Friday, January 13, 2012

அதிமுக விலிருந்து விலக்கம் ஏன்? - நடராஜன்





அதிமுகவிலிருந்து தான்,தனது மனைவி சசிகலா மற்றும் குடும்பத்தினர் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்புத் தகவல்களை
 தஞ்சாவூரில் தான் நடத்தவுள்ள பொங்கல் விழாவின்போது நடராஜன் வெளியிடுவார் என்று பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

தனது குடும்பத்துக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே என்ன பிரச்சினை, என்ன காரணத்திற்காக தாங்கள் வெளியேற்றப்பட்டோம்
என்பது உள்ளிட்ட பல தகவல்களை அவர் அந்த விழாவின்போது அம்பலப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

 சசிகலா குடும்பத்தினர் சமீபத்தில் கூண்டோடு அதிமுகவை விட்டு விரட்டப்பட்டனர். ஆனால் நீக்கப்பட்ட பின்னர் இவர்களில் யாருமே இதுவரை வாய் திறக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் முதல் முறையாக சசிகலா குடும்பத்தினர் வாய் திறக்கப் போகின்றனர். குடும்பத்தினர் சார்பாக
 நடராஜன், அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தங்களது தரப்பு நியாயத்தை தஞ்சாவூரில் தான்
நடத்தவுள்ள பொங்கல் விழாவின்போது விரிவாக எடுத்துரைக்கப் போகிறாராம்.
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சாவூரில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விழா நடத்துவது
 நடராஜன் வழக்கம். அந்த வகையில், தற்போதைய பொங்கல் பண்டிகையயையொட்டியும் அவர் விழா நடத்துகிறார்.

தமிழர் கலை இலக்கிய திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழா தஞ்சாவூரில் உள்ள நடராஜனுக்குச் சொந்தமான
கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.. இதில் தான் சார்ந்த முக்குலத்தோர் வகுப்பு பிரமுகர்களையும், நண்பர்களையும்
அழைத்துள்ளாராம். இந்த நிகழ்ச்சியில் தனது பலத்தைக் காட்டவும், தேவர் சமூகத்தினர் தன் பக்கம்தான் உள்ளனர் என்பதை
 காட்டவும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்களையும் கண்டிப்பாக வருமாறு அழைத்துள்ளாராம் நடராஜன்.

3 நாள் விழாவாக இது நடைபெறுகிறது. ஜனவரி 15ம் கலை, கலாச்சார நிகழ்ச்சியாக நடைபெறும்.
ஜனவரி 16ம் தேதி 2வது நாள் விழாவில், அடுத்த நாள் முல்லைப் பெரியாறு-வரலாறு, பிரச்சினைகள் மற்றும் தீர்வு என்ற
பெயரில் மாநாடாக நடைபெறுகிறது.

3வது நாளான ஜனவரி 17ம்தேதி தான் எழுதிய மூன்று புத்தகங்களை வெளியிடுகிறார்.
விழாவின் இறுதி நாளில் சிறப்புரையாற்றுகிறாராம் நடராஜன்.அப்போதுதான் ஜெயலலிதா குறித்தும்,
அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது குறித்தும் விரிவான விளக்கம் அளித்துப் பல்வேறு தகவல்களை அவர் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.

(தகவல் -தட்ஸ்தமிழ்)

2 comments:

Yaathoramani.blogspot.com said...

இவையெல்லாம் மீடியாக்கள் பில்டப்
செய்கிற செய்திகளாக இருக்கும் என நினைக்கிறேன்
இப்போதைய நிலையில் பம்முவதுதான்
அவர்கள் சேர்த்துவைத்திருக்கிற சொத்துக்களை
பாதுகாப்பதற்கு ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்
பார்ப்போம்
த.ம 2

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.