Saturday, October 22, 2011

நில அபகரிப்பு (சிறுகதை)


(வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!)

'நாளைக்கு வாசக்கால் வைக்கறோம்..விட்டு ஓனருங்கமுறையிலே நீங்க அம்மாவையும் அழைச்சுண்டு ஒம்பது மணிக்கு வந்துடுங்க' என்றான் மேஸ்திரி கண்ணாயிரம்.
'என்ன..பர்வதம்..நாளைக்கு காலையிலே போகமுடியுமா' - ஈஸ்வரன்
'நல்லாயிருக்கு..நீங்க கேக்கறது..நம்ப எஞ்சிய காலத்தை இனிமே அங்கத்தான் கழிக்கப்போறோம்..நம்ம பிள்ளைங்க
..அப்பறம் பேரப்புள்ளைங்க எல்லாம் அங்கேதான் வாழப்போறாங்க..அதனாலே ஸாஸ்திரப்படி எல்லாம் செய்யணும்.
நாம கண்டிப்பா போகலாம்'என்றவள் ..மேஸ்திரியைப் பார்த்து'என்ன ..மேஸ்திரி நிலைப்படி வைக்கறதுக்கு முன்னாலே கீழே ஏதேதோ போடணும்னு சொல்வாங்களே..'என்றாள்.
'அந்த கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்மா...இந்த கண்ணாயிரம் எல்லாத்தையும் ஒயிங்கா செஞ்சுடுவான்.
நீங்க தங்கக்காசு இருந்தா மட்டும் ஒன்னு கொடுங்க..அட..அரை கிராம் கூட போதும்..'பர்வதம் ஈஸ்வரனின் முகத்தைப்பார்க்க..'அட..இல்லேன்னாலும் பரவாயில்லைம்மா..நானே போட்டுக்கறேன்..என் வூடு மாதிரி நினைச்சுத்தாம்மா கட்டறேன்' மேஸ்திரி கிளம்ப... ஈஸ்வரனின் முன்னால் ஒரு கொசுவத்திச் சுருள்.
**** ***** *****
கடந்த சில மாதங்களாகவே ஈஸ்வரனுக்கு..தனக்கென்று ஒரு வீடு இல்லையே..இப்போதெல்லாம் வங்கிகள் வரிந்துக்கட்டிக் கொண்டு வீடுகட்ட லோன் கொடுக்கும்போது..நாமும் நமக்கேத்தாற்போல ஒரு வீடு கட்டிக் கொண்டால் என்ன? என்ற எண்ணம் இருந்தது.
ஒரு நாள் இரவு சாப்பாடு முடிந்ததும்..அந்த புறாக்கூண்டுப் போன்ற அவர் ஃப்ளாட்டில்..சிகப்பு ரெக்சின் கிழிந்து ..ஸ்பிரிங்க் கம்பிகளும்,தேங்காய் நாரும் பிதுங்கிக்கொண்டிருந்த ஷோஃபாவில் அமர்ந்து கோலங்கள் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் தன் ஆசையைத் தெரிவித்தார்.
உள்ளே படுக்கும் அறை கம் படிக்கும் அறையில் கணினியில்.. இண்டர்னெட்டில் மேய்ந்துக் கொண்டிருந்த ஈஸ்வரனின் மகன் காதுகளில் இது விழ..அவனும் கணினியை மறந்து அப்பாவிடம் வந்தான்.
'இதோ பாருங்க..நாம ஏதோ வாடகைக் கொடுக்கிறோம்..இந்த புறாக் கூண்டு ஃப்ளாட்லேயே இருக்கோம்..
வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கோம்...வாசக்கதவைத் திறந்தா ..பக்கத்துவீட்டு ஹால் தெரியுது.
நம்ம வீட்டு பரணில் எந்த அடசலும் இல்லை...பக்கத்துவீட்டுக்காரன் அடசலை வைச்சிருக்கான்.அங்கிருந்து தினமும் எலிகள் வந்து வாக் பண்ணிட்டு போறது நம்ம் வீட்டில...வாசல்ல ஒரு பண்டிகை நாள்லயோ..விசேஷத்திற்கோ ஒரு கோலம் கூட போட முடியவில்லை...கொஞ்சம் பெரிய கோலம்னா அடுத்தவீட்டுக்காரன் வாசல் வந்துடுது.
அதனால நமக்குனு வாங்கறது கண்டிப்பா தனி வீடாத்தான் இருக்கணும்.இது போல ஃப்ளாட் எல்லாம் வேண்டாம்'என்றாள் பர்வதம்.
ஆமாம் ப்பா ஒரு தனி வீடு தான் வேண்டும்..எனக்குனு தனி படிக்கிற ரூம்..அதிலேயே கம்பூட்டர் வைச்சுப்பேன்..ஒரு கட்டில் வாங்கி போட்டுடுட்டா.. அங்கயே படித்துவிட்டு படுத்துப்பேன் ' என்றான் மகன் பரமசிவம்.
ஹாஸ்டலில் இருக்கிற பசங்க ரூம்க்கு அடிககடி போய்ட்டு வர்ரான் போலிருக்கு.தனக்கும் ஹோட்டல் ரூம் போல கேட்கிறான்..என்று ஈஸ்வரன் நினைத்தார்.ஆனாலும் கிண்டலாக,"தனி வீடுன்னா அட்டாச்டு பாத்ரூம் இருக்காதே"என்றார் மகனிடம்.
"தனிவீட்டிலேயும் ..இதுபோல வைச்சுக்கலாம்பா..நீங்க இன்னும் கிராமத்துபக்கம் இருக்காப்போல அரைக்கிலோ
மீட்டர் தள்ளிதான் கக்கூஸ் இருக்கணும் என்று நினைக்கிறதே தப்பு." என்றான் மகன்.
"பர்வதம் நீயும் பரமசிவமும் சொல்றதுவாஸ்தவம் தான். ஆனா இன்னிக்கி இருக்கிற விலைவாசிக்கு தனி வீடுங்கிறது நமக்கு குதிரைக்கொம்பு...அதனால இதோட கொஞ்சம் வசதி அதிகமாக இருக்கிற ஃப்ளாட்டைப்ப்பார்க்கலாம்."
முடியாதுன்னா முடியாது..வேணும்னா நாங்க இந்த ஃப்ளாட்டிலே இருந்திடறோம்"என்று அவள்"என்னடா சொல்ற பரமசிவம்" என மகனை துணைக்கு இழுத்துக்கொண்டாள்.
"ஆமாம்மா.நீ சொல்வது சரி தான் " என்றான் மகன்.
ஈஸ்வரனுக்கு கோபம் வர "இனி இந்த டாபிக்கே வேண்டாம்" என்று கூறிவிட்டு டிவீயை பார்க்கலானார்.
டீவியிலும் அந்த சீரியலின் கதாநாயகி குற்றால அ ருவி போல் கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் பர்வதம் தன் மௌன விரதத்தை ஆரம்பித்தாள்.அந்தந்த நேரத்துக்கு காபி,டிபன் என மௌனமாகவே
வந்துக்கொண்டிருந்தது.
ஓரிரு நாள் கழிந்தது.பர்வதம் தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளவில்லை.
இந்த விஷயத்தை மெதுவாக..அவர் தன் அலுவலக நண்பனிடம் சொல்ல அவன்'ஈஸ்வரன்..உங்க மனைவி சொல்றது..உண்மைதானே!நாந்தான் மூளை இல்லாமல் ஒரு ஃப்ளாட்டை வாங்கிட்டு திண்டாடிக்கிட்டு இருக்கேன்.பக்கத்து வீட்ல ஒருத்தன் குளிச்சா அந்த தண்ணீ சத்தம் எங்க ஃப்ளாட் ல கேட்குது.அவ்வளவு ஏன் யாராவது நண்பர்கள் வீட்டுக்கு வந்தாக்கூட அவங்க முன்னாலே வீட்ல டாய்லட் யூஸ் பண்றதுக்குக் கூட கூச்சமா இருக்கு.'என்றான்.
தனி வீடு கட்டணும்னா இப்ப முடியுமா?'
'ஏன் முடியாது..சிடியிலே நரக வாழ்க்கைத்தான்.சிடியை விட்டு சற்று தள்ளிப்போனால் கிரவுண்ட் 2லட்சத்திலே வாங்கிடலாம்"
