Monday, October 8, 2012

பேசும் போது ஜாக்கிரதை ..எச்சரிக்கை பதிவு


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை 50 காசு இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் 50 காசுகளை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்? என்கிறீர்களா?

வேண்டாம்..நான் ஏதாவது சொல்லப்போக..நீங்கள் ஏதாவது புரிந்துக் கொள்ளப்போக,,,,,ம்ஹூம்..வேண்டாம்.நான் சொல்ல வருவது..என்னுடனே இருந்துவிட்டு போகட்டும்.


14 comments:

Kathiravan Rathinavel said...

நீங்க என்ன சொல்ல வர்ரிங்கனு எனக்கு தெளிவா புரிஞ்சுருச்சு

வடுவூர் குமார் said...

ஹா!ஹா!
இதுவும் கடந்து போகும் என்று விட்டு விட வேண்டியது தான்.

Rathnavel Natarajan said...

அருமை.

Anisha Yunus said...

ha ha haaa...... paavam sir... romba nontha maathiri theriyuthu :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஐயயோ ...வேணாங்க..நீங்க நினைக்கிறதை சொல்ல வரல்ல...
வருகைக்கு நன்றி Kathir Rath

T.V.ராதாகிருஷ்ணன் said...

நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..வருகைக்கு நன்றி குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

.வருகைக்கு நன்றி Rathnavel Sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

என் சோகக்கதையைக் கேட்டு சிரிப்பா அன்னு

திண்டுக்கல் தனபாலன் said...

சிலரிடம் ஜாக்கிரதையாகத் இருக்க வேண்டும்...

ஷைலஜா said...

hahhaa அந்தக்கத்திரிக்கா கூட்டு பிரம்மாதம்:)

Anonymous said...

Awesome post but Why this Kolaveri ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஷைலஜா said...
hahhaa அந்தக்கத்திரிக்கா கூட்டு பிரம்மாதம்:)//

:))
வருகைக்கு நன்றி ஷைலஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாதேவி