மறுத்தது நல்லதற்கே..அனுமதி அளித்திருந்தால்..ஒருவேளை..பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பிற்கு மூதாட்டிக்கு தொடர்பு என்று கூட சொல்லியிருப்பர்..

வெட்கம்..வெட்கம்...

Saturday, March 20, 2010

மக்களை மதிக்காத காங்கிரஸ்

தமிழில் ஒரு சொலவடை உண்டு..

கூரைஏறி கோழி பிடிக்காதவன்..வானமேறி வைகுண்டம் போனானாம்..

வேறுவிதத்தில் சொல்வதானால் 'உள்ளூரில் விலை போகாத சரக்கு வெளியூரில் விற்குமா"

விற்றிருக்கிறது...கூரை ஏறத் தெரியாதவர் வைகுண்டம் போகப் போகிறார்..

அவர்தான்..

காங்கிரஸ் தலைவியின் குடும்ப நண்பர் மணிஷங்கர் ஐயர்..(ஐயர் என்ன படித்து வாங்கின பட்டமா)

காங்கிரஸ், தி.மு.க., வலுவான கூட்டணி இருந்த போதும்..தன் சொந்தத் தொகுதியிலேயே மக்களால் புறக்கணிக்கப் பட்டவர்..மக்கள் அவர் தேவையில்லை என்று ஒதுக்கியப் பிறகு..அதற்கு மதிப்புத் தராமல் அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குகிறது காங்கிரஸ்..

இது மக்களின் எண்ணத்தை...மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது..

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..அந்த சகஜத்தை என்றுதான்..யார்தான் ஒழிப்பார்களோ?

Tuesday, October 20, 2009

ராஜபக்க்ஷேவும்..கேரளாவும்...

தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

கற்றவருக்கு சென்ற இிடமெல்லாம் சிறப்பு என்று இருந்த நாட்டில்..இன்று ..தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் 'செருப்பு" என்ற நிலை உருவாகி வருகிறதே..ஏன்?

தனித் திராவிட நாடு என்ற கொள்கையுடன் இருந்த திராவிடக் கட்சி..தேசிய ஒருமைப்பாட்டை மனதில் கொண்டு..அரசியலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த உடன்..தனித் திராவிட நாடு கொள்கையை கை விட்டது.

அனால் இன்று நடப்பதென்ன..

இலங்கை தமிழர் நிலைக் குறித்து அறிந்துவர சென்ற..எம்.பி.க்கள் குழு..அரசு அனுப்பாததாகவே இருக்கட்டும்..சென்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள்..அவர்களில் ஒருவரிடம்..

இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும் ..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும் என்றாராம்..அந்த ராஜபக்க்ஷே..அதை இவரும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாராம்..

உடனே தன் கண்டனத்தை அவர் தெரிவித்திருக்க

வேண்டும்..உடன் சென்ற எம்.பி., க்கள் குழு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்..

ஆனால்..அப்படி சொன்னதற்காகவோ என்னவோ..மத்திய அரசு இலங்கைக்கு 500 கோடி உதவி உடன் செய்துள்ளது.

அவமானப்பட்டது தமிழன்தானே..மைய அரசுக்கு என்ன கவலை?

ஒருவேளை ஒரு சிங்கோ,முகர்ஜியோ ஆனால் கண்டனக் குரல் கொடுத்திருக்கும்..

வெளிநாட்டில்தான் இந்த கதை என்றால்..

முல்லைப்பெரியாறு விவகாரத்தில்..உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது..ஆய்வு மேற்கொண்டுள்ளது கேரள அரசு..இதற்கு நம் முதல்வர் கண்டனம் தெரிவித்தால்..அவர் இவ்விகாரத்தில் அரசியலை புகுத்துகிறாராம்..கேரள அமைச்சர்கள் கூறுகின்றனர்.

தவிர..உச்ச நீதிமன்றத்தில்..இரண்டுமாதம் வழக்கை தள்ளிப் போடக் கேட்கிறார்கள்.அதற்குள்..வேலையை மேற்கொள்ளலாமே!

உச்ச நீதிமன்றம் இக்கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.

வழக்கம்போல ..இந்த விவகாரத்திலும்..ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு..மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிடுவார் முதல்வர்.

தமிழனுக்கு சென்றவிடமெல்லாம்.....

அவமானத்தை தாங்க மட்டுமல்ல..உரிமைகளும் விட்டுக்கொடுத்து விடுவான் தமிழன்..

கேட்டால்..அதுதானே தமிழர் பண்பாடு என்றிடுவான்.

Tuesday, October 6, 2009

அண்ணாவும்..பெரியாரும்..


எனது அண்ணா பற்றிய பதிவில்..நண்பர் Peer...கீழ்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்..

///Peer said...

//பெரியார்..மணியம்மையைக் காட்டி வெளியே வந்த அண்ணா..//காரணம் சரியா?///


அவருக்கு அந்த பதிவில் சரியான விளக்கம் அளிக்காததுபோல் உணர்ந்ததால் இப்பதிவு

சுயமரியாதையின் தாக்கம் திராவிட கழகத்தில் இருந்தது.அதன் வெளிப்பாடாக பகுத்தறிவு வாதம் மக்களிடையே வைக்கப்பட்டது.இக்கட்சியில்..தலைவர்,தொண்டர் என்றெல்லாம் கிடையாது.தந்தை,அண்ணன்,தம்பி என உறவுமுறையிலேயே அனைவரும் அழைக்கப்பட்டனர்.

கட்சியில் ஈ.வெ.ரா.,வை பெரியார்..தந்தை பெரியார் என்றும்..மூத்த உறுப்பினரான அண்ணாதுரையை அண்ணா என்றும் அழைத்தனர் தொண்டர்களான தம்பிகள்.அண்ணாவின் உழைப்பு கழகத்தை மக்களிடம் செல்வாக்குப் பெறச்செய்தது.

பெரியாருக்கும்..அண்ணாவிற்கும்..பாசப்பிணைப்பு இருப்பினும்..கருத்து வேறுபாடுகளும் இருந்தன.

புரட்சிக் கவி பாரதிதாசனுக்கு ..பாராட்டு விழா நடத்தி..பொற்கிழி வழங்கினார் அண்ணா..இதை பெரியார் விரும்பாததுடன்..அவ்விழாவையும் புறக்கணித்தார்.மேலும்..மாணவர்..இளைஞர்கள் வளர்ச்சியில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்ற எண்ணம் அண்ணாவிற்கு இருந்தது.

திராவிட கழக உறுப்பினர்கள் கருமை நிற சட்டை உடுத்த வேண்டும் என்றார் பெரியார்..அண்ணாவிற்கு அதில் உடன்பாடில்லை.போராட்டத்தில் ஈடுபடும் நேரம் மட்டும்..கருமை சட்டை அணிந்தால் போதும் என்றார்.ஆனாலும்..கட்சியின் தலைவருக்குக் கட்டுப்பட்டு..கருப்புச்சட்டை அணிந்தார் அண்ணா.

நம் நாடு சுதந்திரம் அடைந்த நாளை..துக்கநாளாக அனுசரிக்க பெரியார் சொன்னது..அண்ணாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.ஆகஸ்ட் 15ம் நாள்..துக்கநாள் அல்ல மகிழ்ச்சி நாள் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.இவ்வறிக்கை..கட்சியில் புயலை உருவாக்க..கட்சிப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கினார்.

பின் மீண்டும்..அண்ணாவும்..பெரியாரும் இணைந்தனர்.

1949 மே மாதம் 16ஆம் நாள் ராஜாஜியை..திருவண்ணாமலையில் சந்தித்து பேசினார் பெரியார்.மாறுபட்ட கருத்துடைய ராஜாஜியிடம் ..என்ன பேசினார் என அண்ணா வினவ..பெரியார் பதில் கூறவில்லை.ஆனால் ஜூலை மாதம் பெரியார்..மணியம்மையை மணந்தார்.கட்சியில் கடும் எதிர்ப்பு.அண்ணாவும் மனம் உடைந்தார்.இருப்பினும்..பெரியாருக்கு எதிராக கண்டனங்கள் வேண்டாம் என்றார்.

கருத்து வேறுபாடு முற்றிய நிலையில்..எதிர்காலம் பற்றி ஆலோசிக்க 1949 செப்டெம்பர் 17 ஆம் நாள் அண்ணா கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்.அப்போதுதான் தி.மு.க., பிறந்தது.

பின்னரே..
தி.க., தி.மு.க., இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார்.
தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் சொல்லப்பட்டது
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றது
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றது
பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்..தேங்காயும் உடைக்க மாட்டோம் என்றது.
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு என்றது...--எல்லாம்.

Monday, October 5, 2009

அண்ணாவும்..வினவு பதிவும்


அண்ணாவைப் பற்றி வினவு ஒரு பதிவு எழுதியுள்ளாரே..அப்பதிவிற்கு..ஏன் யாருமே எதிர் பதிவிடவில்லை என நோ எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு..வினவு பதிவின் லிங்கும் கொடுத்திருந்தார்.

ஒவ்வொருவருக்கு பிடித்த..பிடிக்காத ..தலைவர்களை விமரிசிப்பது தவறில்லை..ஆனால் அப்பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும்..அப்படி பார்த்ததில் வினவு பதிவில்..எனக்கு ஏதும் வரம்பு தாண்டியதாகத் தெரியவில்லை.அவர் கோணத்தில்..அண்ணாவை விமரிசித்து இருக்கிறார்.

ஆனால்..அரசியல் தலைவர்கள் என்று பார்த்தால்..அண்ணா சிறந்தவரே!

பெரியார்..மணியம்மை யைக் காரணம் காட்டி..வெளிவந்த அண்ணா..கடைசிவரை பெரியாரை மதிக்கத் தவறியதில்லை.அரசியலுக்கென ஒரு சில கொள்கைகளை சற்று விட்டுக் கொடுத்திருக்கலாம்.கடமை,கண்னியம்,கட்டுப்பாடை அண்ணா மீறியதில்லை.தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததும்...நாட்டில் விஷக்கிருமி பரவ ஆரம்பித்து விட்டது என்று சொன்னவரிடம் கூட இல்லம் தேடிச் சென்று ஆசி பெற்றவர் அவர்.

அண்ணாத்துரை முதலியார் என்றவர் அவர்..என்ற குற்றச்சாட்டிற்குப் போனால்...ஒவ்வொன்றும் அந்த காலகட்டங்களில் சரியாகத்தான் போயிருக்கும்..எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார்..
முந்தைய தலைமுறை..சட்டென மாற்றிவிட முடியாது..ஆகவே தானும் சற்று வளைந்து கொடுத்துத்தான் ஆகவேண்டிய நிலை.அவ்வளவு ஏன்..காமராஜ நாடார்,ராஜகோபாலாச்சாரி ஆகியவருடன் அரசியல் புரிந்த தருணம்.பெரியாரையும்..அப்போது 'நாயக்கரே' என்று அழைத்தவர்கள் உண்டு.

இவ்வளவு பேசுகிறோமே..இப்போது நடப்பது சாதி அரசியல் இல்லை என்று சொல்ல முடியுமா.இன்னமும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணைவேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தானே!

அடுத்து சம்பத் விலகி தனிக்கட்சி ஆரம்பித்தது..இது கட்சிகளுக்கு புதிதல்ல..காங்கிரஸிலிருந்து வெளியே வந்து கட்சி ஆரம்பித்து வென்றவர் எவர்.அது போல தாய்க்கழகத்திலிருந்து..பிரிந்து கட்சி ஆரம்பித்து வெற்றியடைந்தவர்கள் யார்? ஒரே ஒரு எம்.ஜி.ஆர்., அவ்வளவுதான்..மற்றவர்கள்..அவ்வப்போது நிலைமைக் கேற்ப கட்சியைஆரம்பித்து பின் கலைத்து ..ஏதேனும் திராவிடக் கட்சியுடன்..பதவிக்காக தன்மானம் இழந்து இணைந்தவர்கள்.

அதேபோல..1967ல் ஆட்சியை..அவர்களே..எதிர்ப்பாராமல் பிடித்ததும்..கட்சியின் தலைவரே..முதல்வர் பதவி ஏற்றது தவறல்ல..மேலும்..தி.மு.க.,வில் அப்போது அனைவரும் இளரத்தம்..அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய கருணாநிதி..அண்ணா மேடையிலேயே..பதவிக்கு வந்தால்..எனக்கு காவல்துறை மந்திரி பதவியைத் தாருங்கள்..காவல்துறையை பழிவாங்க வேண்டும் என்றார்.அப்படிப்பட்ட தருணத்தில் அனுபவமும்,விவேகத் தனமும் உள்ள ஒருவர் முதல்வர் ஆகவேண்டும்..அது தன்னால் மட்டுமே முடியும்..என அக்கட்சியின் தலைவன் எடுத்த முடிவில் தவறென்ன இருக்க முடியும்?

கடைசியாக..அண்ணா ஒரு சிறந்த தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Wednesday, September 9, 2009

தி.மு.க.,பற்றி ராகுல்..

பிரணாப் முகர்ஜி..நாட்டில் வறட்சியுள்ளதால்..அரசும்..அதிகாரிகளும் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும்.சுற்றுப்பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசிய அன்றே..காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி..திருவனந்தபுரம் வந்து ..அங்கிருந்து..நாகர்கோவிலுக்கு..ஹெலிகாப்டரில் வந்தார்.மூன்று நாள் தமிழக சுற்றுப்பயணம்.

விவசாயிகளையும் சந்தித்தாராம்..அவரிடம் அவர்கள் காவிரி பிரச்னை குறித்து பேச..கவலையுடன் அதைக் கேட்டுக்கொண்டார்.

மீனவர்களிடையே பேசும்போது..இலங்கை கடற்படையினரால் அவர்கள் துன்பப்படுவதைக் கேட்டுக் கொண்டார்.(கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது தனது பாட்டி என்பது அவர் ஞாபகத்தில் இருக்குமா?)

பின்னர் சத்யமூர்த்திபவனில்..காங்கிரஸார் இடையே பேசுகையில்..

உ.பி.யில் பா.ஜ.க., வை வீட்டிற்கு அனுப்பி விட்டோம்.சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம்.இனி அங்கு பா.ஜ.க., வளரமுடியாது என்றார்.

வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும் என்றார்.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி ஆட்சி அமைப்பதால் பொதுமக்களுக்கு சலிப்பு எற்படும் என்றார்.

(உள்பொருள்- தி.மு.க., ஆட்சியில் மக்கள் சலிப்படைந்து விட்டனர் என்கிறாரா?)

தி.மு.க., காங்கிரஸ் இடையே ஆன கூட்டணி முறியும் நிலைக்கு வருகிறது என்பதை ராகுலின் பேச்சு கோடிகாட்டுகிறது.

சரி..திரும்ப பதிவின் ஆரம்பத்திற்குப் போவோம்...

ராகுல் வர செய்யப்பட்ட ஏற்பாடுகள், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது..ராகுலின் ஹெலிகாப்டர்,கார் ஆகியவைக்கான செலவு..இதெல்லாம் பிரணாப் பேச்சுக்கு சம்பந்தம் இல்லாதவை என நம்புவோம்.

Friday, August 28, 2009

காங்கிரஸ் கட்சியும்..நடிகரும்...

காங்கிரஸ் கட்சியில் நடிகர்கள் சேர்ந்தால் என்னவாகும்..என்று யோசித்தேன்..முன்பெல்லாம் கூட தமிழக காங்கிரஸில் இந்த அளவு தலைவர்கள் பிணக்கு இருந்ததில்லை.ஆனால் இன்று?

தங்கபாலு கோஷ்டி,வாசன் கோஷ்டி,இளங்கோவன் கோஷ்டி,சிதம்பரம் கோஷ்டி..இப்படி சொல்லிக்கோண்டே போகலாம். இவர்களைத்தாண்டி சேரும் நடிகர்கள் பிரகாசிக்க முடியுமா?

உடன் எனக்கு நடிகர் திலகமே ஞாபகத்தில் வந்தார்..

ஆரம்பத்தில் தி.மு.க.,வில் இருந்தவர்..1955ல் கட்சி பகுத்தறிவு கொள்கைக்கு எதிராக திருப்பதி போய் வந்ததால்..கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.பின் 1961 முதல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராகவும்..மக்கள் தலைவர் காமராஜரின் பிரதம சீடனாகவும் இருந்தார்.காமராஜருக்குப் பின் இந்திராகாந்தியின் ஆதரவாளர் ஆனார்.1982ல் இந்திரா இவரை ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கினார்.பின் 1987ல்.எம்.ஜி.ஆர்., மறைவுக்குப்பின் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவக்கினார்.ஜானகி அணியுடன்..கூட்டு சேர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்க்கொண்டார்.அவராலேயே திருவையாறு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை.பின் 1989ல் தன் கட்சியை ஜனதாதள் கட்சியுடன் இணைத்து..ஜனதாதளத்தின் தமிழக தலைவரானார்.

மாபெரும் நடிகன்..சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்ப பின்னணி கொண்டவராலேயே அரசியல் சமாளிக்கமுடியவில்லை.நடிப்புலகில் கொடிகட்டி பறந்தவர்..அரசியல் வாழ்வில் படு தோல்வி அடைந்தார்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..கோஷ்டி தகராறில் சிக்கித் தவிக்கும் கட்சியில்..ஒரு நடிகன் சேர்ந்தால் அவனால் அதிக பட்சம் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை அனுபவிக்க மட்டுமே முடியும்.

இதுதான் யதார்த்தம்.

இப்பதிவு..தனிப்பட்ட யாரையும் மனதில் எண்ணி எழுதியதில்லை.

Friday, August 21, 2009

இடைத் தேர்தலும்..விஜய்காந்தும்..

இடைத்தேர்தல் நடந்த ஐந்து தொகுதிகளுக்கான முடிவுகள் எதிர்ப்பார்த்தபடியே தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பிரதான கட்சியான அ.தி.மு.க.,வும் தன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க.,மற்றும் பா.ம.க., கட்சித் தலைமை தேர்தலை புறக்கணித்தாலும்..அக்கட்சியின் தொண்டர்கள் புறக்கணிக்கவில்லை என்பது..வாக்குகள் விழுந்துள்ள சதவிகிதத்திலிருந்து தெரிகிறது.

அக்கட்சியின் தொண்டர்கள் வாக்குகள் எந்த கட்சிக்கு விழுந்துள்ளன..என பார்த்தால்..பெருவாரியானவை தி.மு.க., கூட்டணிக்கே விழுந்துள்ளன.ஒரு சிலரே விஜய்காந்திற்கு வாக்களித்துள்ளார்கள்.

மொத்த தொகுதியிலும் சேர்த்து தி.மு.க., கூட்டணிக்கு 3,98,177 வாக்குகளும்..டி.எம்.டி.கே., விற்கு 1,37,479 வாக்குகளும் விழுந்துள்ளன.

வாக்குகள் சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என விஜய்காந்த்..அவர் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்க சொல்லலாம்..ஆனால் உண்மையிலேயே..அ.தி.மு.க., போட்டியிடாததால் சில ஆயிரம் வாக்குகள் இவருக்கு அதிகமாக விழுந்துள்ளது.அவ்வளவே..

தான் மாபெரும் சக்தியாய் வளர்ந்து வருவதாய் எண்ணிக்கொள்ள ஏதுமில்லை.ஓட்டப்பந்தயத்தில்..நான் இரண்டாவதாக வந்தேன்..என..இருவர் மட்டுமே கலந்துக் கொண்ட பந்தயம் பற்றி பேசி என்ன பயன்.இனி வரும் நாட்களில்..கட்சியை பலப்படுத்துவதுடன்..கூட்டணிக்கும் அவர் தயாராய் இருந்தாலே..அவரால் இனி கட்சி நடத்த முடியும்..இல்லையேல்...வரும் தேர்தல்களில் நிற்க வேட்பாளர்கள் கூட தயாராய் இருக்க மாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி சொல்ல ஏதுமில்லை.தமிழ்நாட்டில்..தனியாக நின்றால்..கோவை,நாகபட்டிணத்தில் கூட அவர்கள் வெற்றி பெறமுடியாது.

பாவம்..பா.ஜ.க., அவர்களை விட்டு விடுவோம்...கொங்கு.......வேண்டாம் நமக்கு ஏன் பொல்லாப்பு.

அ.தி.மு.க.,வின் புறக்கணிப்பு...இதிலிருந்து கட்சி எழுந்திருக்க தலைமை..உடனே ஆவன செய்ய வேண்டும்.

இல்லையேல்..கலைஞர் சொன்னாற்போல தி.மு.க., மாபெரும் கட்சியாய் வளர்வதை தடுக்க முடியாது.

Monday, August 3, 2009

தம்பிதுரையால் அரசுக்கு இழப்பு..

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் அரசுக்கு லட்சக்கணக்கில் செலவு.

இளையாங்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி,மு.க., எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,விற்கு கட்சி மாறியதால்..தன் பதவியை ராஜினாமா செய்ய ..அந்த இடத்திற்கு இப்போது இடைத்தேர்தல்.

ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கண்ணப்பன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தி.மு.க.,விற்கு தாவியதால் தொண்டாமுத்தூர், கம்பம்..தொகுதிகளில் இடைத்தேர்தல்.

அ.தி.மு.க., எம்.எல்.எ., தம்பிதுரை..,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு..எம்.பி., ஆகி விட்டதால்..பர்கூர் எம்.எல்.ஏ., பதவியைத் துறந்தார்.அதனால் அங்கு தேர்தல்.

இவர்கள் எல்லாம்..ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வருகிறார்கள்.

ஒரு பதவியில் இருப்பவர்கள்..மற்ற பதவிக்கு போட்டியிட்டு வென்றால்..முந்தைய பதவியை விட்டு விலகுவதைத் தவிர.. மீண்டும் அவ்விடத்திற்கு நடைபெறும் இடைத் தேர்தல் செலவை அவ்வேட்பாளரே ஏற்க வேண்டும்..என அரசியல் சட்டம் மாற்றப்பட வேண்டும்.

மேலும்..கட்சி மாறும்,இடையில் அமரராகிவிடும்..வேட்பாளர்கள் தொகுதியில்..முன் தேர்தலில் வென்ற கட்சியே..வேட்பாளரை நியமித்துக் கொள்ளலாம்..என்ற நிலை வரவேண்டும்..

இல்லையேல்..மக்களின் வரிப்பணம் தேவையற்ற இடைத்தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவாவதை தவிர்க்க முடியாது.

இப்போது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க., வில் சேர்ந்து விட்டதால்..அடுத்து அத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது.

Wednesday, July 29, 2009

அ.தி.மு.க., எம்.பி., தேர்தல் செலவும்..எஸ்.வி.சேகரும்..

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்..தென்சென்னையில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.இதையடுத்து..ஒவ்வொரு வேட்பாளர்களும் தான் செய்த செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

எஸ்.வி.சேகர்..அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.பத்திரிகையாளர்களிடையே பேசிய சேகர்..நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., வெல்ல தான் 6 லட்சம் செலவு செய்ததாகவும்..மயிலை தொகுதியில்தான் அ.தி.மு.க., விற்கு அதிக வாக்குகள் விழுந்தன என்றும் கூறியுள்ளார்.மேலும் 17 ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி இது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டுகாலமாகவே..ஓரம்கட்டப்பட்ட சேகர் ஏன் 6 லட்சம் செலவு செய்தார்?

வேட்பாளர் செலவு செய்த கணக்கில் இந்த பணம் சேர்த்துக் காட்டப்பட்டுள்ளதா?

இல்லையெனில்..கணக்கில் வராமல் செலவு செய்துள்ளதா இப்பணம்.அதுவும் ஒரு சட்டசபைதொகுதியில்.
(6 சட்டசபை தொகுதி ஒரு பாராளுமன்றதொகுதி)

சேகர் சொல்வது உண்மையெனில்..தேர்தலில் தி.மு.க., பணத்தை வாரி விட்டு..வெற்றி பெற்றது என்று ஜெ சொன்னது..அவருக்கும் பொருந்தும் அல்லவா?

தேர்தல் ஆணையம்..வேட்பாளர் கணக்கை ஆய்வு செய்யுமா?

Tuesday, July 28, 2009

ஜெ வும்..விஜய்காந்தும்..

விஜய்காந்த் கட்சி ஆரம்பித்ததால்..அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க., என்று சொல்லலாம்.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில்...பல இடங்களில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில்.அ.தி.மு.க., தோல்வியடைந்தது.தி.மு.க., கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது.இத் தேர்தலில் விஜய்காந்த் வாங்கிய ஓட்டுகள் அ.தி.மு.க., விற்கு விழுந்திருந்தால்..ஜெ..மீண்டும் முதல்வர் ஆகி இருக்கமுடியும்.

ஏன்..அதனால் தி.மு.க., பாதிக்கப்படவில்லையா? என கேள்வி எழும்பலாம்..

உண்மையில்..விஜய்காந்தால்..தி.மு.க., விற்கு பெரும் பாதிப்பு இல்லை எனலாம்.ஏனெனில்..தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான கட்சி..அதற்கான வாக்கு வங்கியில் இருந்து ஓட்டுகளை மற்ற கட்சிகள் வாங்க முடியாது.மேலும்..சென்ற தேர்தலில்..தி.மு.க., சக்தி வாய்ந்த கூட்டணி அமைத்திருந்தது.அ.தி.மு.க., ஓட்டுகளே பிரிந்து விஜய்காந்திற்கு விழுந்தன எனலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும்...ஆயிரம் ஊழல் புகார்கள் கூறப்பட்டாலும்...தி.மு.க., விற்கும்..அ.தி.மு.க.விற்கும்..15 லட்சம் வாக்குகளே வித்தியாசம்..ஆனால் தே.மு.தி.க., பெற்ற வாக்குகள் 30 லட்சத்திற்கு மேல்.இவர்கள் ஒரே அணியில் செயல்பட்டிருந்தால்...தேர்தல் முடிவிலும் மாற்றம் இருந்திருக்கும்.மேலும்..அ.தி.மு.க.,வில் பூத் ஏஜண்டுகள் விலைபோனதையும் ஜெ கூறினார்.இது யார் தவறு?

..இனி வரும் தேர்தலில்..விஜய்காந்துடன் கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலை இனி திராவிட கட்சிகளிடையேக் கூட உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில்..இடைத்தேர்தலில் யாரும் ஓட்டுப் போட வேண்டாம்..என அ.தி.மு.க., கேட்பதை விடுத்து..விஜய்காந்திற்கு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.அப்படிப்பட்ட நிலை உருவானால்..தமிழகத்தில் இனி வரும் காலங்களில் பல மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்.

விஜய்காந்தும்...பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலே வெற்றி பெறமுடியும் என்பதை உணர வேண்டும்..இல்லையேல்...இனி வரும் தேர்தல்களில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கூட கிடைக்க மாட்டார்கள்.

Wednesday, July 22, 2009

அ.தி.மு.க., மெல்ல இனி....??

அ.தி.மு.க., இடைத் தேர்தலை புறக்கணிக்கும் என அறிவித்துள்ளது.ஜெ யை எதிர்த்து பேசத்தெரியா கூட்டணிக் கட்சிகளும்..புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

அதற்கான காரணங்கள் பலவற்றைக் கூறினாலும்..உண்மைக் காரணம் தோல்வி பயமே.

தேர்தல் ஆணையமும்..இத்தொகுதிகளில் வாக்களிக்க புது மின்னணு இயந்திரம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்..ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி..ஆளும் கட்சி செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும்..அதைவிடுத்து...பயந்து நடப்பது போல இருக்கிறது அதன் இன்றைய செய்கை.

1991 சட்டசபைத் தேர்தலில்..ராஜிவ் காந்தி மறைந்த சமயம் அது..224 தொகுதிகளில் அ.தி.மு.க.,கூட்டணி வெற்றி பெற்றது.பெரம்பூர் தொகுதி..ஒரு வேட்பாளர் மறைவால்..தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.கலைஞர் மட்டுமே..துறைமுகத்தில் வென்றார்.அப்போதும் மனம் உடையாமல்..தன் தோல்வியை ஒப்புக்கொண்டதுடன்..எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார்.

ஆனால் ஜெ யோ..ராஜிவ் இறந்த அனுதாப அலையில் வென்றாலும்..அதை ஒப்புக் கொள்ளாமல் அது தன் வெற்றி என்றார்.

பின் நடந்த இடைத்தேர்தலில் பெரம்பூரிலும்..துறைமுகத்திலும் தி.மு.க., வென்றது.

தேர்தலில்..வெற்றி..தோல்விகள் சகஜம்..அது எந்த காரணத்தால் ஏற்பட்டாலும்..அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெருந்தலைவர்..ஒரு மாணவனிடம்..தன் சொந்த ஊரிலேயே தோற்ற போதும்..அதை ஏற்றார்..வென்றவர்க்கு வாழ்த்து சொன்னார்.

அந்த பெருந்தன்மையை..இன்றைய தலைவர்களிடம்..எதிப்பார்க்கமுடியாவிடினும்...இதுதான் ஜனநாயகம் என்ற அளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டும்..

அதை..விடுத்து...தேர்தலை புறக்கணிப்போம் என்பது..ஜனநாயகத்தை..அக்கட்சி மதிக்கவில்லை என்றே ஆகிறது.

இந்நிலை நீடிக்குமேயாயின்..அ.தி.மு.க., மெல்ல இனி....

Tuesday, July 21, 2009

வைகோ விற்கு ஒரு கடிதம்..


தானை தளபதி வைகோ அவர்களுக்கு

நீங்கள் தி.மு.க., விலிருந்து..பிரிந்ததோ...அல்லது பிரிக்கப் பட்டதோ கண்டு மன வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

பிறகு தாங்கள் கட்சி ஆரம்பித்ததும்..உங்கள் தனித்தன்மை வெளிவரும் என்று நினைத்தேன்..ஆரம்பத்தில்..அப்படித்தான் தோன்றியது.பிறகு...காங்கிரஸ் கட்சியைப்போல் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் சவாரி செய்துதான் ஒரு சில இடங்களில் வெல்ல முடிந்தது.

இது எல்லாம் பழங்கதை..அதைப் பற்றி இப்போது பேசி பயனில்லை என்று எனக்குத் தெரியும்...

ஆனால்..அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டசபைக்கான 5 தொகுதிகளில் போட்டியிடாமல்..புறக்கணிப்பதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது.அதற்கு அவர்கள் ஆயிரம் காரணம் கூறினாலும்..உண்மையான காரணம் 'தோல்வி பயம்"

ஆனால்..அதற்காக அவர்கள் கூட்டணியில் உள்ள நீங்களும் தேர்தலை புறக்கணிக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.5 தொகுதிகளிலும் ம.தி.மு.க., போட்டியிடட்டும்.அ.தி.மு.க., வின் ஆதரவைக் கேளுங்கள்.தி.மு.க.,விற்கு சரியான போட்டியை உங்களால் கொடுக்க முடியும்.அதை விடுத்து..கூட்டணி தர்மம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால்..அடுத்து தயாராக இருக்கும் விஜய்காந்த் கட்சி போட்டியிட்டு..சில இடங்களை வெல்லக்கூடும்.

அடுத்து வரும் தேர்தல்களில் உங்கள் கட்சி மிகவும் பின்னுக்குத் தள்ளப்படும்.மேலும் தேர்தலை புறக்கணிப்பது என்பது..அரசியல் கட்சிகளின் ஜனநாயக விரோத போக்கையே உணர்த்தும்.

நீங்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்..நாடாளுமன்றத்தில் 15000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.அதாவது ஒரு சட்டசபைத் தொகுதிக்கு சராசரியாக 2500 வாக்குகளே குறைவு.அதனால் சட்டசபை இடைத்தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத்தானே அர்த்தம்.

இந்நிலையில் நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கோண்டு..கூட்டணி கட்சிகளின் ஆதரவைக் கேட்டு பெற்று, எல்லாதொகுதியிலும் போட்டியிடுவதே..கட்சியின் எதிர்காலத்திற்கு சிறந்தது.

சற்று சிந்திக்கவும்..

இப்படிக்கு
உங்கள் நலம் நாடும் தோழன்

Sunday, July 12, 2009

திருவள்ளுவர் சிலை திறப்பும்...துரைமுருகன் பதவி பறிப்பும்

ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பெங்களூரு வில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.18 ஆண்டுகளாக சிலை திறக்க அனுமதி அளிக்காத கன்னடர்கள்..பதிலுக்கு கன்னட கவி சர்வஞ்னர் சிலையை சென்னையில் வைக்க அனுமதி கொடுத்தால்...திருவள்ளுவர் சிலை அமைக்க ஒப்புக் கொள்வதாக கோரிக்கை வைக்க..தமிழக அரசும் ஒப்புக் கொண்டது.

சமீபத்தில் சென்னை வந்த எடியூரப்பா கலைஞரிடம் இது குறித்துப் பேச..கலைஞரும் ஆகஸ்ட் 10 அல்லது 13ஆம் நாள் சர்வஞ்னர் சிலையை சென்னையில் வைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனிடையே..ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்துக் கர்நாடகாவிற்கும்..தமிழகத்திற்கும் சர்ச்சை இருந்துக் கொண்டிருக்கிறது.

கர்னாடகா முதல்வர் சென்னையில் கலைஞரை சந்தித்து...சிலைகள் பரிமாற்றம் பற்றி மட்டுமே பேசினார் என்றால் சரி.

இதற்கும்..துரைமுருகன் திடீரென பொதுப்பணித்துறையிலிருந்து விடுவிக்கப் பட்டதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோமாக.

கர்நாடகாவும்..அப்படி ஒரு கோரிக்கைவைத்து.. கலைஞரும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

துரைமுருகன் பொதுப்பணித்துறையிலிருந்து விடுவிக்கப் பட்டது எதேச்சையாக நடந்திருக்கக்கூடும்.

Thursday, July 2, 2009

எஸ்.வி.சேகர் செய்வது நியாயமா?

சேகர்...2006க்கு முன்..ஒரு நடிகர்.ஒரு முறை தேர்தலில் சுயேட்சையாக நின்று..மைலாப்பூர் தொகுதியிலேயே 1500 ஓட்டுகள் மட்டுமே பெற்றவர்.பின்..பி.ஜே.பி., என்றவர்..சங்கராச்சாரியார் என்றவர்..அம்மாவிடம் தஞ்சம்.

மைத்ரேயனுக்குத்தான்..மைலை தொகுதி என்ற நிலையில்..ஜெ..இவருக்கு கொடுத்தார்.இரட்டை இலை சின்னம் என்பதால் வெற்றி பெற்றார்.அதுவும் எதிர்த்து போட்டியிட்ட நெப்போலியனை..குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பின்னர்...தலைமையிடம் மனக்கசப்பு...சேகர்..எப்போதும் தனக்கு சரியென்று தோன்றுவதை செய்பவர்.விளம்பரப் பிரியர்.அப்படிப்பட்டவரால்..அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு...காலில் விழும் கட்சியில் குப்பை கொட்ட முடியுமா?

விரிசல்...பெருகியது..

இந்நிலையில்.. மற்ற எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்தபொது..செக்யூரிட்டியினர்..இவரை விட்டு விட்டனர்.நான் திரிசங்கு நிலையில் இருக்கிறேன்..என்கிறார்.

இவர் செய்வது நியாயமா...

சேகர்....

கட்சி உங்களை ஒதுக்கினாலும்...நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க., வேட்பாளராக..

ஆகவே..அக்கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும்..அவர்கள்..சட்டசபையில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.அதை விடுத்து..தனியாய் செயல்படுவேன்..என்றால்..நீங்கள்..உங்களைத் தேர்ந்தெடுத்த மைலை வாக்காளர்களுக்கும் உண்மையாய் இல்லை என்றே ஆகிறது.

இப்படியே..அடுத்த இரு வருடங்களை ஓட்ட நினைத்தால்...சபைக்கே வராதீர்கள்.சட்டசபைக்கு வந்துதான் தீருவேன் என்றால்...நீங்கள் சார்ந்த கட்சிக்கு கட்டுப்படுங்கள்..அக்கட்சி உங்களை நிராகரித்தாலும்.

ஆது..முடியவில்லை எனில்..பதவியை ராஜிநாமா செய்யுங்கள்.பின் நடக்கும்..இடைத்தேர்தலில் போட்டியிட்டு (எந்த கட்சி சார்பாய் இருந்தாலும்) வெற்றி பெற்று...மக்கள் உங்கள் பக்கம்தான் என நிரூபியுங்கள்.

அதைவிடுத்து...சட்டசபையிலும்..நகைச்சுவையாளன் என்பதை எஷ்டாபிளிஷ் செய்ய வேண்டாம்.

இது..எந்த உள்நோக்கமோ ..கட்சியை ஆதரித்தோ எழுதப்படவில்லை.

...மைலை வாக்காளரில் ஒருவன் என்ற முறையிலும் எழுதப் பட்டது.