Friday, May 11, 2012

வழக்கு எண் 18/9..- நீதிமன்ற விசாரணை




வழக்கு எண் 18/9 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

நீதிமன்ற சிப்பந்தி - (குரலிடுகிறார்)வழக்கு எண் 18/9..பொதுஜனம் vs பாலாஜி சக்திவேல்

நீதிபதி- வழக்குரைஞர்கள் தங்கள் வாதத்தை ஆரம்பிக்கலாம்

பொதுஜன வக்கீல் - யுவர் ஹானர்..இந்த படம் சில தவறான உதாரணங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக ..தனியார் பள்ளி கரஸ்பாண்டண்ட் ஒரு பெண்..அவர் ஒரு பிம்ப் ஆகவும்..அவரது குணத்தால் அவரது கணவர் விட்டுவிட்டு ஓடியதாகவும்..அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போலவும்..அமைச்சர்கள் தொடர்பால் இப்படி நடப்பதாகவும் கூறப்படுவது ..பொதுமக்களிடையே...தேவையில்லாமல்...தனியார் பள்ளி நிர்வாகிகள் எல்லாமே இப்படியோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
அடுத்ததாக..காவல்துறை...இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை? இந்த படத்திலும்..காவல்துறை அதிகாரி..ஏழைகளின் புகாரை வெகு அக்கறையுடன் வாங்குவது போல காட்டினாலும்...சொந்த நலனுக்காகவும்,அமைச்சரின் கட்டளைபடியும், ஜாதிக்காகவும் துரோகம் இழைப்பதாகக் காட்டப்படுகிறது..இதுவும் கண்டிக்கத்தக்கது.
+2 படிக்கும் செமிஸ்ட்ரி மாணவன்..தன் விருப்பத்திற்கு இணங்காத மாணவி மீது ஆசிட் கொட்டுவதாகக் காட்சியைப் பார்த்து...ஆண்டவா..இனி வரும் நாட்களில், ஏதேனும் பள்ளியில், யாரேனும் மாணவன் இது போன்ற செயலில் ஈடுபட்டு..இந்த படத்தைப் பார்த்து தான் கற்றுக் கொண்டதாக நடக்கக்கூடாது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலாஜி சக்திவேல்... தன் முந்தைய "காதல்" படத்திலும்..பள்ளி மாணவி..படிக்காத மெக்கானிக் ஷாப் பையனுடன் ஓடுவதாகக் காட்டினார்..இப்படத்திலும்..பள்ளி மாணவி..பள்ளி மாணவனிடம் சிக்குவதாகச் சொல்லியுள்ளார்.இது..மாணவப்பருவத்தினடையே நஞ்சை விளைவிப்பதாகும்..இக்குற்றச்சாட்டுகளை ஏற்று படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

நீதிபதி - எதிர்தரப்பு தன் வாதத்தை தொடங்கலாம்.

பாலாஜி வக்கீல்- யுவர் ஹானர்...நாட்டில் நடக்காத எதையும் என் கட்சிக்காரர் படத்தில் காட்டவில்லை.படம் பார்ப்போர் அனைவரையும் கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.ஃப்ளாட்ஃபாரக்கடை, வட இந்தியா முறுக்கு கம்பெனிக்கு விற்கப்படும் சிறுவர்கள்,கந்து வட்டி, உடலைவிற்று பிழைப்போர் திருந்துவது போன்ற பல விஷயங்களை இப்படம் சொல்கிறது.படத்தில்..எடிடிங் அருமையாக உள்ளது.எதிர்பாராத கிளைமாக்ஸ்.ஊடகங்கள் பாராட்டுகின்றன.இதையெல்லாம் கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதிபதி - இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது..
         நாட்டில் நடப்பதைத் தான் கூறுகிறோம் என குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் கூறினாலும்..சமுதாயத்தில் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.பள்ளியின் கரஸ் என காட்டப்பட வேண்டிய அவசியம் என்ன? விடலைப் பருவத்தினர் மீது பெற்றோர் ஒரு கண் வைத்திருக்க வேண்டும், பாக்கெட் மணி தாராளமாய் கொடுத்தாலும்..கணக்கு பார்க்க வேண்டும்..என்றெல்லாம் பெற்றோருக்கு அறிவுரையை மறைமுகமாகக் கூறியுள்ளதை இந் நீதி மன்றம் பாராட்டுகிறது.
மனுதாரரைப் பொறுத்தவரை..படத்தின் முன் பாதியில் இருந்த சமூக அக்கறை இயக்குநருக்கு பின் பாதியில் இல்லை என்பதை ஓரளவு உண்மையாய் இருந்தாலும்...வாழ்க்கையின் மறுபாதியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதை மறக்கக் கூடாது.

இப்படிப்பட்ட படம் எப்போதோ ஒன்று தான் வருகிறது.அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்கமுடியாது.

இது போன்று தேவையில்லாமல் வழக்கு போட்ட பொதுஜனம்..நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதால்..இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என இந்  நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
 

No comments: