Tuesday, February 28, 2012

கூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: பிரேமலதா தகவல்



சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, தங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட 3 பேர் காலில் விழாத குறையாக கெஞ்சியதாகக் கூறியுள்ளதோடு, அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனியும் விஜய்காந்தை அதிமுக சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜயகாந்த், இனி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த 'ராமு வசந்தன் இறந்ததும் அந்தப் பதவிக்காக, பல முக்கிய தலைகளும் போட்டியிட, இதை வைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக முயன்றதாகவும், இதனால் தான் அந்தப் பதவியை தானே வைத்துக் கொண்டார் விஜய்காந்த் என்கிறார்கள்.

கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் தன்னந்தனியாகத் தைரியத்தோடு போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், 5 இடைத் தேர்தல்களில் போட்டி போடாமலேயே ஓடி ஒளிந்தவர்கள், பென்னாகரத்தில் டெபாசிட்டைப் பறி கொடுத்தவர்கள் எல்லாம் திராணி பற்றிப் பேசுகிறார்கள்.

அதிமுகவோடு கேப்டன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அந்த அம்மா ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தே.மு.தி.கவோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறார் ஜெயலலிதா. நம்மோடு கூட்டணி சேர அவர்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் என்று சொன்னால், அவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கும். இப்போது, அமைச்சர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அப்போது கேப்டனை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள்.

அவர்கள் என்னென்ன பேசினார்கள். நம்மோடு கூட்டணி வைக்க எப்படி எல்லாம் அலைந்தார்கள், காலில் விழாத குறையாக எப்படிக் கெஞ்சினார்கள் என்பதை எல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதைக் கேட்கும் தைரியம் அந்தம்மாவுக்கு உண்டா?. இனியும் எங்களை சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்


No comments: