இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.
அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.
இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.
இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!
8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.
ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?
ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?
இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.
பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.
நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்.