Saturday, November 28, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 9

ராமனுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது..அயோத்தியில் அரசகுரு வசிஷ்டர் ராமனுக்கு மணிமுடி சூட்டுகிறார்.இது எல்லா ராமாயணத்திலும் பொதுக் கருத்து.இதற்குமேல் கம்பனின் கற்பனையைப் பாருங்கள்.

வசிஷ்டரோ..அரச வம்சத்தினரின் குரு..எனினும் அரச மணிமகுடத்தைத் தானே எடுத்துச் சூட்டும் உரிமை அவருக்கில்லை.உயர்ந்தோர் எடுத்துக் கொடுக்க அதனை வாங்கிச் சூட்டும் உரிமையே அம்முனிவனுக்குரியது.

மணிமகுடத்தை எடுத்துக் கொடுக்கும் தகுதி வாய்ந்த உயர்ந்தோர் யார்? உலகம் என்னும் அழகிய தேர் இனிது இயங்க உதவும் அச்சாணி போன்றோரே வேளாளர் என்று அழைக்கப்பட்ட விவசாயிகள் .அவர்கள் வாழ்வு உயர்ந்தால் தான் அரசு உயரும்.

போர்க்களத்தில் கூட அஞ்சாது நின்று எதிர்த்துப் பகைவரை புறங்கண்டு துரத்தும் பகை வீரர் வெற்றியும்..விவசாயிகள் கலப்பை ஊன்றி உழுது விளையும் நெல்லின் பயனே ஆகும்.இதையே சங்கப்புலவர் வெள்ளைக்குடி நாகனார்..புறநானூறில் கூறுகிறார்.

வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தருஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

இதையே கவிஞர் மருதகாசி

மண்ணிலே முத்தெடுத்து வழங்கும் குணமுடையோன் விவசாயி ...என்கிறார்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

என்கிறார் திருவள்ளுவர்.

வள்ளுவனைப் பின்பற்றி எழுபது பாடல்களில் அவ் ஏரைப் புகழ்ந்து ஏரெழுபது பாடியவர் கம்பர்...விவசாயியே உயர்ந்தவர் என்று உறுதிக் கொண்டவர் ஆனார்.

அதனால் மணிமகுடத்தை எடுத்து வசிஷ்டர் கையில் கொடுக்க ..விவசாயிகளின் தலைவராய்த் திகழும் சடையப்ப வள்ளலின் மரபினரே தகுதியானவர் என எண்ணுகிறார்.

சடையப்ப வள்ளலின் முன்னோர் மகுடத்தை எடுத்து வாழ்த்தி..வசிஷ்டர் கையில் கொடுக்க..அவர் அதனை ராமனுக்கு சூட்டினார் என்கிறார் கம்பர்.

வள்ளுவனும், ஔவையும்,கம்பரும் போற்றிப் புகழும் விவசாயிகள் அனைவரும் போற்றிப் புகழ வேண்டுகிறார் அருணாசலக் கவிராயர் தன் ராம நாடகத்தில்.

மீட்சிசெய்த சீதாச மேதன் ஆகவேஓங்கி
வீறும்சிங் காசனம்மேல் மேவிக் கருணைதேங்கி
மாட்சிபெறுஞ் சடையன் மரபோர் கொடுக்கவாங்கி
மணிமகு டத்தைஞான வதிட்டர் தரிக்கத்தாங்கி
காட்சியு டனேராமன் தாழ்ச்சியில் லாமல்அர
சாட்சிசெய் திருந்தானே
_ராமநாடகம்

கம்பர் முடிசூட்டுவிழாவை எப்படிச் சொல்கிறார்...

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப்
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன்றங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி

8 comments:

vasu balaji said...

எல்லாவற்றையும் தொகுத்து நீங்கள் சொன்ன விதம் அருமை.

மங்களூர் சிவா said...

என்ன செய்ய விவசாயிகளோட அருமை நம்ம அரசியல்வாதிங்களுக்கு தெரியலயே. எல்லா நிலத்தையும் ப்ளாட் போட்டுல்ல வித்துகிட்டிருக்காங்க :((

பதிவு அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

பித்தனின் வாக்கு said...

தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

அருமையான வர்ணனை. நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..விருதிற்கும் நன்றி
பித்தனின் வாக்கு

S.A. நவாஸுதீன் said...

இன்றைய வலைச்சரம் பகுதியில் பார்த்துவிட்டு வந்தேன் சார், இனியும் வருவேன் என்பதை தெரிவிப்பதற்காக.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி S.A. நவாஸுதீன்