Saturday, April 16, 2011

ஐ.நா.நிபுணர் குழுவின் நீதியற்றப் பரிந்துரை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணையை சர்வதேச சட்டங்களின்படி சிறிலங்க அரசே நடத்த வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா.பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவுடன் சிறிலங்க அரசு நடத்திய அந்த இனப் படுகொலைப் போரில் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போயுள்ளனர் என்ற தெளிவான விவரம் சிறிலங்க அரசு அமைத்த ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையம்’ முன்பு நேர் நின்ற மன்னார் பேராயர் ஜோசஃப் ராயப்பு தாக்கல் செய்த பின்னரும், அதற்கு இதுநாள்வரை உரிய பதிலை சிறிலங்க அரசால் தர முடியவில்லை என்ற உண்மையை அறிந்த பின்னரும், விசாரணைப் பொறுப்பை இனப் படுகொலை குற்றச்சாற்றிற்கு ஆளாகியுள்ள அந்நாட்டு அரசிடமே ஒப்படைப்பது என்பது கொலைகாரனிடம், புலனாய்வுப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஒப்பானதாகும்.

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14,15,16ஆம் தேதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்ட அனைத்தும் - அதாவது சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது, வன்னி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது ஆகியன - உண்மையே என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ள நிபுணர் குழு, அந்தக் குற்றங்களை இழைத்தவர்களைக் கண்டறிந்து, அக்குற்றத்திற்கு பொறுப்பாக்கும் முக்கிய நீதிப் பணியை சிறிலங்க அரசிடம் வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.

2008 செப்டம்பர் முதல் 2009 மே 18ஆம் தேதி வரை நடந்த போரில் அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும், அதற்குக் காரணம், மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வரமாறு அழைத்து, அவர்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதே என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்துள்ள ஐ.நா.நிபுணர் குழு, அதற்கான உத்தரவைப் பிறப்பித்த - அதாவது மனித உயிர்களைப் பற்றிய கவலையை விடுங்கள், வெற்றி என்பது மட்டுமே இந்தப் போரின் இறுதி இலக்கு என்று கூறி, இராணுவத்திற்கு ‘முழுச் சுதந்திரம்’ அளித்த சிறிலங்க அதிபரிடமே, அந்தப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை தரலாமா?

மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள், உணவுக்காக நின்றவர்கள் மீது குண்டு வீச்சு, மருத்துவனைகள் இருப்பதை அறிந்தும் திட்டமிட்ட தொடர் குண்டு வீச்சு, போர் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்குத் தேவையான உணவை போதுமான அளவிற்கு கொடுக்காமல் அவர்களைப் பட்டினிப் போட்டுச் சாகடிக்க எண்ணிக்கையை குறைத்துக் கூறியது, அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களைக் கூட தராமல் மறுத்தது ஆகியவற்றிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று தங்களுடைய அறிக்கையில் கூறியுள்ள ஐ.நா.நிபுணர் குழு, அந்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட சிறிலங்க அரசு தலைமையிடமே நேர்மையாக, பன்னாட்டு சட்டங்களின் படி விசாரணை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்கக் கூறுவது எப்படி நியாயமாகும்?
 
இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணம், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதே - அதிலும் குறிப்பாக தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதலே என்று தெளிவாகக் குறிப்பிடும் ஐ.நா. நிபுணர் குழு, கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு, அதனை தன் நாட்டு மக்களின் மீதே பயன்படுத்த - போரை வேகமாக முடிப்பதற்காக - உத்தரவிட்ட அரசுத் தலைமையிடம் விசாரணை பொறுப்பை ஒப்படைக்கலாமா?

இறுதிக் கட்ட போரைப் பற்றி பேசுகிறது ஐ.நா. நிபுணர் குழு. ஆனால் இறுதி கட்டப் போரைத தவிர்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சரண்டைய ஒப்புக்கொண்டு, துப்பாக்கிகளை மெளனித்தபோது, அவர்களின் சரணை ஏற்காமல், வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டது மட்டுமின்றி, முள்ளிவாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று குற்றுயிராகக் கிடந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் கொன்றொழிக்க உத்தரவிட்ட கோத்தபய ராஜபக்சவின் அண்ணனிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைக்கச் சொல்வது நியாயத்தை வெளிக்கொணரவே அல்லது புதைத்திடவா? இந்த விடயத்தை தனது அறிக்கையில் குறிப்பிடாமலேயே தவிர்த்துள்ளது ஐ.நா.நிபுணர் குழு!

எந்த ஒரு அரசிற்கு எதிராக போர்க் குற்றங்கள் சுமத்தப்படுகிறதோ அந்த அரசிடமே விசாரணைப் பொறுப்பை ஒப்படைக்கும் முறை எப்போதாவது நடந்துள்ளதா? கொசோவோவில் நடந்த படுகொலை விசாரணையை நடத்தியது யார்? பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் விமானங்களில் இருந்து குண்டு மழை பொழிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதே, அப்போது விசாரணைப் பொறுப்பை ஏன் இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை? இஸ்ரேலை விட ஒரு வல்லரசா சிறிலங்கா? ஐ.நா.வின் போக்கு ஏன் பலவீனமாக இருக்கிறது?

இது நேர்மையல்ல, நியாயமுமல்ல. இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, அதற்கு பயங்கரவாத முத்திரை இடப்பட்டது என்பது நிரந்தர மக்கள் தீர்ப்பாய விசாரணையில் வெளிவந்த உண்மை. ஆனால் அதைப் பற்றி ஐ.நா. நிபுணர் குழு மூச்சுவிடவில்லை. தமிழர்கள் நாதியற்றவர்கள், அவர்களுக்கென்று பேச ஒரு நாடும் இல்லை என்பதால் ஐ.நா.அநீதியைத் திணிக்கிறதா?

ஐ.நா. நிபுணர் குழு அளித்த பரிந்துரை ஐயத்திற்குரியதாகவுள்ளது. நியாயமுடைய, பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படை புரிந்த ஒரு குழு இப்படிப்பட்ட பரிந்துரையைச் செய்திருக்க நியாயமில்லை. ‘இப்படி ஒரு அறிக்கையை தாருங்கள்’ என்று சொல்லி வாங்கியதுபோல்தான் ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை உள்ளது. இது ஐ.நா.வின் மனித உரிமை பிரகடணங்கள் அனைத்திற்கு எதிரானது.
(நன்றி வெப்துனியா)


2 comments:

Unknown said...

tamilars worship god. binladen is most powerful man, who strongly believe god. he knows what the american government did to spoil other governments. we know he supports for islamic countries, the tamil text books teaches binladen is international terrorist, but real is america is the big terrorist. to reduce the the american terror binladen helps. when the people knows it and support laden then we expect justice from united nations organisation.

ஹேமா said...

எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உறுதிப்படுத்திய பிறகும் உலகநாடுகள் இப்படிச் செய்கிறது என்றால் ஒட்டுமொத்த உலகமும் ஈழத்தமிழரை அழிக்கவென்றே ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான்.இன்னும் பார்ப்போம் !