Thursday, November 29, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 15

-------------------------
எஸ் வி சஹஸ்ரநாமம்
--------------------------------


டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகக் குழுவையும், அதில் அற்புதமாக நடிக்கும் டி.கே.சண்முகம் நடிப்பையும், அதற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கை தட்டல்களும் கண்டு நாடகங்கள் மீது தீராத மோகம் கொண்டான் அந்தச் சிறுவன்.

பொள்ளாச்சியில் அவனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த 13 வயதே ஆன அச் சிறுவன், அருகில் உள்ள கோவைக்கும் டி.கே.எஸ்., குழுவினர் வந்துள்ள சேதி கேட்டு...அவர்களைக் காண ரயிலேறினான்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம்.நாடகக் குழுவில் ஒருவன் இருக்கிறான் என்றால், அவனுக்கு மூன்று கலைகள் தெரிந்திருக்க வேண்டும்.

உயர்வு..தாழ்வு பாராது எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும்.
ஊருக்கு ஊர் குழுவினர் மாறும்போது, அனைத்து காட்சிப் பொருள்களையும் மூட்டை..மூட்டையாய்க் கட்டிக் கொண்டு ஊருக்கு பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும்
இவ்வளவு செய்தாலும் நிரந்தர வருமானம் என எதுவும் கிடைக்காது என உணர்ந்திருக்க வேண்டும்

பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்து சேர்ந்த பையனைத் தேடி வந்த அவனது தந்தை, "உனக்கு படிப்பு வேண்டுமா? இல்லை நடிப்பா?" என வினவ..சற்றும் தயக்கம் இல்லாது பையன், "நடிப்புத்தான் வேண்டும்" என்றான்.

பையனின் உறுதியைக் கண்ட தந்தை"சரி..உன் தலையெழுத்து அப்படியெனில் அதன் படியே நடக்கட்டும்" என்று கூறி சென்றார்,

அந்தச் சிறுவனே எஸ்.வி.சஹஸ்ரநாமம் ஆவார்,கோவை சிங்கானல்லூரில் 29-11-1913ஆம் ஆண்டு பிறந்தார்.

நாடக நுணுக்கங்களை அக்குழுவில் இருந்த போது கற்றார்.தனது நாடகப் பயிற்சியின் குருநாதராக அவர் எம்.கந்தசாமி முதலியாரிடம் பயின்று மூன்றே மாதங்களில் "அபிமன்யூ சுந்தரி" என்ற நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார்.

வீரபத்திரன் என்ற நடிகரிடமிருந்து பாடல் கற்றார்.சங்கீத மேதை சம்பந்த மூர்த்தி ஆச்சாரியரிடம் ஹார்மோனியம் கற்றார்.மேடை அமைப்பில் தேர்ச்சிபெற்றவராய் இருந்தார்.

அதனாலேயே..சென்னையில் கட்டப்பட்ட "ராஜா அண்ணாமலை மன்றம்". "ராணி சீதை ஹால்", "கலைவாணர் அரங்கம்" ஆகியவை அவரது ஆலோசனையின் படியே கட்டப்பட்டன.

நாடகத்திற்காகவே வாழ்ந்தவர்களில் சஹஸ்ரநாமமும் ஒருவர் ஆவார்.பாரதியாரிடம் ஈடுபாடு கொண்ட இவர்...பாரதியின் வார்த்தைகள் இப்படி மாற்றி தன்னைப் பற்றிக் கூறினார்.

"எனக்குத் தொழில் நாடகம்.நாட்டுக்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என.

இவரது சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் நடித்து..பின் பிரபலமான நடிகர்கள் பட்டியல் நீண்டது.அதில் சிலர்...

சிவாஜி, முத்துராமன்,குலதெய்வம் ராஜகோபால்,வி.கோபால கிருஷ்ணன்,சத்தியராஜ்,பி.ஆர்.துரை,எஸ்.என்.லட்சுமி,எம்.என்.ராஜம்,பண்டரிபாய்,தேவிகா, மைனாவதி,ஜி.சகுந்தலா,ஏ.கே,வீராச்சாமி,ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், காந்திமதி...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இவரது குழுவின் நாடகங்கள் சில...

என்.வி.ராஜாமணி எழுதிய "கண்கள்", "இருளும் ஒளியும்"
தி ஜானகிராமனின், "நாலு வேலி நிலம்'
பி.எஸ்.இராமய்யாவின், "மல்லியம் மங்களம்"
குஹனின் "புகழ்வழி"
கல்கி எழுதிய , "மோகினித் தீவு"
பாரதியாரின் , "பாஞ்சாலி சபதம்"(கவிதை நாடகம்)
சேவாஜ்ஸ்டேஜ் கடைசியான நாடகம் பி.எஸ்.இராமய்யா எழுதிய "தேரோட்டி மகன்" ஆகும்.

1957ல் சேவா ஸ்டேஜ் , நாடகக் கல்வி நிலையம் என ஒன்றை நிறுவி, பாடத்திட்டங்களை வகுத்து மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வி வழங்கியது. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் இந்த நிலையத்திற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கியது

தனது சகோதரி மகன் வி.என்.ராஜாமணியின் உதவியோடு தாகூரின் கதையை "கண்கள்" என்ற தலைப்பில் நாடகமாக்கினார்
நார்வேவைச் சேர்ந்த  ,எழ்த்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு "எனிமீஸ் ஆஃப் பீப்புள்ஸ்" என்ற நாடகத்தை மக்கள் விரோதி என்ற பெயரில் நாடகமாக்கச் சொன்னார்

1974 மார்ச் மாதம் முதல் 1988 ஃபெப்ருவரி வரை ஐந்து முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.கிருஷ்ணமணி என்பவர் எழுதிய  "நந்தாவிளக்கு" என்ற நாடகத்திற்கான ஒத்திகைக்கு 21-2-88 அன்று வரச்சொல்லி நடிகர்களுக்கு செய்தி அனுப்பியவரின் உயிர் 19-2-1988 மாலை 4-30 அளவில் பிரிந்தது,

எஸ்.வி.எஸ்., அவர்களுக்கு தமிழ் நாடக வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு.

இன்று இவரது மகன் எஸ்.வி.எஸ்.குமார், தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் கலைப்பணியாற்றி வருகிறார். 

No comments: