Sunday, January 8, 2012

ரசம் வைப்பது எப்படி..- அதன் பயன்கள் என்ன - வைரமுத்துவைரமுத்து விகடனில் எழுதி வரும் மூன்றாம் உலகப் போர் தொடர் பற்றி நான் ஏற்கனவே என் பக்கங்களில் எழுதியுள்ளேன். மிகவும் அருமையான இலக்கிய நடையுடன் எழுதி வருகிறார். இந்த வாரம் கிராமத்தில் வாழும் சிட்டம்மா..அமெரிக்காவில் இருந்து வந்துள்ள எமிலிக்காக ரசம் வைக்கிறார்.அது எப்படி என்பதை..வைரமுத்து எழுதியுள்ளபடி...

'சிட்டம்மா ரசம்வைக்கிறதையே கொட்டக் கொட்டப் பார்த்துக்கிட்டிருக்கா எமிலி.எப்படியாச்சும் அந்த 'சூப்" பு வைக்கிற சூத்திரத்தைக் கண்டுபுடிச்சாகணும் அவளுக்கு..

இடுப்புல கொசுவத்த இழுத்துச் சொருகி ஆரம்பிச்சுட்டா சிட்டம்மா.

குத்துச் சொம்புல தண்ணி ஊத்தி ஒரு புடிச்சபுடி புளி எடுத்துக் கரகரகரன்னு கரைச்சு ஊற வச்சா.அதுல உப்புத் தூளை அள்ளி எறிஞ்சா.அதத் துண்டா எடுத்துத் தூர வச்சுட்டா.மிளகு,சீரகம் ரெண்டையும் அம்மியில் வச்சு நச்சு நச்சுன்னு நசுக்கினா.பள்ளிக்கூடத்துல வாத்தியாரு தன் பிள்ளைய அடிக்கிற மாதிரி, வெள்ளைப் பூண்டைத் தட்டியும் தட்டாம வச்சுக்கிட்டா.மூணையும் ஒண்ணு சேத்தா. வட சட்டியில கடலெண்ணெய ஊத்தி எளஞ்சூட்டுல சுட வச்சா.கடுகு, உளுத்தம் பருப்பு ரெண்டையும் எடுத்து எறிஞ்சா கொதிக்கிற எண்ணெய் மேல.அதுக சட்புட்டுன்னு வெடிச்சு சட்டிக்குள்ள தீபாவளி கொண்டாடுதுக.இப்ப...கிள்ளி வச்ச பட்ட மொளகாயும் கருவேப்பிலையும் போட்டுச் செல்லமா வதக்குனா.நான் கறுப்பாய் போகப் போறேன்னு கருவேப்பிலை சொன்னதும் நிறுத்திட்டா.நசுக்கி வச்ச மிளகு,சீரகம், பூண்டு மூணையும் இப்ப உள்ள போட்டா.

இப்ப..கரைச்சு வச்ச புளித்தண்ணிய எடுத்தா சிட்டம்மா.அதுல பொதுக்குன்னு கைய விட்டுக் கொதுக்குகள ஒதுக்கிப் புழிஞ்சு எறிஞ்சா.

அடுப்புச் சட்டியில ஊத்துனா புளித் தண்ணிய.மாமியா மாதிரி தகதகன்னு எரிஞ்சுக்கிட்டிருந்த நெருப்ப புதுப் பொண்ணு மாதிரி அடக்கி வாசிக்க வச்சா.

ஒரே சீரா எரிச்சா..

அது பொதுபொதுன்னு சூடாகி பொத்துனாப்புல நுரை கட்டவும் ஒரு மல்லித் தழைய உள்ள போட்டுக் கொதிக்கு முன்ன எறக்கிட்டா.

ஆவி பறக்காம மூடி போட்டு ஒரு ஓரமா வச்சுட்டா.

செய்முறை இருக்கட்டும்.ரசம் என்ற பானத்துக்குள் இத்தனை உள்ளீடுகளா? திக்கு குக்காடிப் போனா எமிலி.மடிக்கணினி எடுத்து ஒண்ணொண்ணா ஆராய்ச்சி பண்றா.

மிளகு  -   சுவை அரும்புகள் தூண்டுவது.புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.

சீரகம்  - செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரிசெய்வது.மனிதத் தேவைக்கான மெக்னீஷியம் கொண்டது.

பூண்டு  - கிருமிகளின் முதல் எதிரி.கொழுப்புகளை உடைப்பது.பக்கவாதம் தடுப்பது.ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம்,கால்சியம், பொட்டாசியம் கொண்டது

கடுகு  -  எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது.நல்ல கொழுப்பு உடையது

புளி   -  வயிற்றுக் கோளாறு சரி செய்து, இருதயம் வலிமை செய்வது

மிளகாய்  - வைட்டமின் ஏ,சி இரண்டும் கொண்டது.ரத்த ஓட்டம் அதிகரிப்பது.ஆண் குறியில் புற்றுநோய் தடுப்பது

கறிவேப்பிலை  - தோல் தொற்று தடுப்பது.சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது.தாதுக்களும் நார்ச்சத்துக்களும் மிக்கது

மல்லித் தழை  - இரும்புச் சத்து மிக்கது. எலும்புத் தேய்மானம் தடுப்பது

கணினிய மூடிட்டுக் கண்னையும் மூடிக் கிட்டா எமிலி.

ஓர் உணவின் துணைப் பொருட்களில் இத்தனை மருத்துவக் குணங்களா?

இந்தியாவே உனக்கு வணக்கம்.

சிட்டம்மாவுக்கும் அவ சமயல்கட்டுக்கும் நல்லா வளஞ்சு நம்ம ஊரு கும்புடு ஒண்ணு போட்டா.

டிஸ்கி- வைரமுத்துவின் இலக்கிய நடைக்கு கும்புடு ஒண்ணு போடுவோம்.

16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் சீரகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி செந்தில்குமார்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க.

ராஜ நடராஜன் said...

ஏன் கலைஞர் மேடை கிடைக்கலியாக்கும்!வைரமுத்து ரசம் வைக்க கிளம்பிட்டார்.ஆனாலும் நல்லாத்தேன் சமைக்கிறாரு.

Ramani said...

நானும் படித்தேன்
முன்பு பிரசவத்தை படிப்பவரும் உணரும் விதமாக
எழுதி இருந்தார் படித்துப் படித்து மாய்ந்து போனேன்
இந்த ரசமும் அருமை
படிக்காதவர்கள் படிக்க பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 4

மாதேவி said...

ரசத்தை இரசனையுடன் ஆக்கத் தெரிந்தவரல்லவா.... அருமை.

ஹேமா said...

அட...தளம் மாறி வந்திட்டேனாக்கும்ன்னு 2-3 தரம் என் கண்ணைத் திட்டிட்டேன்.
சரி சரி ரசம் வாசனை !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

D.R.Ashok said...

இரண்டு நாள் முன்னாடி தான் சாம்பார் வைக்க கற்றுக்கொண்டேன்.. இப்ப ரசம்.. :) thank u

Vijayan K V said...

நன்றி செய்ல்முறை அருமை. இரசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

Vijayan K V said...

நன்றி செய்ல்முறை அருமை. இரசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

Vijayan K V said...

சூப்பர் இரசம் நன்றி