எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பாசனத்துறை அமைச்சராக இருந்த கா. ராஜா முகமது, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன்,
கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு பல்வேறு முரண்பட்ட தகவல்களை கூறிவருகிறது.
அணைக்கு தகுந்த பாதுகாப்பு தருவோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால் அதே அரசு அணையை உடைக்க முயற்சிக்கிறது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு கருதி ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கிறது. ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சரான
கேரளத்தைச் சேர்ந்த ஏ.கே. அந்தோனியோ அணையின் பாதுகாப்பு குறித்து கப்பல் படையைக் கொண்டு ரகசியமாக ஆய்வு நடத்துகிறார்.
எனவே ஏ.கே. அந்தோனியை அந்த பதவியில் இருந்து விலக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டியதில்லை என்று ஒரு போதும்
எம்.ஜி.ஆர். பேசியது இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர். பேசியதாக, மத்திய அரசுக்கு அச்சுதானந்தன் தவறான தகவலை அளித்துள்ளார்.
அப்போதைய மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அணையைப் பார்வையிட்டு, நீர் வடிகட்டிகள், வெள்ளம் வழிய 3 பெரிய மதகுகள் அமைத்து
காலத்திற்கேற்ற வகையில் மாற்றி வடிவமைக்கக் கேட்டுக் கொண்டார். அந்த பணிகளை நிறைவேற்றவே அப்போது அணையின் நீர்மட்டத்தை
136 அடியாக குறைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.
1980-ல் பணிகள் முடிந்த பிறகு, அணை புதிய அணை போல ஆகிவிட்டது, எனவே நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று
மத்திய நீர்வள ஆணையத் தலைவர் கூறினார். ஆனால் அதற்கு அப்போது கேரள அரசுதான் முட்டுக்கட்டையாக இருந்தது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தால் முல்லைப் பெரியாறு அணை
பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது இவ்விரு பகுதிகளை தமிழக அரசு தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டம் இருக்குமேயானால்
சட்டப்பேரவையில் அது குறித்த தீர்மானம் கொண்டு வரலாம் என்று மொழிவாரி மாநிலம் அமைக்கும் கமிட்டியின் தலைவர் பணிக்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்போது நாம் நமது உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டோம்.
இப்போது அவ்விரு பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது குறித்த ஒரு தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும்
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வர வேண்டும்.
இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் முல்லை பெரியாறு அணைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றனர்.
1 comment:
எல்லாம் அரசியல்.......
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment