
நாம் ஒரு போட்டியில் கலந்துக் கொள்கிறோம்..அதில் வெற்றிக் கனியை நம்மால் பறிக்க முடியவில்லை என்பதால்..மனம் துவண்டுவிடக் கூடாது.
ஒருவனுக்கு தோல்விகள் வரலாம்..ஆனால்..தோல்வி மனப்பான்மை வரக்கூடாது.
மின்சார பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அதை தன் முதல் முயற்சியிலேயே கண்டுபிடிக்கவில்லை.அவர் இரவு, பகல் பாராது..மெய் வருத்தம் பாராது,பசி பற்றி கலைப்படாது,தூங்காது,காலம் பற்றி கவலைப்படாது கருமமே கண்ணாக ஆராய்ச்சி செய்தார்.கடைசியில் பல்பை வடிவமைத்துவிட்டு..ஆய்வு செய்யும் போது அது வேலை செய்யவில்லையாம்.
இத்தனை காலம் தன் உழைப்பு வீணாகி விட்டதே என அவர் கவலைப் படவில்லையாம்.மாறாக அதை ஒளிர வைக்க மேலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
கிட்டத்தட்ட ஆயிரம் முறைகளுக்கு மேல் முயன்ற பின் பல்பை எரிய வைத்தார்.
அப்போது அவரிடம் ஒருவர் கேட்டாராம்..'இத்தனை முறை தோல்வியடைந்த பிறகும், எப்படி விரக்தி அடையாமல் இருந்தீர்கள்?' என்று.அதற்கு எடிசன் சொன்னாராம்,'எனக்கு அவை தோல்வியில்லை.அந்த பரிசோதனைகள்..மின்சார பல்பை எப்படியெல்லாம் தயாரிக்கக் கூடாது..என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது' என்றாராம்.
தோல்விகள் ஒருவனுக்கு பின்னடைவு அல்ல..படிப்பினை..
தோல்விகள் வெற்றியை அடையச் செய்யும் படிக்கட்டுகள்.
அதற்கு உதாரணம் ஆபிரஹாம் லிங்கன்..
அவருக்கு 21 வயதில் வியாபாரத்தில் தோல்வி..22 வயதில் மாநில தேர்தலில் தோல்வி.26 வயதில் நரம்பு தளர்ச்சி நோய் 28 வயதில் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி..33 வயதில் மக்களவை தேர்தலில் தோல்வி..46 வயதில் உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி..48 வயதில் செனட் தேர்தலில் தோல்வி..50 வயதில் அமெரிக்க அதிபராக வெற்றி..
எந்த நிலையிலும் உற்சாகத்தை இழக்காமல் முயன்றால்..வெற்றிக்கனி நம் மடியில் தானாக விழும்.