ஈஸ்வரன் மனம் கணக்குப் போட்டது.கையில் உள்ள சேமிப்பு..பர்வதத்தின் நகைகள் எல்லாம் சேர்த்தால் 2லட்சம் தேறும்..என்று தோன்றியது.நண்பனின் குரல்..அவரை தன்னிலைக்கு கொண்டு வந்தது.
'என்ன சொல்லுங்க..எனக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தரகன் ஒருவன் இருக்கிறான்.சொல்லிவிடட்டுமா"
சரி என தலை ஆட்டினார்.ஈஸ்வரன்.
அடுத்த நாள் முதல் .. 'தரகர் வரேன்னு சொல்லியிருக்கார்..கிளம்புங்கன்னு விடுமுறை நாட்களில் இடங்களை பார்க்க ஆரம்பித்தனர் ஈஸ்வரன் குடும்பத்தினர்.
அன்றும்..அப்படித்தான்..ஒரு புது தரகர் வந்தார்.
நெற்றியில் சந்தனம்..அதன் கீழே குங்குமப்பொட்டு..சற்று சின்னாதான பிடித்தத்துடன் ஒரு சட்டை போட்டிருந்தார்.லுங்கி கட்டி இருந்தார்.சட்டை சிறியதாக இருந்ததால்..அவரின் மேடிட்ட வயிறு தெரிந்தது.ஈஸ்வரனுக்கு அவரைப் பார்த்ததும்..ஏனோ..கூவாகம் நினைவு வந்தது.
தரகர் சைக்கிளில் செல்ல..இவர்கள் ஆட்டோவில் பின் தொடர்ந்தனர்.
'இதோ பாருப்பா..பார்க்கிற இடத்திலே..கோவில்,பள்ளிக்கூடம்..பேங்க்,சூப்பர் மார்க்கெட்,மாவுமில்ல் எல்லாம் இருக்கணும்'என்றாள் பர்வதம்.
தரகர் இதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
அன்றும் அவர் காட்டிய இடம் திருப்தி இல்லை.
அடுத்த வாரம்..ஒரு கிராமம் போன்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்.அந்த இடத்தைப் பார்த்ததுமே ஈஸ்வனுக்கு பிடித்துப்போயிற்று.இவ்வளவு அழகான கிராமம்..சென்னைக்கு அருகிலா..ஈஸ்வரன் வியந்தார்.
இங்கொன்றும்..அங்கொன்றுமாக வீடுகள் அப்போதுதான் முளைத்தது போல இருந்தது.வெண்மை நிற கற்கள்
அந்தந்த மனையின் அளவிற்கேற்ப நடப்பட்டிருந்தது.சில மனைகளில் புதர்களும்..செடிகளும் மண்டிக் கிடந்தது.
இன்னும் அந்த ஏரியாவிற்கு ஆர்காட் வீராசாமி வரவில்லை...அதாங்க மின்சாரம்.
'எல்லா மனையும் வித்துப்போச்சு..இன்னும் அஞ்சு வருஷத்திலே இந்த இடம் இன்னொரு தி.நகராய் ஆகிடும்'என்ற தரகர் ஒரு வெற்றிடத்தைக்காட்டி'அங்கே பஸ் ஸ்டாண்ட் வருது..பக்கத்திலே சூப்பர் மார்க்கட் சாங்க்ஷன் ஆகிடுச்சு'என்று சொன்னவாறு'ஒரு வேப்பமர நிழலை ஒட்டியவாறு இருந்த மனையைக்காட்டி'இதுதான் உங்களுடையது'என்றார்.
அவர்களுக்கு அந்த இடம் பிடித்ததா ..இல்லையா ..என்பதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல்..அவர்.. அந்த இடத்தை பத்திரம் போட்டு அவர்கள் பெயரில் பதிவு செய்திடுவார் போல இருந்தது.
ஈஸ்வரனுக்கு அந்த இடம் பிடித்திருந்ததோ..இல்லையோ..அந்த வேப்ப மரம் பிடித்திருந்தது.அதை அடுத்து சற்று தள்ளி இருந்த அரசமரம் பிடித்திருந்தது.வேப்பமரத்தில் ஓடி..பிடித்து விளையாடும் அணில்களைப் பிடித்திருந்தது.பின்னங்கால்களை ஊன்றிக்கொண்டு வேப்பம் பழத்தை கொறித்துக்கொண்டிருந்த அணில்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.மரத்தில் அமர்ந்துக்கொண்டு விசிலடித்த பறவைகளைப் பிடித்திருந்தது.மரத்தில் இருந்த பறவைகளீன் கூடுகளைப் பிடித்திருந்தது.சென்னை நகரிலிருந்து வெளியேறியிருந்த குருவிகளைப் பார்க்க முடிந்தது.
அவருக்கு..மனசுக்குள் மழை பெய்தது.திடீரென வெண்மேகங்கள் சூரியனை மறைத்தன.யானை போல தோற்றம் அளித்த மேகம் ஒன்று கிழக்கு நோக்கி நகர்ந்தது.தீடீரென அது உரு மாற்றம் அடைந்து சிறு சிறு மேகங்களாக மாறின.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்..மயில் குயில் ஆனதடி என்ற திருப்பாவை ஈஸ்வரனுக்கு ஞாபகம் வந்தது.இயற்கையை ரசிக்க வேண்டுமென்றால்..அதற்கென்று தனி உணர்வு வேண்டும்.இயற்கையின் படைப்புகளை மனிதர்கள் எவ்வளவு தூரம் தன் சுயநலத்திற்கு அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தன் தோள்களை யாரோ உலுக்குவதை உணர்ந்தவர்...தன் நிலைக்கு வந்தார்.'என்னங்க இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.இதையே வாங்கிடலாம்'என்றாள் பர்வதம்.
அதற்குள்..தரகர்..ஓடிப்போய்..அங்கு கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டுக் கிணற்றிலிருந்து ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
'தண்ணீ குடிச்சுப் பாருங்க..கல்கண்டு போல இருக்கும்.பத்து அடியிலேயே தண்ணிர் இருக்கு..'என சொம்பை பர்வதத்திடம் கொடுத்தார்.அவள் தண்ணீரைக் குடித்துப்பார்த்துவிட்டு..'ரொம்ப நல்லாயிருக்கு..'என சொம்பை ஈஸ்வரனிடம் கொடுத்தாள்.சுவையாகவே இருந்தது.அதற்குள் அவரது மகன் தெரு நாய் இரண்டுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.அவை அவனிடம் வாலாட்டிக்கொண்டிருந்தன.
இந்த இடம் இவர்களுக்கு பிடித்துப் போயிற்று என உணர்ந்துக்கொண்டார் தரகர்.
'என்னங்க முடிச்ச்டலாமா?சென்னை முழுக்க தேடினாலும் இப்படி ஒரு இடம் கிடைக்காது...'என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
மரத்தில் ஏதோ பறவை கிக்கி..கிக்கி என கூவிக்கொண்டிருந்தது.மரங்கொத்தியாய் இருக்குமோ..இல்லை குயிலாகத்தான் இருக்கக்கூடும்..ஈஸ்வரனுக்கு சரியாகத்தெரியவில்லை.ஆனால் அதன் கிக்கி..கிக்கி..ஓசை..இந்த இடத்தை முடித்து விடு..இந்த இடத்தை முடித்துவிடு..என அவர் காதில் ஒலித்தது.
அந்த இடம்..சுவையான நீர்,காற்று வசதி,அப்புறம்..அந்த அரச மரம்,வேப்பமரம்..அதில் வாழும் பறவைகள்..அவற்றின் சுதந்திரத்தன்மை..இங்கும் அங்கும் அவை பறக்கும் போது ஏற்பட்ட இறக்கைகளின் சப்தம்..குக்கூ என கூவும் ஓசை...அந்த இடம் அடுத்த சில தினங்களில் அவருக்கு சொந்தமானது.வீடுகட்டும் வேலை தொடங்கியது.தாராளமாக வங்கியில் கடன் கிடைத்தது.திருப்பிச் செலுத்துவது பற்றி வாங்கும்போது யாருக்கு கவலை இருக்கிறது.
*** **** ****
வீடு பாதி வேலை முடிந்ததும் ...சம்பிரதாயப்படி கிரகப்பிரவேசம் செய்துவிட்டார் ஈஸ்வரன்.கிரகப்பிரவேசத்தன்று விருந்து நண்பர்களுக்கு மட்டுமல்ல ...பறவைகளுக்கும் கூடத்தான்....அவை பயந்து பய்ந்து இலை அருகே வந்து
கொத்தி எடுத்துக்கொண்டு போய் சாப்பிட்டன.
ஒருவருடம் முடிந்துவிட்டது.வீடு முழுமை பெற்று சாவி அவரிடம் தரப்பட்டது.
ஈஸ்வரன் தன் குடும்பத்தினருடன் அந்த புது வீட்டுக்கு குடித்தனம் போக தீர்மானித்தார்.லாரியை வரவழைத்து சாமான்களை எடுத்துப்போக ஏற்பாடு செய்தார்.
அவரும் மனைவியும்,மகனும் முன்னதாக ஆட்டோவில் ஏறினர்.
வேப்பமரத்தை அடையாளம் வைத்து வீட்டை தேடியவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.அது வெட்டப்பட்டு இருந்த இடம் தெரியவில்லை.சற்று தள்ளி இருந்த அரசமரமும் வெட்டப்பட்டு அதில் வேறொருவர் வீடு கட்டிக்கொண்டிருந்தார்.
ஈஸ்வரனுக்கு திடீரென்று ஒரு குற்ற உணர்ச்சி..
அந்த அணில்களெல்லாம் இப்ப எங்கே போயிற்று?
அந்த மரத்தில் கூடு கட்டி வாழ்ந்துகொண்டிருந்த பலதரப்பட்ட பறவைகள் இப்போது எங்கே குடி போயிருக்கும்.
அந்த சின்னஞ்சிறு குக்கூ குருவிகள் எங்கே..அவற்றின் கதி என்ன?
அவ்வளவு பறவைகளின் கூடுகளையும் அழித்துவிட்டு நாம் வாழ நமக்கு ஒரு கூடா? அவற்றை கலைக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
நாம் பேசத்தெரிந்தவர்கள் என்பதற்காக...பேசத்தெரியாத அந்த வாயில்லாத ஜீவன்களை விரட்டிவிட்டு......
ஈஸ்வரனுக்கு கண்களில் கண்ணீர் கொப்பளித்தது..
சொந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியால் வந்த ஆனந்தக் கண்ணீர் அல்ல அது.

12 comments:

SURYAJEEVA said...

அருமையான நடை, சில இடங்களில் லாஜிக் இடிக்கிறது.. இருந்தாலும் ரசிக்க முடிந்தது

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

Karthikeyan Rajendran said...

நீங்கள் கதை சொன்ன விதம் அருமை மேலும் தொடரட்டும் . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்பார்க் கார்த்தி

ஷைலஜா said...

வெற்றிக்கு வாழ்த்துகள் ராதாக்ருஷ்ணன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஷைலஜா

ஹேமா said...

இயற்கையை அழித்துவிட்டு நாம் வாழ நினைக்கிறோம்.கதையின் கரு அருமை.வெற்றிக்கு வாழ்த்துகள் ஐயா !

goma said...

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா